வருமான வரி தினம்
150-வது ஆண்டை குறிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு, ஜூலை 24-ந்தேதியை வருமான வரி தினமாக மத்திய அரசு அறிவித்து ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறது.
'வரி செலுத்துவதை நிறுத்தி வைப்பது, அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான விரைவான வழிகளில் ஒன்றாகும்' என்பது நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கூற்று. ஆம்...! மக்கள் செலுத்தும் வரி பணத்தில் தான் அரசின் கஜானா நிறைந்து, பொருளாதார ரீதியாக ஆட்சியை நடத்தவும், அதில் இருந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களும், உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு நாட்டின் அரசும், மக்களும் செல்வ செழிப்புடன் சிறப்பாக இருக்க வரி என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி பண்டைய காலம் தொடங்கி தற்போது வரை வரி செலுத்துவது என்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. உலகளவில் வரி செலுத்தும் முறை தொடக்கத்தில் பொருட்கள் கொடுப்பது, வேலை செய்து கழிப்பதுமாக இருந்தது மாறி தற்போது அனைவரும் மதிக்கக்கூடிய பணமாக இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை நேரடி மற்றும் மறைமுக வரி என 2 வகைகள் உள்ளன. இதில் நேரடி வரியில் வருமான வரி, பரிசு வரி, மூலதன ஆதாய வரி போன்றவை அடங்கும். மறைமுக வரியில் மதிப்பு கூட்டப்பட்ட வரி, சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரிகள் உள்ளிட்டவை அடங்கும். இதில் நேரடி வரியான வருமான வரி என்பது மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மற்றும் அதற்கும் மேற்பட்ட வகைகளில் வருமானம் வாங்குபவர்களை நிர்ணயித்து அவர்களின் வருமானத்திற்கு உண்டான உரிய வரியை விதித்து வசூலித்து வருகிறது. வருமான வரி செலுத்துவது என்பது தகுதியுடையவர்களுக்கு நாட்டிற்கு உண்டான தலையாய கடமையாகும். வருமான வரி செலுத்தவில்லை என்றால் பல்வேறு பிரச்சினைகளுடன், சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். மேலும் வருமான வரி உள்பட பல்வேறு வரிகளை சரியான முறையில், தக்க நேரத்தில் செலுத்துவதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். அந்த வகையில் தகுதி படைத்த அனைவரும் வருமான வரி செலுத்துவதை ஊக்குவிக்கவும், வருமான வரித்துறையின் சேவையை பாராட்டும் வகையிலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24-ந்தேதி(இன்று) வருமான வரி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1857-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியாவில் நடந்த முதல் சுதந்திர போரின் போது பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சர் ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1860-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதியன்று வருமான வரி செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
இந்த நாளின் 150-வது ஆண்டை குறிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு, ஜூலை 24-ந்தேதியை வருமான வரி தினமாக மத்திய அரசு அறிவித்து ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறது.