அழியும் நிலையில் நீர்நாய்கள்
நீர்நிலைகள் மாசுபடுவதால் முதலில் பலியாகும் உயிரினங்கள் நீர்நாய்களே.
சென்னையிலுள்ள கிண்டி குழந்தைகள் பூங்காவுக்குச் சென்றவர்கள், ஒரு பெரிய குழிப் பகுதியின் நடுவிலிருக்கும் கண்ணாடித் தொட்டியின் உள்ளே நீந்துவது, சட்டென தலையைத் தூக்கி எட்டி பார்ப்பது, இரை போடப்பட்டால் துள்ளிக் குதித்து வருவது என்றிருக்கும் ஓர் உயிரினத்தைப் பார்த்திருக்கலாம். விளையாட்டுத்தனம் நிரம்பிய உயிரினங்களில் ஒன்றான நீர்நாய்தான் அது. இந்த நீர் நாய் வகை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் வாழ்பவை. ஆனால், இன்றைக்கு அவற்றின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சுற்றுச்சூழல் சீரழிவு, கடத்தலுக்காக வேட்டை, வாழிட அழிப்பு, உணவுப் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளால் அவை அழிந்து வருகின்றன. உலகம் முழுவதுமே நீர்நிலைகள் மாசுபடுவதால் முதலில் பலியாகும் உயிரினங்கள் நீர்நாய்களே. சிங்கப்பூர், கம்போடியா, பூட்டான் ஆகிய நாடுகளில் நீர்நாய்கள் அழிந்துவிட்டன. மற்ற நாடுகளிலும் அருகி வரும் உயிரினமாக உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் முக்கூர்த்தி தேசியப் பூங்காவில் தொடங்கி, பவானிசாகர் அணையை வந்தடையும் மாயாறு ஆற்றின் கரையில் நீர்நாய்கள் வசிக்கின்றன.
மாயாற்றின் கரையோர பகுதிகளில் இரண்டு வகை நீர்நாய்கள் காணப்படுகின்றன. உருவத்தில் பெரிதானவை ஆற்று நீர்நாய், சிறியவை காட்டு நீர்நாய் என்று அழைக்கப்படுகின்றன. நீர்நாய்கள் கூச்ச சுபாவம் உடையவை. மனிதர்களை கண்டாலே ஓடி ஒளிந்துகொள்ளக் கூடியவை. நேரடியாக இவற்றை பற்றிய ஆய்வு செய்வது கடினமானது என்பதால், அவை அதிகம் நடமாடும் இடங்களில் கேமராவை வைத்து பதிவுசெய்ய ஏற்பாடுகளைச் செய்யப்பட்டது. தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால், இவற்றை பிரித்து அடையாளப்படுத்துவது கடினம்.
பாலூட்டி இனத்தை சேர்ந்த நீர்நாய்கள் ஒரே நேரத்தில் 2 முதல் 6 குட்டிகள்வரை ஈனும். 16 ஆண்டுகள்வரை உயிர் வாழும். நீரிலும் நிலத்திலும் வாழும் தகவமைப்பை கொண்டவை. இறால், நண்டு, நத்தை போன்றவற்றை உட்கொள்ளும். உணவு பற்றாக்குறையும் வேட்டையாடுதலுமே நீர்நாய்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதற்கான முக்கிய காரணம். நீர்நாய்கள், நீர்நிலைகளின் முதன்மை உயிரினங்கள். அவற்றை அழிவதை காப்பதற்கு, சீரழிந்துவரும் நீர்நிலைகளை பாதுகாப்பதுதான் முதல் படி. கீரிப்பிள்ளை போலிருக்கும் இந்த நீர்நாய்களின் எதிர்காலம் தப்பிப் பிழைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.