இந்திய ரெயில்வே உருவான வரலாறு..!
1853-ல் இந்தியாவில் முதன்முதலாக பயணிகளை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் ஓடத் தொடங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவில்தான் இதற்கு அடித்தளம் இடப்பட்டது.
இந்த முயற்சிக்குப் பின்புலத்தில் இருக்கும் செய்திகள் சுவாரசிய மானவை. சரக்கு ரெயில் இயங்கத் தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களில் பயணிகளை ஏற்றிக் கொண்ட ரெயில் இயங்குவதாகத் திட்டமிடப்பட்டது. எல்லாம் குறித்த நாளில், குறித்த இடத்தில் கச்சிதமாக நடைபெற்றது. அதன்பின் ரெயில் பாதைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டது அரசு.
பிரிட்டிஷ் இந்தியாவில்தான் இதற்கு அடித்தளம் இடப்பட்டது. 1832-ல் இந்தியாவை ரெயில்களால் இணைக்கும் திட்டம் உருவானது. ஆனால், இந்தியா என்கிற மிகப் பரந்த நிலப் பரப்பில் ரெயில்வே பாதைகளை அமைக்க எக்கச்சக்கமாக செலவு பிடிக்குமே... என்ன செய்யலாம் என்ற யோசனை எழுந்தது.
அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலான ஹார்டிங் பிரபு தனியார் நிறுவனங்களை கொண்டு, ரெயில்வே திட்டத்தை முன்னெடுத்தார். அவர்களது முதலீட்டிற்கும், லாபத்திற்கும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆதரவாக இருக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கப்பட்டது. அதனால் அன்றைய பிரிட்டனில் உள்ள பல முதலீட்டாளர்கள் இந்திய ரெயில்வேயில் முதலீடு செய்ய முன்வந்தார்கள்.
நிதி இப்படி சுலபமாகக் கிடைக்கவே, வெகு வேகமாக ரெயில் பாதைகள் போடப்பட்டன. முதன்முதலாக ரூர்கி பகுதியிலுள்ள கட்டிடப் பொருள்களை சுமந்து செல்லும் ரெயில் ஒன்று 1851-ம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று அறிமுகமானது. மக்களுக்கு ஆர்வம் அதிகமானது.
சரக்கு ரெயில்களை தொடர்ந்து மக்கள் பயணிக்கும் ரெயில்களை இயக்க கோரிக்கை வைத்தனர். அதனால் அப்போதைய பாம்பேயில் இருந்த போரிபந்தர் என்ற இடத்திலிருந்து தானே என்ற இடத்திற்கு முதல் பயணிகள் ரெயில் சர்வீஸ் விடுவதற்குத் திட்டமிடப்பட்டது. 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று இந்த ரெயில் இயங்கத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது சரக்கு ரெயில் இயங்கத் தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களில் பயணிகள் ரெயிலை இயங்குவதாகத் திட்டமிடப்பட்டது. எல்லாம் குறித்த நாளில், குறித்த இடத்தில் கச்சிதமாக நடைபெற்றது. அதன்பின் ரெயில் பாதைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டது அரசு.
கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ரெயில்வே விரிவடைந்தது. 1880-ல் சுமார் 14,500 கி.மீ. நீளம் கொண்ட இருப்புப் பாதைகள் எழுப்பப்பட்டுவிட்டன. இவற்றில் பெரும்பாலானவை பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய மூன்று நகரங்களைச் சுற்றித்தான் இருந்தன. இவை மூன்றும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் என்பது மட்டுமல்ல, இந்த மூன்று இடங்களில் இந்தியாவின் மிகப்பெரும் துறைமுகங்கள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது பயணிகளின் நலனுக்காக இல்லாமல், சரக்குகளையும் ஏற்றிச் செல்ல எங்கு வாய்ப்பு அதிகமோ அங்குதான் இருப்புப் பாதைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன.
1895-ல் இந்தியா தானாகவே ரெயில் பெட்டிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆசியுடன் ஆட்சி புரிந்துகொண்டிருந்த பல மன்னர்களும், தங்கள் பகுதி ரெயில் பாதையால் இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். 1901-ல் ரெயில்வே போர்டு அமைக்கப்பட்டது. இதன் நிர்வாக அதிகாரம் அப்போதைய வைஸ்ராயான கர்ஸன் பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றபடி இந்த வாரியத்தில் மூன்று உறுப்பினர்கள்... தலைவர், ரெயில்வே மேனேஜர் மற்றும் முகவர்.
1907-ல் கிட்டத்தட்ட எல்லா ரெயில்வே நிறுவனங்களுமே அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அடுத்த ஆண்டே முதல் மின்சார ரெயில் ஓட்டப்பட்டது. அடுத்து வந்த முதலாம் உலகப்போரும், இரண்டாம் உலகப்போரும் ரெயில்வேயை முடக்கியது. பகாசுர அளவில் நிதி தேவைப்பட்டது. ரெயில்வே துறைக்கென்றே தனி பட்ஜெட் போட வேண்டிய கட்டாயம் உருவானது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இன்னொரு சிக்கல். போடப்பட்ட ரெயில் பாதைகளில் பெரும் பங்கு பாகிஸ்தானில் அமைந்திருந்தன. இந்திய ரெயில்வேயை சீரமைக்க வேண்டிய கட்டாயம். அப்போது 42 தனித்தனியான ரெயில்வே மண்டலங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவையெல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டன. இந்திய ரெயில்வே துறை உருவானது.