குடிசையில் இருந்து ஒரு இளவரசி


குடிசையில் இருந்து ஒரு இளவரசி
x

மாடலிங் மீதான பிம்பம் மாற தொடங்கி விட்டது. அழகையும், மிடுக்கான உடல் தோற்றத்தையும் மட்டுமே சார்ந்திருந்த நிலை இப்போது இல்லை. மாடலிங் மீது ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் திறமையை மெருகேற்றி மாடலிங்கில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படி குடிசை பகுதியில் இருந்து மாடலிங்கில் சாதிக்க வந்தவர் தான் மலீஷா கர்வா. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை தாராவி பகுதியை சேர்ந்த இவருக்கு 15 வயதுதான் ஆகிறது.

மாடலிங் துறையில் காலூன்ற வேண்டும் என்பதுதான் அவரது சிறுவயது கனவாக இருந்தது. ஆனால் குடிசை பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் தம்மால் அப்படியொரு நிலையை எட்ட முடியுமா? என்ற ஏக்கமே அவரை வாட்டி வதைத்துவிட்டது.

மாடலிங் பற்றி கனவு மட்டுமே காணமுடியும் என்ற நிலை. அந்த கனவும் ஒரு நாள் நனவாகும் என்ற நம்பிக்கை மட்டும் அவரை விட்டு அகலவில்லை. அதற்கு இப்போது பலனும் கிடைத்திருக்கிறது. பிரபலமான ஆடம்பர அழகுசாதன தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறி இருக்கிறார், மலீஷா கர்மா.

அவர் பள்ளிச்சீருடை உடுத்தி அழகு சாதன நிறுவனத்துக்குள் நுழைந்து புன்னகை மலர வெட்கத்தையும், மகிழ்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்தும் காட்சி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. அழகு சாதன பொருளுக்கு மாடல் அழகியாக போஸ் கொடுக்கும் புகைப்படமும், அந்த புகைப்படத்தை பார்த்து அவர் நெகிழ்ந்து போகும் காட்சியும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

''அவள் பெரிய பள்ளியில் படிக்கவில்லை, ஆடம்பரமான வீட்டில் வசிக்கவில்லை, அவளிடம் நிறைய பணம் இல்லை. ஆனால் அவளிடம் இருக்கும் பொக்கிஷம் மிகப்பெரியது. அதுதான் தைரியம், தன்னம்பிக்கை. வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசைக்கனவை அவளுக்குள் தூண்டி விட்டதும் அவைதான்'' என்று மலீஷா கர்வாவின் குடும்ப சூழலை குறிப்பிட்டு, இந்த நிலையை எட்டி இருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

மலீஷா கர்மாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாப்மேன். இவர் 2020-ம் ஆண்டு தனது இசை வீடியோவில் நடிக்க வைப்பதற்கு ஒரு பெண்ணை தேடி இந்தியா வந்தார். கூடவே இசை வீடியோவுக்கான படப்பிடிப்பை மும்பையில் நடத்துவதற்கு திட்டமிட்டார். கொரோனா காரணமாக இங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் மலீஷாவை சந்திக்கும் வாய்ப்பு ராபர்ட்டுக்கு கிடைத்தது. மலீஷா தனது மாடலிங் கனவைப் பற்றி சொன்னபோது அவர் ஆச்சரியப்பட்டார். மலீஷாவின் கனவை நிறைவேற்ற நிதி திரட்டினார். அதற்கென தனி சமூக வலைத்தளம் ஒன்றையும் தொடங்கினார். அது முதலே மலீஷா பிரபலமாக தொடங்கி விட்டார். அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்படுகிறது. அவருக்கு இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தன.

'லைவ் யுவர் பேரிடேல்' என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். சில வெளிநாட்டு இதழ்களின் முன்பக்க அட்டைப்படத்தையும் அலங்கரித்துள்ளார். இன்று, மலிஷா பல பிராண்டுகளில் தூதுவராக பணிபுரிகிறார். பல இளம் பெண்களுக்கு உத்வேகமாகவும் இருக்கிறார். சூப்பர் மாடலாகும் அவரது பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.

இந்த சிறுமி தாரா நடிப்பு, மாடலிங், நடனம், பயணம் செய்வது மற்றும் போட்டோ ஷூட்களில் பங்கேற்பது என பிஸியாக இருந்தாலும் படிப்பே எல்லாவற்றுக்கும் மேலானது என்கிறார். தனது பள்ளிப் படிப்பை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

''கருப்பாக இருக்கும் நபர்களை, யாராவது மாடலிங் துறையில் அங்கீகரிப்பார்களா?, கருப்பு நிறத்தவர்களை மக்கள் விரும்புவார்களா...? இதுபோன்ற கேள்விகள் எல்லாம், என்னை சுற்றி சத்தமாக ஒலித்துக்கொண்டே இருந்தன. ஆனால், ராபர்ட் ஹாப்மேனின் செயல்பாடுகளும், அவரது முயற்சிகளும் என்னை உற்சாகப்படுத்தின. முதலில், என்னை நானே நம்ப ஆரம்பித்தேன். பிறகு, அவரது முயற்சிகளில் முழுமனதோடு ஈடுபட்டேன். அதன் வெளிப்பாடு, உலக அளவிலான மாடலிங் துறையில் எனக்கான இடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

நிறைய கவர் போஸ்டர்கள், அட்டை படங்கள், வணிக ரீதியிலான விளம்ப புகைப்படங்களில், நான் விதவிதமாக காட்சியளித்தாலும், நான் என்னுடைய கல்வியை விட்டுகொடுக்கவில்லை. ஏனெனில் கல்விதான், நம்முடைய இறுதிகாலம் வரை, நம்முடன் பயணிக்கும் என்பதை நான் அறிவேன். மாடலிங் துறையில், அவ்வப்போது கிடைக்கும் சிறுசிறு வாய்ப்புகளும், அதன் மூலம் கிடைக்கும் சம்பளமும் எங்கள் குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக மாறிவிட்டது.

வறுமை தலைத்தூக்கும் சமயத்தில், எங்கிருந்தாவது மாடலிங் வாய்ப்புகள் வந்துவிடும். வாழ்க்கை மீண்டும், அழகாகும். இப்படியே, வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்ததும், வரப்பிரசாதம்தான்.

ஏனெனில், தாராவியில் சாப்பிடக்கூட உணவின்றி, நிறைய மக்கள் தவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால், என்னுடைய வாழ்க்கையை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன்'' என்று அனுபவ முதிர்ச்சியான வார்த்தைகளை உதிர்க்கும் மலீஷாவை மும்பை பேஷன் உலகம் கொண்டாட ஆரம்பித்துவிட்டது. அவருக்கான வாய்ப்புகளும், பெருக தொடங்கிவிட்டன. இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவர்களும் மலீஷா என்ற மாடலிங் பெண்ணை விரும்புகிறார்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களில், பேஷன் துறையில் மலீஷா மிகப்பெரிய மாடலிங் அழகியாக உருமாறினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியொரு ஆச்சரியம் நிகழட்டும். ஏனெனில் மலீஷா தன்னுடைய வளர்ச்சியினால், பிறரது வாழ்க்கையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ஆர்வமாக இருக்கிறார்.

''மாடலிங் துறையில் சாதிப்பதும், சம்பாதிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். எனக்கு என ஒரு ஆசை இருக்கிறது. அது, தாராவி பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது. அதுவே எனது லட்சியம், அதுவே எனது ஆசையும்கூட'' என்று வெள்ளந்தியாக சிரிக்கிறார்.


Next Story