குகையாக மாறும் ராட்சத மரம்


குகையாக மாறும் ராட்சத மரம்
x

`பாபாப்’ மரங்களின் வேர்களில் இருந்து சிவப்பு சாயம் தயாரிக்கப்படுகிறது. பாபாப் மரங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியதாகும்.

25 மீட்டர் உயரம் வரை வளரும் `பாபாப்' மரங்கள், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியதாகும். இந்த மரங்கள் முதிர்ச்சியடையும் போது, இவற்றின் தண்டுகள் 10 முதல் 14 மீட்டர் சுற்றளவு வரை காணப்படுகிறது. கிளைகள் குட்டையாகவும், தடிமனாகவும், நுனியில் பல கிளைகளும், சிவப்பு-பழுப்பு நிறத்தில் மரத்தின் மேல் பகுதியும் உள்ளன. பாபாப் மரங்கள் பார்ப்பதற்கு தழைகீழான மரத்தை போல தோற்றமளிக்கும். இதற்கு காரணம் அவற்றின் கிளைகள், வேர்களை போல் காட்சியளிப்பதுதான். பண்டைய எகிப்தியர்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் ரத்தக் காயங்களுக்கு சிகிச்சையளிக்க, இதிலிருந்து கிடைக்கும் சாற்றை பயன்படுத்தினர். உணவுக்காக அதிகளவில் பாபாப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் பழங்கள், பூக்கள், இலைகள், தளிர்கள் மற்றும் மரத்தின் வேர்கள் கூட உண்ணக்கூடியவை. இவற்றில் புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகிய சத்துகள் உள்ளன. இம்மரங்கள் குறைந்த மழையைப் பெறும் பகுதிகளில் கடுமையான வறட்சியை தாங்கி வளரும். இதன் தண்டு பகுதி பெரிய பாட்டில் போல் காட்சியளிக்கிறது. தண்டு பகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்து கொள்ள முடியும். வயதான பாபாப்கள் தண்டு பகுதியின் உள்ளே குழியாக மாறி குகைகள் போல மாறிவிடுகின்றன.

இந்தக் குகைகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், தங்குவதற்கான வீடுகளாக பயன்படுகின்றன. பழங்காலத்தில் மனிதர்கள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாக்கவும், எதிரி தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் இந்த மரங்களைப் பயன்படுத்தினர். மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பாபாப் மரங்கள் உள்ளன.

ஆப்பிரிக்காவில், கூழ் போன்ற ஒரு வித பானம் இந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வேர்களில் இருந்து சிவப்பு சாயம் தயாரிக்கப்படுகிறது. மரத்தின் உள் பட்டையானது, கயிறு, ஆடை மற்றும் இசைக்கருவி தயாரிக்கப் பயன்படும் வலுவான இழையை வழங்குகிறது. மரத்தின் தண்டுகளிலிருந்து படகுகள் செதுக்கப்படுகிறது. விதையிலிருந்து வரும் பாபாப் எண்ணெய் அழகுசாதனப் பொருட்களிலும், குறிப்பாக மாய்ஸ்சுரைசர்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையின் உள்ளே 430 ஆண்டுகள் பழமையான பாபாப் மரம் ஒன்று காணப்படுகிறது.


Next Story