தற்சார்பு விவசாயத்தில் சாதிக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர்


தற்சார்பு விவசாயத்தில் சாதிக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர்
x

நம்முடைய முன்னோர்கள் இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி மருந்துகள் போன்றவற்றையும், உழவுக்கு மாடுகளை பயன்படுத்தியும்தான் விவசாயம் செய்து வந்தார்கள்.

கால மாற்றத்துக்கு ஏற்ப விவசாயிகளும் நவீன ரக விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். உரக்குழிகளை போட்டு உரம் சேகரிப்பதற்கு பதிலாக, ரசாயன உரங்களை தூவினால் விளைச்சல் பெருகும் என்ற நப்பாசையோடு, தனக்கு உணவு தந்துகொண்டிருந்த பூமித்தாயின் வயிற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக மலடாக்கிவிட்டார்கள்.

தற்போது உரம் உள்பட அனைத்து இடுபொருட்களின் விலை உயர்வு, கூலியாட்கள் கிடைக்காமை, பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்களின் தாக்கம் போன்ற காரணங்களால் மகசூலில் கிடைக்கும் வருமானத்தை விட, வேளாண்மைக்கு செலவழிக்கும் தொகையே அதிகமாக உள்ளது. அதனால் வேளாண்மை செய்ய விருப்பமில்லாமல் இன்று பலரும் நகரத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் கிராமத்தில் பிறந்து, பல ஆண்டுகள் நகரத்தில் வாழ்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் இயற்கை விவசாயத்திற்கு மாறி சாகுபடியில் அசத்தி வருகிறார். அவரது பெயர் ஜீவிதா. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர்: சேகர்-அமுதா.

12-ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் அரசுப் பள்ளியில் பயின்ற ஜீவிதா, பின்னர் காஞ்சீபுரம் கல்லூரியில் பி.எஸ்சி. சமஸ்கிருதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவுகளில் சேர்ந்து படித்தார். இதில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே ராஜஸ்தானில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ். படிப்பை முடித்தார்.

17 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய ஜீவிதா, தற்சார்பு இயற்கை வழி விவசாயம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கும், அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் விவசாயம் குறித்து ஏதும் தெரியாது. ஆனால் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது தம்பியிடமும், அவரது மாமனாரிடமும் அதற்கான ஆலோசனைகள் பெற்றார். மேலும் நம்மாழ்வாரின் புத்தகங்கள் மற்றும் காணொலி மூலமும், பிரிட்டோ ராஜ் என்பவரின் நீர்மேலாண்மை மற்றும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு வழியேயும் தேவையான விவரங்களை சேகரித்தார். பின்னர் ஏற்கனவே தனது தம்பியின் மாமனார் மூலம் சிறுபாக்கம் கிராமத்தில் வாங்கிய 4.25 ஏக்கர் தரிசு நிலத்தையே சீர் செய்து, அதில் இருந்து தனது விவசாய ஆசையின் முதல் அடியை எடுத்து வைத்தார். அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். தற்போது அதில் தற்சார்பு முறை இயற்கை வழி விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டு சாதித்து வருகிறார்.

இதுகுறித்து சாப்ட்வேர் என்ஜினீயரும், பெண் விவசாயியுமான ஜீவிதா சொல்ல கேட்போம்.

''இன்றைய நவீன காலத்தில் அதிகப்படியான விளைச்சலை பெற செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தும் கட்டாய மனப்போக்கு பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து வருகிறது. மற்றொரு பக்கம் விளைபொருட்கள் முழு விளைச்சல் அடையும் முன்பே காய்களை பறித்து, அதனை ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் ஆபத்தான மனப்போக்கு வியாபாரிகளிடம் அதிகரித்து வருகிறது.

இதனால் எங்கும் செயற்கை ரசாயனம், எதிலும் ரசாயனம் என்ற நிலை உருவாகி, நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் நஞ்சாக மாறி வருகின்றன. செயற்கை ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகள் வருவதற்கு முன்பு வரை இயற்கையோடு மனிதன் இணைந்து வாழ்ந்தபோது நோய் ஆபத்து ஏதும் பெரிதாய் வந்ததில்லை. செயற்கையோடு கைகோர்த்தப்பிறகு மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு பஞ்சமே இல்லை.

இதனால் செயற்கையாக தயாராகும் உணவுகளை விடுத்து, இயற்கையாக உணவுகளை தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் மேலோங்கியது. அதுதான் எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது நாட்டத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்தபடி வேலை செய்யும்போது, ஏன் விவசாயமும் செய்யக்கூடாது என்று நினைத்து, கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தில் ஏற்கனவே வாங்கி இருந்த தரிசு நிலத்தில் இருந்து எனது பயணம் தொடங்கியது.

முட்புதர்களாக கிடந்த அந்த நிலத்தை சரி செய்தோம். பாழடைந்த சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றை தூர்வாரினோம். தற்போது கிணற்றில் அதிகளவு தண்ணீர் தேங்கி இருப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது'' என்கிறார்.

இந்த நிலத்தில் குழியடிச்சான், மிளகு சம்பா, நொறுங்கன், சின்னார், ஆணைகொம்பன், சிகப்பு கவுணி, கொத்துமல்லி சம்பா, 60-ம் குருவை, மேலும் பல பாரம்பரிய நெல் விதைகளை விதைத்து விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார், ஜீவிதா. முழுக்க முழுக்க தற்சார்பு இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால், நாட்டு வகை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இதன் சாணம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை உரமாக்கி விவசாய தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்.

''இந்த நிலம் களர் மண் வகையை சார்ந்தது என்பதால் ஒவ்வொரு வருடமும் மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு விதைத்து, 50 நாட்களில் மடக்கி உழுது அதை மண்ணுக்கு கொடுத்து வளமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.

மேலும் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் மழைநீர் வீணாக வெளியே செல்லாமல் இருக்க நிலத்தை சுற்றிலும் அகழி தோண்டியிருக்கிறோம். உயிர் வேலியின் முக்கியத்துவம் அறிந்து 5 அடுக்கு முறை உயிர் வேலி அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இந்த வழி விவசாயத்தில் ஈடுபடுவது வாழ்வியலாக மாறும் போது, அது ஒருவித மன நிம்மதியை தருகிறது. இந்த முறையில் நான் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதை கேள்விப்பட்டு, பக்கத்து கிராமம் மற்றும் உள்ளூர் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகள் ஒன்று சேர்ந்து உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொருவர் நிலத்திலும் வேலை செய்வோம். இதனால் வேலை பளு சற்றே குறைகிறது. விவசாயிகள் இடையே ஒற்றுமை கூடுகிறது'' என்கிறார்.

இந்த பெண் என்ஜினீயர் விவசாயி போல் நாமும் தற்போதுள்ள செயற்கை விவசாயத்திற்கு 'குட்பை' சொல்லிவிட்டு, நமது முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை விவசாயத்துக்கு மீண்டும் செல்வோம்! விவசாயத்தை லாபகரமான, மதிப்பு மிகுந்த தொழிலாக மாற்றுவோம்!!

பாரம்பரிய நெல் விதைகள்

இந்த இயற்கை விவசாயத்தில் கனரக எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்பதிலும் ஜீவிதா உறுதியோடு இருக் கிறார். இதனால் மண்ணின் இறுக்கம் தவிர்க்கப்பட்டு மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்படும் என்றும் சொல்கிறார்.

''நான் இந்த உழவு முறையை தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், இந்த வருடம் என்னால் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தரமான கலப்பில்லா கை அறுவடை செய்த பாரம்பரிய நெல் விதைகளை தர முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் இங்கு தரமான விதை பண்ணை உருவாக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் எனக்கு இல்லை. மேலும் இங்கு விளையும் பயிர்கள், மரம், செடிகள் அனைத்துமே நமது நாட்டு ரகங்கள் மட்டுமே.

இந்த நிலத்தை சீர் செய்ய உதவிய என் சொந்தங்கள் அனைவருக்கும், என் குடும்பத்தார்களுக்கும், இந்த கிராம மக்களுக்கும் நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.

செயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் தானியங்களை விட இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை மக்களுக்கு கொடுக்கும் போது பெருமிதமும், மனநிறைவும் கிடைக்கிறது. இதனால் இயற்கை வழி விவசாயத்தை விரும்பி, ஆர்வமாக செய்கிறேன். தற்போது பாரம்பரிய நெல் விதைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்'' என்றார் மடிக்கணினி பிடித்த கையில் கலப்பையுடன்.


Next Story