சக்கரங்களில் ஆரங்கள் சேர்த்தது எப்போது?
பண்டைய எகிப்தில் சக்கரங்கள் கொண்ட தேர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
உலகின் எங்கோ இருந்த குகை மனிதன்தான் முதன்முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். சக்கரம் கண்டறியப்படுவதற்கு முன்பு பொருட்களை உருட்டி விடுவதற்கு உருளையான மரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த உருளைகளுக்குப் பதிலாக, அச்சு இல்லாத சக்கரங்கள் வந்தன. பிறகு ஒரு அச்சில் சுழலும் சக்கரங்கள் வந்தன.
உலகின் பண்டைய நாகரிகங்களான மெசபடோமியா நாகரிகத்தில் கி.மு. 3,500-வது ஆண்டில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், சக்கரம் இயற்கையின் எந்த முன்மாதிரியையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை. சக்கரம் உருவான காலம் குறித்துத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களிடையே விவாதம் இருந்தது. அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் பல்கலைக்கழகம் மேற்கண்ட காலத்தைக் குறிப்பிட்டுள்ளது.
இன்றைக்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பழைய சக்கரங்களில் பல ஐரோப்பாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் கிடைத்துள்ளன.
கி.மு. 2000-ம் ஆண்டுவாக்கில் பண்டைய எகிப்தில் சக்கரங்கள் கொண்ட தேர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்தக் காலத்தில்தான் சக்கரங்களில் ஆரங்கள் சேர்க்கப்பட்டு, சக்கரங்களின் வலு அதிகரித்தது, எடையும் குறைந்ததாக அறியப்படுகிறது.. உலகில் இதுவரையிலான எந்திரவியல் கண்டுபிடிப்புகளில் சக்கரமே மிகப்பெரிய கண்டுபிடிப்பு.