பட்டா மாற்றத்துக்கான நிலைகள்
சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்கு உட்பட்டதோ, அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுவாகவே வாரிசுரிமை, பாகப்பிரிவினை, உயில் ஆவணம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரங்களின்படியோ அல்லது நாம் வெளியே வாங்கி இருந்தாலோ சம்பந்தப்பட்ட சொத்துக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும். சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்கு உட்பட்டதோ, அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து, அதற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென்றால், 15 நாட்களுக்குள் செய்து விடலாம். ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றமாக (உட்பிரிவு) இருந்தால், 30 நாட்களில் பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை/கணவர் பெயர், இருப்பிட முகவரி மற்றும் பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண் / மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி / நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு எண் ஆகிய தகவல்கள் கொடுக்கப்படவேண்டும்).
மனை அங்கீகரிக்கப்பட்டதா / அங்கீகாரம் இல்லாததா என்பதை அறிவதற்காக மனைப்பிரிவு வரைபடமும் இணைக்கப்பட வேண்டும். மனுதாரருக்கு சொத்து எவ்வாறு கிடைத்தது என்ற விவரமும் கூறப்பட வேண்டும்.
சொத்து மனுதாரரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? எவ்விதம் கட்டுப்பாட்டில் உள்ளது? என்ற தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். (அதாவது, மாநகராட்சி சொத்துவரி செலுத்திய ரசீது / மின் கட்டண அட்டை / குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை / குடும்ப அட்டை / வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று).
பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தில் ஒரு பகுதியா அல்லது முழுமையானதா என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.
பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருந்தால், உட்பிரிவுக்கு கட்டணம் செலுத்திய (சலான் எண் / நாள் / தொகை / செலுத்திய வங்கி / கருவூலத்தின் பெயர்) விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்களை தெரிவித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டா கொடுக்கப்படவில்லை என்றால், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம்.