மகளிருக்கான சமத்துவம்


மகளிருக்கான சமத்துவம்
x

சர்வதேச மகளிர் தினமானது பெண்களின் அடிப்படை உரிமைகள், அவர்களது சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலில் உலகமெங்கும் கொண்டாடப் படுகின்றது.

சர்வதேச ரீதியாக பல தினங்கள் ஒவ்வொரு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுகின்றன. இந்த தினத்தில் பெண்கள் தமக்கான புதிய பாதையில் தைரியமாக முன்னேறி செல்வது தான் இதன் நோக்கமாகும். இது ஒவ்வொரு பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை அங்கீகாரம் என்றே கூறலாம்.

இந்த சமுதாயத்தில் பல மோசமான வழக்கங்கள் இருந்து வந்துள்ளன. நிற வேறுபாடுகள், பிரதேச வாதம், இனவாதம், மதவாதம் போன்றே ஆணாதிக்க கோட்பாடுகள் போன்றவை பெண்களை அடிமைகள் போல் நடத்தி வந்தன. இதனால் பெண்கள் பல அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் இந்த சமூகத்தில் எதிர்கொண்டு வந்தார்கள். இந்த நடைமுறையானது இன்று பெருமளவு மாறியுள்ளது.

பெண்கள், 'ஆண்களுக்கு நிகரானவர்கள்'. அவர்களது சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும்படியாக இன்று சட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் இந்த சமுதாயம் சரியான பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது எனலாம்.

பெண்களுக்கு சுதந்திரமாக விரும்பிய இடத்தில் வாழவும், அவர்கள் விரும்பிய துறையை தேர்வு செய்து கல்வி கற்கவும், அத்தோடு தமக்கு விரும்பிய துறையில் வேலை செய்யவும், ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கவும், உயர்வான அங்கீகாரம் இன்று வழங்கப்பட்டு உள்ளது. ஆண்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தனை அதிகாரங்களும் இன்று பெண்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. பழமையான கோட்பாடுகள் மற்றும் சமூக வழக்கங்களை காரணமாக கொண்டு பெண்களை அடக்குமுறை செய்வது இன்று வெகுவாக குறைந்துள்ளது.

இத்தகைய முற்போக்கான சமூக நல குறிகாட்டிகள் இன்றைய சமூக மட்டங்களில் அதிகரித்து உள்ளமையால் பெண்கள் தங்கள் திறமைகளை அனைத்து துறைகளிலும் வெளிப்படுத்துகின்றனர். கல்வியில் உயர்வான இடங்களுக்கு செல்கின்றனர். விளையாட்டிலும் சாதனை படைக்கின்றனர். குடும்பங்களை தலைமை தாங்கி நடத்துகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு இன்று பல மடங்காக அதிகரித்து உள்ளது. இவ்வாறு ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமானது இன்று உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாக இருப்பினும் இன்று வரை சில நாடுகளில் சில இடங்களில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இதற்கு எதிராக பெண்கள் இன்று குரல் கொடுத்து வருகின்றனர். இவ்வாறான மகளிர் சமத்துவத்தை முழு உலகுக்கும் தெரியப்படுத்துவதாக உலக பெண் தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் வெளிப்பாடாகவே மார்ச் மாதம் 8-ந் தேதி உலகமெங்கும் மகளிர் தினமானது கொண்டாடப்படுகின்றது. இது பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஒரு முற்போக்கான சமூகம் அல்லது ஒரு நாடானது பெண்களுக்கான சிறந்த பாதுகாப்பு மற்றும் வள வாய்ப்புகளை வழங்கி அவர்களை பாதுகாக்கிறது. அந்த வகையில் உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மகளிர் உரிமைகளை அதிகம் பாதுகாத்து வருகின்றது. அதே நேரத்தில் அபிவிருத்தி அடைந்து வருகின்ற மற்றும் அடையாத நாடுகள் பெண்கள் விவகாரங்களில் சற்று ஆபத்தான குறிகாட்டிகளை கொண்டு காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெளிவுப்படுத்துகின்றன.


Next Story