உலகின் பிரமாண்டமான குகை


உலகின் பிரமாண்டமான குகை
x

வியட்நாமில் உள்ள லாவோஸின் எல்லைக்கு அருகில் ‘ஹேங் சன் டூங்’ என அழைக்கப்படும், உலகின் மிகப்பெரிய குகை அமைந்துள்ளது. இந்த குகையானது மத்திய வியட்நாமின் குவாக் பின் மாகாணத்தில் உள்ளது.

ஹேங் சன் டூங் என்பதற்கு, வியட்நாமிய மொழியில் 'மலைநதியின் குகை' என்று பொருள். யுனெஸ்கோ பாரம்பரிய தளமான இது 400 மில்லியன் வருடங்கள் பழமையானது என கருதப்படுகிறது. குகையின் மொத்த நீளம் 9 கிலோமீட்டர். இதற்குள் தனித் தனி குகைகள், அடர்ந்த காடு, பல நிலத்தடி ஆறுகள் உள்ளன. 1990-ல் ஹோ கான் என்பவர்தான் முதன் முதலில் இந்தக் குகையை கண்டுபிடித்தார். பின்னர் 2009-ம் ஆண்டில் பிரிட்டிஷ்-வியட்நாம் குகை பயணக் குழுவால் முறையான ஆய்வுகளுக்கு பிறகு, இது உலகின் மிகப்பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது. இந்த குகையானது மிகப் பெரிய நிலத்தடி நதியைக் கொண்டிருக்கிறது, அதன் நீளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த குகையின் தோற்றத்தை விவரிக்க வேண்டுமென்றால் 'அவதார்' படத்தில் காட்சிகள் போன்று மிக பிரமாண்டமாக இருக்கிறது. குகையின் உட்புறம் மிகப் பெரியது. அதனுள் வானளாவிய கட்டிடங்கள், ஒரு முழு நகரத்தையும் வைக்க முடியும். 'போயிங் 747' விமானம், அதன் இறக்கைகள் குகைகளின் இருபுறமும் தொடாதவாறு உள் நுழைய முடியும். அந்த அளவுக்கு இந்த குகையின் நுழைவுப் பகுதி பெரியதாக உள்ளது. மலேசியாவில் உள்ள மான் குகையை விட, 'ஹேங் சன் டூங்' ஐந்து மடங்கு பெரியது. கனழையால் ஆற்றின் நீர் மட்டம் உயரும்போது, இந்தக் குகையை நெருங்க முடியாது. இந்த குகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, பல மில்லியன் டாலர் ெசலவில் கேபிள் கார் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும் என்பதால், உள்ளூர் வாசிகளாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும் இந்த திட்டம் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது. 2013-ம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய இயற்கை குகையாக இது கின்னஸ் புத்தகத்தில் பதிவானது.


Next Story