சின்ன வெங்காயம்: சுவையானது, சுவாரசியமானது..!


சின்ன வெங்காயம்: சுவையானது, சுவாரசியமானது..!
x

சமையலுக்கு பயன்படும் சின்ன வெங்காயத்தில், நிறைய சத்துக்களும் உண்டு. அதுபற்றி நிறைய சுவாரசியமான தகவல்களும் உண்டு. அதை தெரிந்து கொள்வோமா...!

* சின்ன வெங்காயத்தின் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தெற்கு ஆசியா. வெங்காயத்தின் தாவரவியல் பெயர் 'அல்லியம் சீபா' (Allium Cepa).

* ஜெர்மானியர்களின் அன்றாட சமையலில் சின்ன வெங்காயமின்றி ஏதுமில்லை என்பதால், அதை 'சமையலறை ராணி' என்று சிறப்பாகச் சொல்கிறார்கள். உலகிலேயே இதய நோய் குறைவாகத் தாக்குவது ஜெர்மானியர்களைத்தான். இதற்குக் காரணம் அவர்களது அன்றாட சமையலில் சின்ன வெங்காயத்தின் தாராளப் பயன்பாடே என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

* சிறு வெங்காயத்துண்டை காதில் வைத்துக்கொண்டால் தலைவலி குணமாகிவிடும் என்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள். இது அந்நாட்டு மருத்துவ சம்பிரதாயம். அங்கு கிராமங்களில் இச்சம்பிரதாயம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

* நாம் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வதைப் போல, நேபாள நாட்டு மக்கள் சின்ன வெங்காயத்தின் மீது ஆணை இடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சின்ன வெங்காயத்தின் மீது ஆணையிட்டு ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றாவிட்டால் வாழ்க்கையில் பெரிய துன்பம் வரும் என்று நம்புகிறார்கள். வெங்காயத்தை வழிபாட்டுப் பொருளாகப் படைத்து இறைவனை வழிபடுகிறார்கள்.

* சின்ன வெங்காயத்தில் புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், செம்பு, கந்தகம், வைட்டமின் 'பி', வைட்டமின் 'சி' முதலியன அடங்கி உள்ளன. இவற்றோடு பத்து வகையான அமினோ அமிலங்களும் உள்ளன. சத்துப்பொருட்களின் அளவில் சின்ன வெங்காயத்துக்கும், பெரிய வெங்காயத்துக்கும் இடையில் வேறுபாடுகள் மிகமிகக் குறைவே!

* எகிப்தியர்கள் வெங்காயத்தைப் புனிதமாக வழிபடுகிறார்கள். 'பெரிய முத்து' என்று சிறப்பித்துக் கூறுகிறார்கள். எகிப்து நாட்டு பழமை வாய்ந்த கல்வெட்டுகளில் வெங்காயம் தொடர்பான 250 மருத்துவக் குறிப்புகள் உள்ளன.


Next Story