விவசாயத்தை நேசிக்கும் பெண்மணி


விவசாயத்தை நேசிக்கும் பெண்மணி
x
தினத்தந்தி 20 April 2023 3:15 PM GMT (Updated: 20 April 2023 3:15 PM GMT)

விவசாய மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்வதோடு ஆண்களுக்கு நிகராக விவசாயத்தை சுவாசிக்கிற, நேசிக்கிற பெண்ணாகவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெண்கள் விவசாயத்தை விரும்புவதும், விவசாயம் செய்கிற ஆண்களை திருமணம் செய்து கொள்வதும் மிகவும் குறைவுதான். அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் மாப்பிள்ளைக்கு விவசாயம் இருக்க வேண்டும். ஆனால் திருமணம் செய்து கொள்கிற பெண் நகர வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிற மனநிலை அதிகம் காணப்படுகிறது. இதற்கு மத்தியில் சிலர் விதிவிலக்காக விவசாய மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்வதோடு ஆண்களுக்கு நிகராக விவசாயத்தை சுவாசிக்கிற, நேசிக்கிற பெண்ணாகவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புதுமைப்பெண்

அது போன்ற ஒரு புதுமை பெண்ணாக, உழைப்பாளியாக திகழ்கிறார், புஷ்பவதி. 25 ஏக்கரில் தென்னையை நடவு செய்து வளர்த்து வருபவர், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி தென்னை விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி அசத்துகிறார். அது மட்டுமல்ல, அந்த விவசாய தோட்டத்தை அழகுபடுத்தி பண்ணை வீடுபோலவும் அலங்கரித்திருக்கிறார், இந்த புதுமைப்பெண்.

இவரது பூர்வீகம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள உத்தண்டிபாளையம். சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரது வீட்டில் 40 ஏக்கர் விவசாயி பூமி உள்ளது. ஆனால் அது சாதாரணமாக விவசாயம் செய்கிற பூமியாக இருந்தது. அதனை தனது சொந்த உழைப்பால் 25 ஏக்கரில் 1,500 தென்னை மரங்கள் நட்டு வளர்த்து உருவாக்கியுள்ளார்.

நவீன தொழில்நுட்பம்

அது மட்டுமன்றி இன்று விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளதால் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தனியார் நிறுவனத்தின் மூலம் தானியங்கி சொட்டுநீர் பாசனமும் செய்துள்ளார்.

''எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் செல்போன் மூலம் நீர்ப்பாசனம் செய்ய முடியும். அதற்காக 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்திருக்கிறோம். இந்த தொட்டியில் இருந்து வரும் நீரில் தானியங்கி முறையில் தென்னை மரங்களுக்கு ஊட்டச்சத்துக்களையும் கலக்க நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 லட்சம் செலவானது'' என்று நிதானமாக பேச தொடங்கினார், புஷ்பவதி.

விவசாயம் செய்யவே பயப்படுகிற இந்த காலத்தில் இவர் துணிந்து இது போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக தென்னந்தோப்பை உருவாக்கியுள்ளார். விவசாயத்தில் சோர்வு என்பதே வரக்கூடாது என்பதற்காக அந்த தென்னந்தோப்பை ஒரு இயற்கை அழகு கொஞ்சும் விதமாக வடிவமைத்துள்ளார். அவ்வப்போது கிடைக்கிற மரங்கள், கற்கள், பிளாஸ்டிக் டிரம்கள், மண் பானைகள் உட்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு அழகு படுத்தியுள்ளார்.

கோவர்த்தனா பண்ணை

''எனது தென்னந்தோப்புக்கு கோவர்த்தனா பண்ணை என்று பெயர் சூட்டியிருக்கிறேன். தென்னையில் தற்போது நல்ல மகசூலும் கிடைக்கிறது. விதைக்கு பயன்படுத்தும் விதமாக நல்ல தரமான தேங்காய்கள் மற்றும் தென்னங்கன்றுகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம்.

தென்னந்தோப்பு மற்றும் தென்னை வளர்ப்பிற்கு தேவையான எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன். ஏன்...? டிராக்டர், டெம்போ, கார், இருசக்கர வாகனம் என அனைத்தையும் ஓட்ட கற்றுக்கொண்டு, அந்த பணிகளையும் நானே செய்கிறேன். வீட்டையும் கவனித்துக்கொண்டு விவசாயத்தையும் கவனித்துக் கொள்ளும் எனக்கு கணவர் துரைராஜ் மற்றும் மகன் மவுலீஸ்வர் ஆகியோரும் உதவியாக இருக்கிறார்கள்.

தென்னை மரங்களுக்காக, மீன் அமிலம் தயாரிக்கிறோம். இது தேங்காய் மகசூலை அதிகப்படுத்துகிறது. நல்ல காய்ப்பு திறனையும் கொடுக்கிறது. என்னுடைய தோட்டத்தில் இருக்கும் தென்னை மரங்கள் அனைத்தும் நாட்டு ரகங்களாகும். இன்றைய சூழ்நிலையில் ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயத்தில் சோர்வு ஏற்படுகிறது. எனவே நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாய பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக செய்து விற்பனை செய்தால் விவசாயத்தில் நிச்சயம் ஜெயிக்கலாம்'' என்கிறார் நம்பிக்கையோடு.

''இன்று விவசாயம் ஒரு சவால் நிறைந்த தொழிலாக மாறிவிட்டது. காரணம் சரியான அளவில் விலை நிர்ணயம் இல்லாமல் இருப்பது, விவசாயிகளை சோர்வடைய செய்கிறது. சாகுபடி செய்கிறபோது இருக்கிற விலை, அறுவடையின்போது இருப்பதில்லை. இதனால் தான் பல விவசாயிகள் அதன் மீது வெறுப்பு ஏற்பட்டு மாற்று தொழிலுக்கு சென்று விடுகிறார்கள்.

இதில் ஒரு விதிவிலக்காக இருப்பது தென்னை மரங்கள். அதிலும் தென்னை மரங்களுக்கு சரியான அளவில் உரங்கள் இட்டு, கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தால் லாபகரமானதாக மாற்ற முடியும்.

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் (எண்ணெய், கோகோபீட், கொப்பறை, நார் உள்ளிட்ட) அதனை மாற்றுகிற போது இன்னும் கூடுதல் லாபத்தை நாம் பெற முடியும்.

வெறும் தென்னந்தோப்புகளாக இல்லாமல் அதனை ஒரு அழகுற நேசிக்கிற அளவிற்கு ஓய்வறை, அழகு செடிகள், பூஞ்செடிகள், கிடைக்கிற பொருட்களைக் கொண்டு கலை நயமிக்க பல்வேறு வண்ணங்களில் நானே அதனை மாற்றி வைத்திருக்கிறேன். காலையில் தென்னந்தோப்பிற்குள் வந்து மாலை வரை இருக்கிற போது நமக்கு மனதிற்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறது. நீரின்றி அமையாது உலகு என்பது போல தண்ணீர் விவசாயத்தின் மிகப்பெரிய உயிர்நாடி. அதனை நன்கு உணர்ந்து மழைநீரை சேமிக்க பழகி இருக்கிறேன்.

ஆட்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகத்தான் பல லட்சங்கள் செலவு செய்திருக்கிறேன். மற்றபடி அதிகம் செலவழிக்காமலும் விவசாயம் செய்யலாம். இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் நிச்சயம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நீங்கள் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் நமக்கு உணவளிப்பது விவசாயம் தான். எனவே அதனை கண்டிப்பாக மறந்து விடக்கூடாது என்பதுதான் எனது முக்கிய கோரிக்கை'' என்றவர், இளம் வயதினர் மனதில் விவசாய விதைகளையும் தூவிவிட்டு செல்கிறார்.

தென்னை மரங்களுக்கு சரியான அளவில் உரங்கள் இட்டு, கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தால் லாபகரமானதாக மாற்ற முடியும்.

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் அதனை மாற்றுகிற போது இன்னும் கூடுதல் லாபத்தை நாம் பெற முடியும்.


Next Story