புகழ் பெற்ற எழுத்தாளர் ஹெலன்கெல்லர்


புகழ் பெற்ற எழுத்தாளர் ஹெலன்கெல்லர்
x

தி ஸ்டோரி ஆப் மை லைப் என்ற ஹெலன்கெல்லர் படைப்பு 50-க்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் போற்றப்படுகிறது.

ஹெலன்கெல்லர் புகழ்பெற்ற எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கியவர். ஆசிரியர், அரசியல் ஆர்வலர், விரிவுரையாளர் என பல்வேறு பரிமாணங்களை கொண்ட இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.

எழுத்து ஆர்வம்

ஹெலன்கெல்லர் தனது வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்து ஆர்வம் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தது. தி ஸ்டோரி ஆப் மை லைப் என்ற அவருடைய படைப்பு ஒரு இதழில் வெளிவந்து, பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டது. மேலும் இந்த புத்தகம் மராத்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைச்சிறந்ததாக போற்றப்படுகிறது.

நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளில் இருந்து, என் மதம், ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், நம்பிக்கை கொள்வோம், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, என் ஆசிரியை, திறந்த கதவு என்பன போன்ற பல்வேறு படைப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். இவை தவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சினைகள், பெண்ணுரிமை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

சிறந்த பேச்சாளர்

அறிவாற்றலிலும், நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்கு சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவங்களையும் ஆதரித்து பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதி உள்ளார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கமற்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

ஹெலன்கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி திரட்டி, அதன் மூலம் கிடைத்த ரூ.3 கோடியை பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோருக்கென தேசிய நூலகம் ஒன்றை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல் இருப்பவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் 88 வயது வரை அயராது உழைத்தார் ஹெலன்கெல்லர்.

முன்பருவப்பள்ளி

ஹெலன்கெல்லர் 20-ம் நூற்றாண்டின் சாதனைப்பெண்ணாக அறியப்பட்டார். 2003-ம் ஆண்டு அலபாமா மாநிலம் இவரை மாநிலத்தின் சிறப்புமிக்க பெண்மணியாக அறிவித்தது. ஸ்பெயின், இஸ்ரேல், போர்ச்சுகல், பிரான்சு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தெருக்களுக்கு ஹெலனின் பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவின் மைசூரில் கே.கே. சீனிவாசன் என்பவரால் நிறுவப்பட்ட வாய் பேசாதோர் மற்றும் காது கேளாதோருக்கான முன்பருவப்பள்ளிக்கு ஹெலன்கெல்லருடைய பெயர் சூட்டப்பட்டது.

2009-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி அலபாமா மாநிலத்தில் ஹெலன்கெல்லருடைய வெண்கலச்சிலை நிறுவப்பட்டது. மேலும் ஹெலன்கெல்லர் முதன்முதலாக 7 வயதான போது ஆன் சல்லிவனுடன் தண்ணீரை தொட்டுணர்ந்து தண்ணீர் என்பதற்கான பொருளை உணர்ந்த காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரெய்லி எழுத்துகளில் உலகிலேயே எங்கும் காண முடியாத தொட முடியாத இதயத்தால் உணரப்பட்ட அழகிய பொருள் என்று பொறிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு அதுவும் குழந்தைப்பருவத்தில் சிலை வைக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.


Next Story