நீல நிறமுடைய வாழை


நீல நிறமுடைய வாழை
x
தினத்தந்தி 7 Aug 2023 5:54 PM IST (Updated: 7 Aug 2023 5:57 PM IST)
t-max-icont-min-icon

நீல நிறமுடைய வாழை பழம் `நீல ஜாவா வாழைப்பழம்' என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும்.

நாம் மஞ்சள் மற்றும் பச்சை நிறமுடைய வாழைப்பழங்களை பார்த்திருப்போம். ஆனால் நீல நிற வாழைப்பழங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், சமீபத்தில் இணையத்தில் இதன் படங்கள் வெளியாகி, பலருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தோல் மட்டுமல்லாமல், பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் வியப்பு. இந்தப் பழம் `நீல ஜாவா வாழைப்பழம்' என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்கிரீம் வாழை, ஹவாய்யான் வாழை, நெய் மன்னன், ஊதா வாழை போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இந்த வாழை மரம்குளிர்ச்சியை தாங்கி வளரும் வல்லமை கொண்டது. நீல ஜாவா வாழை மரங்கள் 4.5 முதல் 6 மீட்டர் வரை வளரக்கூடியவையாகும். மரம் வளர்வதற்கு 40 பாரன்ஹீட் வெப்பநிலை தேவைப்படுகிறது. வலுவான தண்டு மற்றும் வேர் அமைப்புகளை பெற்றுள்ளதால் அதீத காற்றை தாங்கும் வல்லமை இந்த மரத்திற்கு உண்டு. இந்த வாழைப்பழங்கள் தென் கிழக்கு ஆசியாவிலும், ஹவாயிலும் வளர்க்கப்படுகிறது.

இந்த மரத்தின் தார்கள் ஏழு முதல் ஒன்பது சீப்புகளை கொண்டுள்ளது. இதன் சுவை நாம் எப்போதும் சாப்பிடும் வாழைப் பழத்தைப் போல இல்லாமல், வெண்ணிலா ஐஸ்கிரீம் சுவை போல இருக்குமாம். பிஜியில் இதனை `ஹவாய் வாழைப்பழம்' என்றும், பிலிப்பைன்ஸில் `க்ரீ' என்றும், மத்திய அமெரிக்காவில் `செனிசோ' என்றும் அழைக்கிறார்கள். இந்த பழங்கள் `மூசா பால்பிசியானா' மற்றும் `மூசா அக்யூமினாட்டா' ஆகிய இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும். மற்ற பழங்களை போலவே இதில் நார்சத்து, வைட்டமின் `பி' மற்றும் `பி6', மாங்கனிசு ஆகிய சத்துக்கள் உள்ளன.


Next Story