அடேங்கப்பா! வயது 384 - சென்னைக்கு பிறந்தநாள்


அடேங்கப்பா! வயது 384  -  சென்னைக்கு பிறந்தநாள்
x

சென்னை மாநகரம் தனது 384-வது பிறந்த நாளை 22-ந்தேதி (நாளை மறுநாள்) கொண்டாட இருக்கிறது.

'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' என்று பெருமையோடு சொல்வார்கள். வேலை தேடி இந்த மண்ணில் கால் வைத்தவர்கள், ஒருபோதும் கைவிடப்பட்டதில்லை. அதில் பெரும்பங்கு தலைநகர் சென்னைக்கு உண்டு. ஆனால், கடல் கடந்து வந்தவர்களையும் வாழ வைத்திருக்கிறது, மதராஸ் (சென்னை) பட்டணம். அதை தெரிந்துகொள்ள வரலாற்று பக்கங்களை நாம் பின்னோக்கி புரட்ட வேண்டும்.

போர்ச்சுகீசியர்கள் வருகை

சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த போர்ச்சுகீசியர்கள், கோவாவை தலைமையிடமாகக் கொண்டு, கொச்சி, கள்ளிக்கோட்டை, மயிலாப்பூர் ஆகிய துறைமுக பகுதிகளை ஆண்டு வந்தனர். சுமார் 100 ஆண்டுகள் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் மங்கத் தொடங்கியபோது, மயிலாப்பூருக்கு தெற்கே 25 மைல் தொலைவில் இருந்த புலிக்கட் என்ற இடத்தை டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்த டச்சுக்காரர்கள், விவேகத்துடன் தங்களுடைய வியாபாரத்தை அபிவிருத்தி செய்தனர்.

1600-ம் ஆண்டுகளில், ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்தவர்கள், மசூலிப் பட்டிணத்தில் முதன் முதலில் காலூன்றினார்கள். வியாபாரம் செழித்ததால், நெல்லூர் அருகே இருந்த ஆர்மகாம் என்ற இடத்தில் தங்களது வாணிபத் தொடர்புகளை விஸ்தரிப்பு செய்தனர். ஆங்கிலேயர்கள், ஐரோப்பிய துணிகள், அலங்காரமிக்க பட்டு ஆடைகளை இங்கே விற்று, இங்குள்ள இயற்கை பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.

புனித ஜார்ஜ் கோட்டை உதயம்

கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகியான பிரான்சிஸ் டே, மயிலாப்பூரில் போர்ச்சுகீசியர்கள் வியாபாரம் செய்வதை அறிந்து மசூலிப்பட்டிணத்தில் இருந்து அங்கு வந்தார். அந்த நேரத்தில், டச்சுக்காரர்கள் - போர்ச்சுகீசியர்கள் இடையே மோதல்போக்கு இருந்து வந்தது. இதனால், டச்சுக்காரர்களை எதிர்க்க ஆங்கிலேயர்களுடன் போர்ச்சுகீசியர்கள் நட்பு பாராட்டினார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரான்சிஸ் டே, மதராஸ் பட்டணத்தில் கிழக்கிந்திய கம்பெனியை விரிவுபடுத்த திட்டமிட்டார்.

அதற்கான இடத்தை தேடியபோது, கூவம் நதியும், வங்கக் கடலும் சங்கமிக்கும் இடம் வியாபாரத்துக்கு சரியாக இருக்கும் என பிரான்சிஸ் டே கருதினார். அப்போது, அந்த இடம் பூந்தமல்லியை ஆண்ட நாயக்கர்களுக்கு சொந்தமாக இருந்தது. போர்ச்சுகீசியர்கள் சிபாரிசால், கிழக்கிந்திய கம்பெனி அமைக்க அந்த இடம் கிடைத்தது. வங்கக் கடலினை ஒட்டி 5 மைல் நீளத்துக்கும், ஒரு மைல் அகலத்துக்கும் இருந்த அந்த இடத்தை 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி பிரான்சிஸ் டே எழுதி வாங்கினார். அதுதான் சென்னையின் பிறந்த நாளாக கருதப்படுகிறது.

அதற்கு அடுத்த ஆண்டே (1640) புனித ஜார்ஜ் கோட்டை கட்டும் பணி தொடங்கி 5 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. அங்குள்ள புனித மேரி தேவாலயம் 1680-ம் ஆண்டு கட்டப்பட்டது. பீரங்கி குண்டுகள் தாக்காத வண்ணம் தேவாலயத்தின் சுவர்கள் வடிவமைக்கப்பட்டன.

பீரங்கி கோட்டையான கோவில்

சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு கோல்கொண்டாவை ஆண்ட முகமதிய மன்னரின் படைத்தளபதி கிழக்கிந்திய கம்பெனியை அழிக்க ஆங்கிலேயர்களுடன் போரிட்டார். புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள குடிசை வீடுகளை தீயிட்டு கொளுத்தினார். ஆனால், கோட்டைக்குள் நுழைய முடியாமல் பின்வாங்கினார். அன்றைய காலக்கட்டத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்த சாந்தோம் பகுதியை முகமதியர்களின் உதவியோடு டச்சுக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மதில் சுவரில் பீரங்கிகளை பொருத்தி, கோவிலையே தற்காலிக கோட்டையாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த முற்றுகை பல வாரங்கள் நீடித்தது. முடிவில், டச்சுக்காரர்களுக்கே வெற்றி கிடைத்தது. சாந்தோமை அவர்கள் கைப்பற்றினர்.

புனித ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றும் நோக்கத்தில் டச்சுக்காரர்கள் முன்னேறி வந்தபோது, ஐரோப்பாவில் நெதர்லாந்து - பிரிட்டன் இடையே மோதல் வெடித்தது. சூழ்நிலை சரியில்லாததை உணர்ந்த டச்சுக்காரர்கள் அமைதியானார்கள். புனித ஜார்ஜ் கோட்டைக்கான ஆபத்தும் அப்போது நீங்கியது.

சண்டையிட வந்தவருக்கு விருந்து

அதன்பிறகு, கர்நாடக நவாப்பாக இருந்த தாவூத்கான் பெரும் படையுடன் மதராஸ் பட்டணத்தை முற்றுகையிட வந்தார். ஆனால், அந்த நேரத்தில் போர் புரிவது சரிப்பட்டு வராது என்று நினைத்த ஆங்கிலேயர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் வரும் காட்சியைப் போல, தாவூத்கானை வரவேற்று விருந்து அளித்து, கோட்டையிலேயே சில நாட்கள் தங்கவைத்து சிறப்பு செய்தனர். இதனால், மனம் இறங்கிய தாவூத்கான் சண்டை போடாமல் திரும்பிச் சென்றுவிட்டார்.

ஆனாலும், 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் வந்த அவர், போரிட்டு பெரிய சேதத்தை ஏற்படுத்தினார்.இதனால், மதராஸ் பட்டணத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. என்றாலும், தாவூத்கான் போரை விடுவதாக இல்லை. போருக்கு இடையே ஆங்கிலேயர்களுடன், பேரம் பேசினார். பேரத்துக்கு படிந்தால் போரை கைவிடுவதாகவும் கூறினார். ஆங்கிலேயர்களும் வேறு வழியின்றி, தாவூத்கானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். இதனால், புனித ஜார்ஜ் கோட்டை இந்த முறையும் தப்பியது.

3 ஆண்டு பறந்த பிரெஞ்சு கொடி

அதன்பிறகு, 1746-ம் ஆண்டு திடீரென ஒரு நாள் பிரெஞ்சு கப்பல் படை புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிரில் வங்கக் கடலில் நங்கூரமிட்டது. ஆங்கிலேயர்களுடன் அவர்கள் நடத்திய போர் ஒரு வார காலம் நீடித்தது. இந்த நேரத்தில், ஆங்கிலேய படை வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை புனித மேரி தேவாலயத்துக்குள் வைத்துத்தான் பாதுகாத்தனர். அந்த தேவாலயத்தை தானியக் கிடங்காகவும், குடிநீர் சேமிக்க உதவும் நீர்நிலையமாகவும் பயன்படுத்தினர்.

இந்தப் போரில், கோட்டையை விட்டு ஆங்கிலேயர்கள் விரட்டப்பட்டனர். அதன்பிறகு, சுமார் 3 ஆண்டுகள் பிரெஞ்சு அரசாங்கத்தின் கொடி புனித ஜார்ஜ் கோட்டையில் பறந்தது. பின்னர், ஐரோப்பாவில் செய்யப்பட்ட ''அக்ஸ் லா சாப்பல்'' என்ற உடன்படிக்கை மூலம் மீண்டும் ஆங்கிலேயர் வசம் ஆட்சி சென்றது.

இரும்புக் கோட்டை

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதராஸ் பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், வெற்றி கிட்டவில்லை. அதன்பிறகு, மைசூரு ஹைதர் அலியின் (திப்பு சுல்தானின் தந்தை) குதிரைப் படையினர் பல இடங்களை சூறையாடிவிட்டு, புனித ஜார்ஜ் கோட்டை அகழி வரை நெருங்கி வந்து அச்சுறுத்தினர். ஆனாலும், கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. இப்படி, பல இடர்பாடுகளை கோட்டை சந்தித்தாலும், ஆங்கிலேயர்களின் இரும்புக் கோட்டையாகவே இருந்து வந்தது.

காலம் செல்லச் செல்ல புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள பகுதி வளர்ச்சி அடைந்து, சிறிய பட்டணமாக உருவானது. ஆங்கிலேயர்கள் வசித்த பகுதி 'வெள்ளையர் நகரம்' என்றும், தெலுங்கர்கள், தமிழர்கள் வாழ்ந்த பகுதி 'கருப்பர் நகரம்' என்றும் அழைக்கப்பட்டது. வெள்ளையர் நகரத்தின் எல்லைக்குள் புனித ஜார்ஜ் கோட்டை இருந்தது. கோட்டைக்கும், சட்டக் கல்லூரிக்கும் இடையே உள்ள பகுதி கருப்பர் நகரமாக அடையாளம் காட்டப்பட்டது. கருப்பர் நகரத்தில் இருந்த 90 சதவீதம் பேர் தெலுங்கர்கள், மீதி இருந்தவர்களே தமிழர்கள்.

வண்ணாரப்பேட்டை வந்தது எப்படி?

ஆங்கிலேயர்களின் வியாபாரம் பெரும்பாலும் துணிகளை சார்ந்ததாகவே இருந்தது. அதனால், ஆடை நெசவாளர்களையும், நூல் நூற்பவர்களையும் அருகிலேயே வைத்துக்கொண்டனர். அன்று 50 நெசவாளர் குடும்பங்கள் தங்கிய தெரு, நெசவாளர் தெரு என்றே அழைக்கப்பட்டது. தற்போதும் அது நைனியப்பன் தெரு என்ற பெயரோடு ஜார்ஜ் டவுனில் இருக்கிறது. திருவொற்றியூர் அருகேயுள்ள காலடிப்பேட்டையில், அன்றைய கவர்னர் காலட், பல நெசவாளர் குடும்பங்களை குடியேற வைத்து, தனது பெயரையே சூட்டினார். அதுவே, பின்நாளில் காலடிபேட்டை ஆனது. மேற்கொண்டும், நிறைய நெசவாளர்கள் தேவைப்பட்டதால், அவர்களை ஒரு காலி இடத்தில் குடியமர்த்தி அதற்கு நெசவாளர் நகர் என்று பெயரிட்டு அழைத்தார். அதுவே இன்றைய சிந்தாதிரிப்பேட்டை ஆகும்.

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் விற்பனை செய்யும் துணிகள், கப்பலில் நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு கொண்டுவரப்பட்டதால், வியாபாரம் செய்யும் முன் துணிகளை புதிதுபோல் வெளுத்து கொடுப்பதற்கு என வேலையாட்களை வைத்திருந்தனர். அவர்களை குடியேற்றிய இடம் வாஷர்மென்பெட். அதுதான் இன்றைய வண்ணாரப்பேட்டை.

17-ம் நூற்றாண்டில் மைலாப்பூர் ஆங்கிலேயர் வசம் இருந்தது. அருகில் உள்ள சாந்தோம் பகுதி போர்ச்சுகீசியர்கள் கையில் இருந்தது. இரு பகுதிக்கும் இடையில் மண் சுவரை எழுப்பி போர்ச்சுகீசியர்கள் பிரித்தனர். பின்னர், போர்ச்சுகீசியர்களிடம் இருந்து சாந்தோமை முகமதியர் கைப்பற்றினர். பின்னர் அவர்களிடம் இருந்து பிரெஞ்சுப்படையினர் கைப்பற்றினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு டச்சுக்காரர்கள் துணையோடு மீண்டும் முகமதிய அரசு அதை கைப்பற்றியது.

சுவர் அகற்றம்

அதன்பிறகு, சாந்தோம், மைலாப்பூர் இடையே இருந்த சுவர் அகற்றப்பட்டது. சாந்தோமை விற்பனை செய்ய இருப்பதாக முகமதிய அரசு அறிவித்தது. அதை வாங்க ஆங்கிலேயர்களும், போர்ச்சுகீசியர்களும் விருப்பப்பட்டனர். ஆனால், காஸா வெரோனா என்ற பணக்கார முகமதியர் தனக்கு சாதகமாக முகமதியர் அரசாங்கத்திடம் பேசி அந்த இடத்தை 2 ஆண்டு குத்தகைக்கு பெற்றார்.அதன் பிறகு அந்த இடம் பூந்தமல்லியில் இருந்த இந்திய ஆளுமைக்கு சென்றது. பின்னாளில், பூந்தமல்லி கவர்னரிடம் பெரிய தொகை கொடுத்து மீண்டும் போர்ச்சுகீசியர்கள் வாங்கினர். அதன்பிறகு, சாந்தோம் பகுதி முகலாய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக திகழ்ந்தது. அதை நிர்வகிக்க ஆற்காடு நவாப், முகலாய பேரரசால் நியமிக்கப்பட்டார்.

3 முறை வெற்றி

1749-ம் ஆண்டு பிரெஞ்சு படைகளால் கைப்பற்றப்பட்ட மதராஸ் பட்டணம், ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஆங்கிலேயர் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்த கைமாற்றம் அன்றைய பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டூப்ளேவுக்கு மாபெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால், சாந்தோமை மட்டுமாவது கைப்பற்றிவிட திட்டமிட்டார். ஆனால், இதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாப்பிடம் நயமாக பேசி சாந்தோமை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பிரெஞ்சுக்காரர்களிடம் அடிபட்ட பாம்பாக இருந்த ஆங்கிலேயர்கள், அவர்களை பழிவாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்கான நேரம் கிடைத்தபோது, பாண்டிச்சேரியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி அங்குள்ள கோட்டை கொத்தளங்களை தரைமட்டமாக்கினர். இவ்வாறு ஆங்கிலேய படைகள் 3 முறை பிரெஞ்சுப் படைகளை வென்றிருக்கிறது.

திப்பு சுல்தான் உயிரிழப்பு

சென்னையில் உள்ள சேப்பாக்கம் அரண்மனை 17-ம் நூற்றாண்டில் கர்நாடக வாலாஜா நவாப் தங்குவதற்காக கட்டப்பட்டு, தற்போது வருவாய் துறை அலுவலகமாக விளங்குகிறது. சேப்பாக்கம் அரண்மனை கர்நாடக அரசின் ஆளுமையில் பல ஆண்டுகள் இருந்தது. அதற்கு அடையாளமாக வாலாஜா மசூதி, வாலாஜா ரோடு என்று இன்றும் பெயர் இருக்கிறது. நவாப் இறந்த பிறகு சேப்பாக்கம் அரண்மனையை ஆங்கிலேயர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் அரண்மனையில் ஆற்காடு இளவரசர் தங்கினார்.

1798-ம் ஆண்டு ராபர்ட் கிளைவ்வின் மகனான கிளைவ் பிரபு மதராசின் கவர்னராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற 6 மாதத்தில் மைசூரின் மீது படை எடுத்தார். அந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார். அதன்பிறகுதான் மதராசில் அமைதி நிலவியது.

கவர்னர் மாளிகை

அதன்பிறகு மதராசின் வளர்ச்சியில் கிளைவ் பிரபு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். கவர்னர்கள் தங்குவதற்கு ஏதுவாக 2-வது அரசு இல்லத்தை கிண்டியில் நிர்மாணித்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 19-வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் கவர்னர் எல்பின்ஸ்டன் பிரபுவால் மீண்டும் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அதுதான் இன்றைய கவர்னர் மாளிகை.

ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக்கான அடித்தளத்தை ஆழமாக வேரூன்ற செய்த பிறகு, வருமானத்தை அதிகரிக்க திட்டம் தீட்டினர். மக்கள் காற்று, தண்ணீருக்கு அடுத்து, அதிகம் உபயோகித்தது உப்பைத்தான். எனவே, உப்புக்கு வரி விதித்தனர். அந்த நேரத்தில், சென்னையில் 'சால்ட் குவார்ட்டர்ஸ்' என்ற இடத்தில் உப்பை சேமித்து வைத்தனர். அந்த இடம் இன்றும் நினைவுச் சின்னமாக இருக்கிறது.

அடிமைச் சங்கிலி உடைந்தது

உப்புக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். போராட்டம் நாடெங்கும் எழுச்சி பெற்றது. இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் அகிம்சையை கையில் ஏந்தி மகாத்மா காந்தி போராட்டம் நடத்தினார். சுதந்திர தீ நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. எத்தனையோ தலைவர்கள், வீரர்களின் உயிர் தியாகத்துக்கு பிறகு 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆங்கிலேயர்கள் குடும்பத்துடன் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர். சுமார் 300 ஆண்டு காலமாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுக் கிடந்த அடிமைச் சங்கிலி உடைந்தது. மக்களாட்சி மலர்ந்தது.

நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கி 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சுதந்திர தினத்தை கொண்டாடினோம். மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என்று காலத்துக்கு ஏற்ப பெயர் மாறி, இன்றைக்கு சென்னை என்று அழைக்கப்படும் இந்த மாநகரம், நவீன இந்தியாவின் அடையாளமாக இருக்கிறது. புதிய.. புதிய.. கட்டிடங்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் என இரவையும் பகலாக்கி, ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்கிறது.

அன்னையான சென்னை

தற்போது, தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடியை தாண்டிவிட்டது. அதில், 1 கோடி பேருக்கு சென்னை மாநகரம்தான் வாழ்வு அளிக்கிறது. இந்த ஒரு கோடி பேருக்கும் பெற்ற தாய் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், செவிலித்தாய் அனைவருக்கும் சென்னைதான். வாழ்வளித்துவரும் 'அன்னை' மாநகரான 'சென்னை' மாநகரை போற்றுவோம்.

பாரம்பரிய கட்டிடங்கள் உருவானது எப்போது?

சென்னையில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் கட்டப்பட்ட ஆண்டுகளின்

விவரம் வருமாறு:-

806 - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்.

820 - திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்.

970 - மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோவில்.

1516 - பிரகாச மாதா ஆலயம்.

1523 - சாந்தோம் தேவாலயம்.

1640 - புனித ஜார்ஜ் கோட்டை

(தற்போதைய தலைமைச்செயலகம்).

1680 - கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயம்.

1768 - சேப்பாக்கம் கலச மகால்.

1795 - திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி.

1819 - சென்னை அரசு கண் ஆஸ்பத்திரி.

1821 - வேப்பேரி புனித ஆண்ட்ரூ தேவாலயம்.

1835 - சென்னை மருத்துவக் கல்லூரி.

1837 - சென்னை மத்திய சிறை.

1842 - முதல் கலங்கரை விளக்கம்.

1846 - பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி.

1851 - எழும்பூர் அரசு அருங்காட்சியகம்.

1856 - ராயபுரம் ரெயில் நிலையம்.

1857 - சென்னை பல்கலைக்கழகம்.

1864 - மாநிலக் கல்லூரி.

1873 - சென்டிரல் ரெயில் நிலையம்.

1888 - விக்டோரியா ஹால்.

1889 - சென்னை ஐகோர்ட்டு கட்டிடம்.

1891 - சென்னை சட்டக் கல்லூரி.

1905 - எழும்பூர் ரெயில் நிலையம்.

1909 - ரிப்பன் கட்டிடம்.

1911 - ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி.

1915 - தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகம்.

1925 - லயோலா கல்லூரி.

1928 - அரசு காசநோய் ஆஸ்பத்திரி.

1938 - ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி.

1952 - ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம்.

1953 - அரசு பல் மருத்துவ கல்லூரி.

1954 - அடையாறு புற்றுநோய் மையம்.

1956 - காந்தி மண்டபம்.

1959 - கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் எல்.ஐ.சி. கட்டிடம்.

1960 - கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி.

1971 - கிண்டி பாம்பு பண்ணை.

1974 - கிண்டி ராஜாஜி மண்டபம்.

1975 - கிண்டி காமராஜர் மண்டபம் மற்றும் வள்ளுவர் கோட்டம்.

1976 - தற்போதைய கலங்கரை விளக்கம்.

1983 - வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா.

1988 - பிர்லா கோளரங்கம்.

நத்தை போல் ஊர்ந்த டிராம் வண்டிகள்

இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தில், பொது போக்குவரத்துக்கு பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை என பல்வேறு நவீன வசதிகள் இருக்கின்றன. ஆனால், அன்றைக்கு மாட்டு வண்டிதான் போக்குவரத்து வாகனம். பெரும்பாலான இடங்களுக்கு மக்கள் கால்நடையாகவே சென்று வந்தனர். இந்த நேரத்தில், 1895-ம் ஆண்டு மெட்ராஸ் எலெக்ட்ரிசிட்டி சிஸ்டம் என்ற கம்பெனி, டிராம் வண்டி போக்குவரத்தை தொடங்கியது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நத்தை போல் ஊர்ந்து செல்லும் இந்த வாகனங்கள் தான் அப்போது சென்னையில் வலம் வந்தன. தங்கச் சாலை, கடற்கரைச் சாலை, பாரிஸ் கார்னர், மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் டிராம் வண்டிகள் ஓடின. சாலைகளில் அமைக்கப்பட்ட மின்சார ஒயர்களை தொட்டுக் கொண்டு இயங்கிய டிராம் வண்டிகள் தான் மின்சார ரெயில்களுக்கு முன்னோடி. அப்போது, சென்னையில் 100 டிராம் வண்டிகள் வரை இயங்கி இருக்கின்றன. இந்த வண்டிகளை நிறுத்துவதற்கான ஷெட் வேப்பேரியில் உள்ள தினத்தந்தி அலுவலகம், பெரியார் திடல் பகுதியில் இருந்துள்ளது. 1931-ம் ஆண்டு ரெயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, பயன்பாடு குறைந்ததால், 1953-ம் ஆண்டுடன் டிராம் வண்டிகள் தங்களது சேவையை நிறுத்திக்கொண்டன.

ஜீவ நதியாக ஓடிய கூவம் நதி

சென்னையில் இன்றைக்கு கருப்பு நிறத்தில் கழிவுநீர் கால்வாயாக ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதியின் பெயரை கேட்டாலே, அனைவரும் மூக்கை பொத்திக் கொள்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் மதராஸ் பட்டண மக்களுக்கு வாழ்வு அளிக்கும் ஜீவ நதியாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்களும் கூவம் நதியின் அழகில் மயங்கியே, வங்கக் கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள்.

கோவில்களுக்கு சென்ற பக்தர்கள் கூவம் நதியில் நீராடிய பிறகே, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார்கள். படகு போக்குவரத்தும் நடந்திருக்கிறது. ரோமாபுரி மன்னர்கள் காலத்தில் கூவம் ஆற்றின் வழியே வர்த்தகமே நடந்திருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில், ரோம் தேசத்தின் அழகு ஜாடிகள், நாணயங்கள் கூவம் ஆற்றின் கரையோரங்களில் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்டன.

இப்படி, 1935-ம் ஆண்டு வரை கூவம் நதியில் சுத்தமான நீரே பாய்ந்து ஓடியிருக்கிறது. அமைந்தகரை உள்பட ஒரு சில பகுதிகளில் சலவை தொழிலாளர்கள் துணி துவைத்து உலர்த்தி இருக்கின்றனர். அதன்பிறகு, திருவல்லிக்கேணி பகுதியில் வந்த சாயத் தொழிற்சாலைகள், கரையோரம் மக்கள் பெருக்கத்தின் காரணமாக கூவம் நதி சீர்கெடத் தொடங்கியது. படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, கடைசியில் கழிவுநீர் கால்வாயாகவே மாற்றப்பட்டது.

இந்த நிலையில், 1967-ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றதும் கூவம் நதியை காப்பாற்ற திட்டம் வகுக்கப்பட்டது. அவர் மறைவுக்கு பிறகு, கருணாநிதி முதல்-அமைச்சர் ஆனதும் அந்த திட்டம் விரைவுபடுத்தப்பட்டது. 1975-ம் ஆண்டு கூவம் நதியில் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. சீருடை அணிந்த படகோட்டிகள் துடுப்பு போட்டனர். ஸ்பெர்டாங்க் ரோடு, கிரீம்ஸ் ரோடு, காயிதே மில்லத் கல்லூரி, கெயிட்டி தியேட்டர் ஆகிய இடங்களில் படகுத் துறைகள் அமைக்கப்பட்டன. அதற்கு, குமணன் துறை, குகன் துறை, பாரி துறை என்றெல்லாம் பெயரிடப்பட்டன. ஆனால், கூவம் நதியில் இருந்து எழுந்த துர்நாற்றம், படகில் செல்பவர்களை மூக்கைப் பிடிக்க வைத்தது. இதனால், யாரும் படகு பயணத்தை விரும்பவில்லை. நாளடைவில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. மொத்தத்தில் இப்போது, கூவம் நதி கழிவுநீர் கால்வாயாக, சென்னையின் கருப்பு அடையாளமாக இருந்து வருகிறது. அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவற்றின் பரிதாப நிலையும் அதுவே.


Next Story