உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்


உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்
x

நம் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் முக்கியத்துவத்தை உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் குறிக்கிறது. நமது சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

மக்களிடம் விழிப்புணர்வு

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் செயல்பாடுகளால் அந்த பகுதியில் காற்றின் தரம், நீர் நிலைகளில் ஏற்படும் அசுத்தம், நிலத்தில் சேரும் கழிவுகள் போன்ற நிகழ்வுகளே சுற்றுச்சூழல் மாசடைதல் என்கிறோம். இதுபோன்று சுற்றுசூழல் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தவே சுற்றுச்சூழல் சுகாதாரத்தின் சர்வதேச கூட்டமைப்பின் (IFEH) சார்பில் உறுப்பு நாடுகள் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-ந் தேதியை (நாளை) உலக சுற்றுச்சூழல் சுகாதார தினமாக கொண்டாடி வருகிறது.

தினத்தின் முக்கியத்துவம்

ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு தனித்துவமான கருப்பொருளை இந்த அமைப்பு உருவாக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்தாண்டுக்கான கருப்பொருள் "உலகளாவிய சுற்றுச்சூழல் பொது சுகாதாரம்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறது" என்பதாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக உலகத் தலைவர்கள் இந்த தினத்தை ஆதரித்து வருகின்றனர்.

பாதிப்புகள்

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து புவி வெப்பமயமாதல், அமில மழை பொழிதல், பருவ நிலை மாற்றமடைதல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த நிகழ்வுகளால் மனிதர்களும் பலவிதமான நோய்களுக்கு உட்பட்டு பாதிப்புகளை எதிர்கொள்ளுகின்றனர். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த நாம் அனைவரும் பொறுப்புகளை உணர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத செயல்களை செய்ய வேண்டும். இந்த நாளில் சுற்றுச்சூழல் சுகாதார தினத்தின் முக்கியத்துவம் பற்றி பேசுதல், பல்வேறு தரப்பு மக்களும் ஒன்று கூடி வெளிப்படையாக கருத்துகளை பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாதுகாப்பிற்காக வாதிடுவது போன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும். மேலும் சுத்தமான காற்று, நிலையான காலநிலை, போதுமான நீர் , கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு, நல்ல விவசாய நடைமுறைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயல்பினால் சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து பாதுகாக்கலாம்.

கடமை

"கடைசி மரத்தை வெட்டி, கடைசி மீனைக் கொன்று, கடைசி நதியில் விஷம் கலந்தால், பணத்தை சாப்பிட முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள்" - என்றார் ஜான்மே. சுற்றுச்சூழலை அழிப்பது யாருடைய உரிமையும் இல்லை. அதனை பாதுகாப்பதே அனைவரின் கடமையாகும்.


Next Story