100 நிமிடத்தில் தயாரான, 113 சிறுதானிய உணவுகள்..!


100 நிமிடத்தில் தயாரான, 113 சிறுதானிய உணவுகள்..!
x

2023-ம் ஆண்டினை, ஐ.நா. சிறுதானிய ஆண்டாக அறிவித்ததில் இருந்தே, சிறுதானியங்களையும், சிறுதானிய உணவுகளையும் மையப்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் சென்னை அண்ணாநகரில், 'சிறுதானிய மாரத்தான்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா...? 100 நிமிடங்களில், 113 சிறுதானிய உணவுகளை சமைத்து காட்டி அசத்தியதோடு, அதை உலக சாதனையாகவும் பதிவு செய்துள்ளனர்.

இப்படி சிறுதானியங்களில், ருசியான உணவு சமைத்து அதை சாதனை முயற்சியாக மாற்றிய பெருமை, சமையல் கலைஞர் பழனி முருகனையே சாரும். திருச்சியை சேர்ந்தவரான இவர் டி.வி. சமையல் நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமாகி, இப்போது சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக விளங்குகிறார். இவரது முயற்சியில்தான், 'சிறுதானிய மாரத்தான்' விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனை நிகழ்வாக மாறியிருக்கிறது. இவர், 100 நிமிடங்களில், 113 சிறுதானிய உணவுகளை சமைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.




''ஆரோக்கியம் நிறைந்த சிறுதானியங்களின் மகத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தவே, இப்படியொரு விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டோம். இந்த முயற்சி விழிப்புணர்வுடன் நின்றுவிடாமல், சிறுதானியங்களை கொண்டு இளைய தலைமுறையினர் விரும்பும் ருசியான உணவுகளையும் சமைத்துக்காட்ட முடியும் என்பதை நிரூபிக்க ஆசைப்பட்டோம். அதை சுவை மணக்க செய்துவிட்டதாக நம்புகிறோம்'' என்றவர், இதற்காக சிறுதானியங்களை வெளிநாட்டு உணவு வகைகளில் முயன்று பார்த்து, புதுப்புது உணவுகளை ஆராய்ந்து, அதை ருசியாக சமைத்து பார்த்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ஆனால் அதை விட, இதுவே ஸ்பெஷலான நிகழ்ச்சி என்கிறார்.

''முதலில், 100 நிமிடங்களில், 100 சிறுதானிய உணவுகளை சமைப்பதுதான், எங்களது திட்டம். இந்த 100 உணவுகளும், நெருப்பில் (பயர் குக்கிங்) சமைக்கப்படக் கூடியது. சமையல் நிகழ்ச்சியில், என்னுடன் சேர்த்து, என்னுடைய சமையல் குழுவினரும் உதவ தயாராக இருந்தனர். இந்த சமையல் நிகழ்ச்சிக்காக, நாங்கள் முன்கூட்டியே சிறப்பாக தயாராகி இருந்ததால், 100 நிமிடங்களுக்கு முன்பே, 100 சிறுதானிய உணவுகளை சமைத்து முடித்துவிட்டோம். அதனால், 100 நிமிட கவுண்டவுனில் மீதமிருந்த சில நிமிடங்களை வீணாக்காமல், அதில் கூடுதலாக 13 சிறுதானிய உணவுகளை சமைத்தோம். இது நாங்களே எதிர்பார்க்காத ஒன்று. இருப்பினும், சுவையாக உணவு படைத்துவிட்டோம்'' என்பவர், இந்த சிறுதானிய மாரத்தான் நிகழ்ச்சியை, பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டி, சமைத்த 113 உணவுகளையும் பொதுமக்கள் ருசிக்க விருந்து படைத்திருக்கிறார்.

''தினை பலூடா, ராகி வாழைப்பழ ஸ்மூதி, குதிரைவாலி மலாய் குல்பி, பல தானிய மாம்பழ ஐஸ்கிரீம், பனிவரகு பாயசம், சாமை வெல்லம் பொங்கல், சிறுதானிய மிளகு சாறு, குதிரைவாலி வாழைத்தண்டு சூப், சாமை முந்திரி பக்கோடா, ராகி கருவேப்பிலை இட்லி, வரகு கொத்தமல்லி பாஸ்தா, குதிரைவாலி அவல் குடைமிளகாய் பிரைடு ரைஸ், தினை தேங்காய்ப்பால் நெய் சாதம், தினை காளான் புலாவ், ராகி ரவா தோசை, சோளம் கார அடை... இப்படி, 113 சிறுதானிய உணவுகளை, பல்வேறு வகைப்பாட்டில் சமைத்தோம்.

ஸ்டாட்டர் (தொடக்க உணவுகள்), மெயின் கோர்ஸ் உணவு (முக்கிய சாப்பாட்டு வகைகள்), டெசர்ட்ஸ் (இனிப்பு வகைகள்), அக்கம்பெனிமெண்ட் (உணவோடு சேர்த்து சாப்பிடும் துணை உணவு)... என எல்லா வகைப்பாட்டிலும், சில உணவுகளை சூடாகவும், சிலவற்றை குளிர்ச்சியாகவும் சமைத்து காட்டினோம். நம்மூர் சிறுதானியங்களை கொண்டு வட இந்திய உணவு ஸ்டைலிலும், பன்னாட்டு உணவு ஸ்டைலிலும் சமைத்து பரிமாறினோம். நாங்கள் சமைத்து காட்சிப்படுத்திய எல்லா சிறுதானிய உணவுகளையும், பொதுமக்கள் ருசிபார்த்து வெகுவாக பாராட்டினர்'' என்பவர், இந்த விழிப்புணர்வு சமையல் நிகழ்ச்சியை பனை வெல்லம், நுங்கு வெல்லம், நாட்டுச் சர்க்கரை... போன்ற இயற்கையான, சத்தான பொருட்களை பயன்படுத்தி, சிறுதானிய உணவுகளுக்கு மேலும் சுவை கூட்டி இருக்கிறார்.

''ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு உணவுப் பழக்க வழக்கம் அவசியமானது. ஒரு உணவு பழக்க வழக்கம் அழியும் எனில் அதைப் பின்பற்றும் இனமும் அழியும் என்பார்கள். எனவே நம் பாரம்பரியமான உணவு பழக்கவழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாக இதை கருதுகிறோம். 100 நிமிடத்தில் 113 சிறுதானியங்களை நெருப்பு பயன்படுத்தி சமைத்தது, பல்வேறு உலக சாதனைகளை உருவாக்கி இருந்தாலும், நாங்கள் அதை பொருட்படுத்தாமல் அடுத்தக்கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறோம்'' என்ற கருத்தோடு விடைபெற்றார்.

இந்த சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுடன், சில நடிகர்-நடிகைகள் மற்றும் யூ-டியூப் பிரபலங்களும் கலந்துகொண்டு, உற்சாகமூட்டினர்.



Next Story