இரையை சாப்பிட கருவிகளை பயன்படுத்தும் மஞ்சள் முக கழுகு


இரையை சாப்பிட கருவிகளை பயன்படுத்தும் மஞ்சள் முக கழுகு
x

கழுகுகளில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. அவற்றில் ‘பாறு’ வகை கழுகுகளும் ஒன்று. இவற்றிலும் சில இனப்பிரிவுகள் இருக்கின்றன. ‘பாறு’ என்பது ‘பிணந்தின்னி பறவை’ என்பதைக் குறிக்கும் சொல்லாகும். இந்த பாறு வகை கழுகுகளில் ‘மஞ்சள் பாறு’ குறிப்பிடத்தக்கது.

இதனை ஆங்கிலத்தில், 'Egyptian vulture' (எகிப்திய பிணந்தின்னி கழுகு) என்பார்கள். மேலும் கிராமப்புற மக்களால் இவை 'பாப்பாத்திக் கழுகு' என்றும், திருக்கழுக்குன்ற கழுகு, வெள்ளைக் கழுகு, மஞ்சள் திருடிப் பாறு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. முன்காலத்தில் திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள கோவிலில், குறிப்பிட்ட நேரத்தில் 2 மஞ்சள் முக பாறு வந்து, படையலை சாப்பிட்டுச் சென்றதற்கான பதிவுகள் இருக்கின்றன. இதனால்தான் இவை 'திருக்கழுக்குன்றம் கழுகு' என்ற பெயரைப் பெற்றன.

ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பிய பகுதிகளில் இந்த வகை கழுகுகள் பரவி வாழ்கின்றன. மங்கலான வெள்ளை நிறக் கழுகு தோற்றத்தில் இருக்கும், பெரிய வகை கழுகு இதுவாகும். இறக்கையின் பெரிய இறகுகள் கருப்பாகவும், தலை மற்றும் மூக்குப் பகுதி மஞ்சள் நிறமாகவும் காணப்படும்.

இந்த மஞ்சள் முக பாறு பறவைக்கு, பறக்கத் தொடங்கும் போது இறக்கைகளை அடிப்பதில் சிரமம் இருக்கும். அதனால்தான் அவை உயரமான இடங்களைப் பார்த்து தங்களின் கூடுகளை அமைக்கின்றன. பொதுவாக பாறையின் விளிம்புகளில்தான் இவற்றின் கூடுகள் இருக்கும். அப்படி சரியான இடம் கிடைக்காத பட்சத்தில், அவை உயரமான மரங்களிலும் தங்களின் கூடுகளை அமைத்துக்கொள்ளும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ள ஜோடிகள், மீண்டும் மீண்டும் ஒரே மரத்தை தேர்வு செய்யும் பழக்கமும் இவற்றிடம் உண்டு.

அழுகிய நிலையில் காணப்படும் சடலங்களே இவற்றின் முக்கிய உணவாக இருக்கின்றது. அதே நேரம் பூச்சிகள், சிறிய வகை ஊர்வன, பாலூட்டிகள், ஒட்டுடலிகள், நத்தை, பிற பறவைகளின் முட்டை, பெரிய விலங்குகளின் சாணம் போன்றவற்றையும் உணவாக உட்கொள்ளும். மற்ற கழுகு இனங்கள் அனைத்தும் இரையை சாப்பிடுவதற்கு, தங்களின் அலகு மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்ட கால்களை பயன்படுத்தும். ஆனால் இந்த மஞ்சள் முக பாறு, தனது இரையை உண்பதற்கு கூழாங்கல் மற்றும் குச்சி போன்ற சிறுசிறு கருவிகளைப் பயன்படுத்துகின்றன.

1 More update

Next Story