தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் சாதனைப்பெண்


தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் சாதனைப்பெண்
x

கோவையில் நடந்த தமிழ் உரிமை மீட்பு மாநாட்டில் 7 மணி நேரம் வாழ்க தமிழ்.. என்றும் தமிழ் வாழ்க.. என்று 9,500 முறைக்கு மேல் எழுதியும் சாதனை படைத்தார் கலைவாணி.

இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி முடித்ததும் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்கள் பலருக்கும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் அமைவதில்லை. வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என குறுகிய வட்டத்துக்குள் முடங்கிப்போய்விடுகிறார்கள். ஒரு சிலரே திருமணத்திற்கு பிறகு சாதனை பெண்மணிகளாக பிரகாசிக்கிறார்கள். வயதாகி விட்டது, இனி சாதித்து என்ன செய்யப்போகிறோம்? என நினைப்பவர்களும் உண்டு. இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களுக்கு மாறாகப் பல சாதனைகளை படைத்துள்ளார் கலைவாணி. வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கனிகனியான் கிராமத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர்: கோ.சின்னகண்ணு-சி.லட்சுமி.

இந்த தம்பதியரின் ஒரே மகளான கலைவாணி ஆரம்பக் கல்வியை நாகநதி தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை சோழவரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மேல்நிலைக்கல்வியை தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பி.ஏ. வரலாறு பட்டப்படிப்பை வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியிலும், அஞ்சல் வழியில் நூலக அறிவியல் கல்வியை முடித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும்போது கவிதை, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் மட்டுமின்றி விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார். மாவட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் பல பரிசுகளை வென்றுள்ளார்.தமிழ் மொழி மீது இவர் கொண்ட தீராத பற்று சாதனையாளராக உருமாற்றி இருக்கிறது.

திருக்குறளை உலக பொதுமறை நூலாகவும், மாநில நூலாகவும் அங்கீகரிக்க வலியுறுத்தி 150 பீன்ஸ் விதையில் 3 ஆயிரம் முறை திருக்குறள் என 8 மணி நேரத்தில் எழுதியது, ஓடுகிற ெரயிலில் காட்பாடி முதல் மைசூரு வரை குடையில் 2,035 முறை திருக்குறள் என எழுதியது உள்பட பல்வேறு உலக சாதனைகள் படைத்துள்ளார்.

பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து எட்டயபுரம் வரை சட்டை பட்டனில் பாரதியார் என 2,022 பட்டனில் எழுதி அதனை மாலையாக கோர்த்து பாரதி இல்லத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு அணிவித்து மற்றொரு உலக சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு என 2,023 முறை 6 மணி நேரத்தில் எழுதியும் சாதனை படைத்தார்.

கோவையில் நடந்த தமிழ் உரிமை மீட்பு மாநாட்டில் 7 மணி நேரம் வாழ்க தமிழ்.. என்றும் தமிழ் வாழ்க.. என்று 9,500 முறைக்கு மேல் எழுதியும் சாதனை படைத்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி 2009-2010-ம் ஆண்டு நடத்திய தமிழ்ச்சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்ட 100 கவிஞர்களில் வேலூரில் இருந்து பங்கேற்ற ஒரே கவிஞர் என்ற சிறப்பையும் பெற்றவர் கலைவாணி.

''10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழின் சிறப்புகளையும், இலக்கிய, பண்பாடு பெருமைகளையும் இன்றும் உலகம் வியந்து கொண்டிருக்கிறது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில் நானும் பிறந்துள்ளேன், தாய்மொழியாக தமிழைக் கொண்டுள்ளேன் என்பதில் பெருமையடைகிறேன். எக்காலத்தவருக்கும் பொருந்தும் கருத்துகளை திருக்குறள் கொண்டிருப்பதால் திருக்குறள் முற்றோதல் இணையம் வழி செய்கிறோம்.

பன்னிரு திருமுறைகள் முற்றோதல், திருக்குறள் சொற்பொழிவு, நாலடியார் சொற்பொழிவு செய்கிறோம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென்கீழ்கணக்கு நூல்களை முற்றோதல் மற்றும் ஆய்வுகள் மூலம் வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே தனது வாழ்வின் மிகப் பெரிய லட்சியம்'' என தன்னம்பிக்கையோடு கூறுகிறார் கலைவாணி.

சமீபத்தில் உலக திருக்குறள் சாதனையாளர்களை ஒன்றிணைத்து புதுவை தமிழ்ச்சங்கத்தில் தனது வேலூர் முத்தமிழ்ச் சங்கமம் அமைப்பு மூலம் மாநாடு ஒன்றை நடத்தினார். இது, உலகின் முதல் திருக்குறள் சாதனையாளர் மாநாடு ஆகும். அத்துடன் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 107 மகளிர் மட்டும் பங்கேற்ற மகளிர் பல்திறன் உலக சாதனையை நிகழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.

திருக்குறள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடத்தில் விதைத்துவரும் இவர், வேலூர் மாவட்டத்தின் முதல் திருக்குறள் தூதர் ஆவார். வெளிநாட்டு அமைப்புகள் இவரது சாதனை மற்றும் தமிழ்த்தொண்டை பாராட்டி நான்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை அளித்துள்ளது. கவிஞராகவும், எழுத்தாளராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் முத்திரை பதித்து வரும் இவர் 4 கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் பேரறிஞர் அண்ணா விருது, தேசிய சர்தார் வல்லபாய் பட்டேல் விருது, உலக திருக்குறள் மாதர் மையம் வழங்கிய திருக்குறள் ஆய்வுச் சுடர் விருது, மைசூரு பல்கலைக்கழகத்தில் நடந்த திருக்குறள் மாநாட்டில் குறள் ஆய்வுச் செம்மல் விருது, சமூக எழுத்தாளர் விருது உள்பட 250-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார், கலைவாணி.

''என்னை தேடி பல்வேறு விருதுகள் வந்தன. அதனை பெறுவதற்கு வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் என்னிடம் போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாமலும், இதனால் வெளியூர் செல்ல முடியாமலும் விருதுகளை பெற இயலாமல் போய் விட்டது. கொரோனா பரவல் கால கட்டத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல், பெற்ற விருதுகளில் பாதியை விற்று சாப்பிட வேண்டிய வேதனையான நிலைமை ஏற்பட்டது. நான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களையும் உணவுக்காக விற்க வேண்டிய அளவுக்கு வறுமை என்னை ஆட்கொண்டது. அதற்கு மத்தியிலும் சில நல் உள்ளங்கள் செய்த உதவியால் இந்த அளவுக்கு சாதனை படைக்க முடிந்தது'' என்கிறார்.

தமிழ் மீது கொண்ட காதலால் ஆங்கிலம் பயன்பாட்டை குறைத்து தமிழில் பேசுதல், தமிழில் எழுதுதல் என தான் மேற்கொண்டுள்ள கொள்கையை பின்பற்றுவதோடு, மற்ற மாணவர்களிடத்திலும் இதனை வலியுறுத்துகிறார்.

''தினத்தந்தி நாளிதழை கடந்த 20 வருடமாக வாசிக்கிறேன். எங்கள் வீட்டு முக்கிய உறுப்பினர் தினத்தந்தி. எனது எழுத்துகளை முதலில் பிரசுரித்தது, என்னை வளர்ச்சிப் பாதைக்கு செல்ல தூண்டியது. தினத்தந்தி குடும்ப மலர் பகுதியில் வெளிவந்த குறுங்கவிதைகள் என்னை கவிஞராக வளர்த்தது. நான் எழுதிய சுமார் 300 படைப்புகள் தினத்தந்தியில் பிரசுரமாகி உள்ளன. தினத்தந்தி மூலம் தான் பொது அறிவை வளர்த்துக்கொண்டேன். அதன் மூலம் வானொலி தொகுப்பாளராக தேர்வுப் பெற்றேன். தினத்தந்தியின் எளிமையான உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்களை எனக்கு கற்றுக்கொடுத்தது'' என்கிறார்.

உலகில் 250-க்கும் மேற்பட்ட உலக சாதனைகளுக்கு நடுவராக இருந்த முதல் பெண் நடுவர் என்ற சிறப்பையும் கலைவாணி பெற்றுள்ளார். பெண்கள் நினைத்தால் சாதிக்கலாம். வாழ்ந்ததின் அடையாளத்தை வரலாற்றில் பதிக்க வேண்டும் என்று நினைக்கும் இவர் மேலும் சில சாதனைகளை படைப்பார் என்பதில் ஐயமில்லை.


Next Story