தியாகி விஸ்வநாத தாஸ்


தியாகி விஸ்வநாத தாஸ்
x

நல்ல குரல் வளமும், கலை ஆர்வமும் இருந்ததால் விஸ்வநாததாஸ் நாடக கலைஞர் ஆனார். அவருடைய பாடல்கள் விடுதலை போராட்டங்களில் தொண்டர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

சிவகாசியில் 1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி சுப்பிரமணியம்-ஞானாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் தியாகி விஸ்வநாததாஸ்.

நாடக கலைஞர்

நல்ல குரல் வளமும், கலை ஆர்வமும் இருந்ததால் விஸ்வநாததாஸ் நாடக கலைஞர் ஆனார். தொடக்க காலங்களில் புராண நாடகங்களில் பக்தி பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர், தூத்துக்குடிக்கு வந்த மகாத்மா காந்தியை சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பின்னர் நாடகங்களில் தேசப்பக்தியை மக்களுக்கு ஊட்டும் வகையில் தெய்வப்பாடல்களை மாற்றி பாடினார்.

'கதர் கப்பல் தோணுது', 'கரும்பு தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம்மீது போட்டு வருது கண்ணோட்டம்', 'வெள்ளை கொக்கு பறக்குதடி பாப்பா' உள்ளிட்ட பாடல்கள் அவர் பாடிய தேச பக்தி பாடல்களில் குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடைய பாடல்கள் காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் தொண்டர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

சிறையில் அடைப்பு

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின்னர் அவர் வெகுண்டு பாடிய பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது என்ற பாடல் பலரிடமும் விடுதலை வேட்கையை தூண்டிவிட்டது. நாடக கலையை விடுதலைக்காக பயன்படுத்திய கலைஞர் என்று மற்ற கலைஞர்களாலும் தியாகி விஸ்வநாததாஸ் பெருமைபடுத்தப்பட்டார். மேலும் புராண நாடகங்களாலும் தேசபக்தியை பரப்ப முடியும் என்ற புதுவழியை நாடி மக்களை கவர்ந்தார். இதுமட்டுமின்றி தன்னுடன் நடிக்கும் அனைவரையும் நாடகத்தில் கதர் துணியை அணிய வைத்தார்.

ஒரு கட்டத்தில் நாடகங்கள் வாயிலாக விஸ்வநாததாஸ் தேச பக்தியை விதைத்து வருவதை ஆங்கிலேயர்கள் அறிந்து கொண்டார்கள். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். வெளியே வந்தும் அவர் ஓயவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மீண்டும் சிறை சென்றார்.

நினைவு இல்லம்

தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தாலும் அச்சமின்றி தொடர்ந்து மேடைகளில் தேசப்பற்றை வளர்த்து வந்தார். இந்தநிலையில்தான் 1940-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி மேடையில் முருகன் வேடம்பூண்டு நடித்துக்கொண்டு இருக்கும்போதே விஸ்வநாததாஸ் மரணம் அடைந்தார். இதனால் மயில் மீது முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பதுபோல் இவருடைய இறுதி ஊர்வலம் நடந்தது. தமிழக அரசு தியாகி விஸ்வநாததாசை போற்றும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அவருடைய இல்லத்தை தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் மற்றும் நூலகமாக மாற்றியுள்ளது. அங்கு அவரின் மார்பளவு சிலையும் உள்ளது.

நாம் சுதந்திரகாற்றை சுவாசிக்க இன்னுயிர் இழந்த எண்ணற்ற தியாகிகளில் விஸ்வநாததாஸ் மிகமுக்கியமானவர். அவரை மறவாமல் எண்ணத்தில் வைத்திருப்போம்.


Next Story