மண்ணின் வகைகள்


மண்ணின் வகைகள்
x
தினத்தந்தி 13 Jun 2023 4:30 PM GMT (Updated: 13 Jun 2023 4:31 PM GMT)

மண் என்பது பல்வேறு கரிம பொருட்கள், தாதுக்கள், வாயுக்கள்,திரவங்கள் மற்றும் பல உயிரினங்களின் கலவையாகும்.

மண்ணானது தாவரங்களின் வளர்ச்சிக்கும், நீரை சுத்திகரிப்பதற்கும் மற்றும் நீரை சேமிப்பதற்கும், பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் இருக்க உதவுகிறது. மண் அதன் தன்மையை பொறுத்து அறு வகைகளாக உள்ளன.

1. வண்டல் மண்:

வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன. தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வண்டல் மண் பரவிக் காணப்படுகிறது. சோளம், கரும்பு, கம்பு, நெல், மிளகாய், கோதுமை, ராகி, வாழை, மஞ்சள் ஆகியவை இந்த மண்ணில் பயிரிடப்படுகிறது.

2. கரிசல் மண்:

பாறைகள் சிதைவடைவதால் கரிசல் மண் உருவாகிறது. இது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி அதிகம் விளைவதால் 'பருத்தி மண்' எனவும் அழைக்கப்படுகிறது. கரிசல் மண்ணில் பருத்தி, சோளம், கடலை, தினை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி நன்றாக வளரும். கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பெருமளவில் காணப்படுகிறது.

3. செம்மண்:

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. சோளம், கம்பு போன்றவைகளும், கேரட், பீட்ரூட் போன்ற கிழங்கு வகைகளும் பயிரிடப்படுகின்றன.

4. சரளை மண்:

சரளை மண்ணானது ஒரு வளமற்ற மண் என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் திருவள்ளூர், நீலகிரி, தர்மபுரி, வேலூர், சேலம், கோவை ஆகிய பகுதிகளில் காணப்படும் இந்த மண்ணில், தினை வகை, சோளம், கம்பு, பூக்கள், வேர்கடலை ஆகியவை பயிரிடப்படுகின்றன.

5. பாலை மண்:

கடற்கரை ஓரங்களில் காணப்படும் இந்த வகை மண்ணில் பயிர்கள் வளராது. வறட்சி எதிர்ப்பு மற்றும் உப்பை தாங்கும் தாவரங்கள் மட்டுமே இங்கு காணப்படுகின்றன.

6. உவர் மண்:

தமிழ்நாட்டின் வேதாரண்யம் பகுதி களில் குறிப்பிட்ட அளவில் காணப்படும் இந்த மண் வேளாண்மைக்கு முற்றிலும் தகுதியற்றது.


Next Story