கோடை காலத்தில் அறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?


கோடை காலத்தில் அறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?
x

கோடை காலத்தில் சீலீங் பேன் பயன்படுத்துவதற்கு பதிலாக டேபிள் பேன் பயன்படுத்தலாம். ‘கூல் ஜெல் போம்’ எனப்படும் நுட்பம் கொண்டு தயாரிக்கப்படும் மெத்தைகள் உடலின் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக பகல் பொழுதில் மட்டுமின்றி இரவிலும் வியர்வையின் நாற்றத்தை நுகர்ந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் மின் விசிறி சுழன்றாலும் வெப்பத்தின் சுவடுகள் அதில் பிரதிபலிக்கிறது. படுக்கை அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகை செய்யவும் சில எளிதான மாற்றங்களை செய்யலாம். அது குறித்து பார்ப்போம்.

மெத்தை தேர்வு:

'கூல் ஜெல் போம்' எனப்படும் நுட்பம் கொண்டு தயாரிக்கப்படும் மெத்தைகள் உடலின் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை இழுக்கும் தன்மை கொண்டவை. அதில் இருக்கும் ஒருவகை ஜெல் வெப்பத்தை வெளியேற்றி இரவு முழுவதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

மின் விசிறி பயன்பாடு:

கோடை காலத்தில் சீலீங் பேன் பயன்படுத்துவதற்கு பதிலாக டேபிள் பேன் பயன்படுத்தலாம். அவை சீலிங் பேனுடன் ஒப்பிடும்போது வெப்ப காற்றை உமிழாது. கையடக்க மின்விசிறியுடன் ஐஸ்கட்டிகளை சேர்த்து குளிர் காற்றை பரப்பும் வகையிலான சாதனங்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அவற்றையும் உபயோகிக்கலாம். ஏர் கண்டிஷனர் பயன்படுத்துவதாக இருந்தால் 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிப்பது அறைக்குள் சீராக குளிர்ச்சியை தக்கவைக்க உதவும்.

வெளிர் நிற படுக்கை விரிப்பு:

அடர் நிறம் கொண்ட படுக்கை விரிப்புகள் வெப்பத்தை உறிஞ்சி படுக்கை அறையை சூடாக உணர வைக்கும். அதற்கு மாறாக வெளிர் நிற படுக்கை விரிப்புகள் சூரிய ஒளியை உள்வாங்காமல் எதிரொலிக்கும். பகலில் அறையை இதமாக வைத்திருக்க உதவும். இரவிலும் இதமான சூழலை தக்கவைத்துக்கொள்ள துணைபுரியும்.

குளிக்கும் பழக்கம்:

தூங்க செல்வதற்கு முன்பு குளிர்ச்சியான நீரில் குளிப்பது உடல் வெப்ப நிலையை குறைத்து தூக்கத்தை வரவழைக்கும். புத்துணர்ச்சியை உண்டாக்கும். நிம்மதியாக உணரவைக்கும்.

நீரேற்றத்தை தக்கவைத்தல்:

உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும், அதற்கேற்ப தண்ணீர் பருகுவதும் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும். பகல் வேளையில் மட்டுமல்ல இரவு நேரத்திலும் உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு படுக்கை அறையில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்திருக்கலாம். இரவில் விழிப்பு வந்ததும் தாகமாக எடுப்பதாக உணர்ந்தால் சிறிது நீர் பருகலாம். தூங்குவதற்கு முன்பு மது, காபின், சர்க்கரை பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். அவை நீரிழப்பை ஏற்படுத்தும். தூக்கத்தையும் பாதிக்கும்.

திரைச்சீலைகள்:

படுக்கை அறைக்குள் சூரிய ஒளி படர்வது அறையின் வெப்பநிலையை விரைவாக உயர்த்தும். அறை வெப்பமடைவதை தடுக்கும் வகையிலான திரைச்சீலைகளை ஜன்னலில் தொங்கவிடவேண்டும். பகல் பொழுதில் சூரிய வெளிச்சம் அறைக்குள் வராதபடி தடுத்தால் இரவில் அறை வெப்பநிலையின் வீரியத்தை குறைத்துவிடலாம். திரைச்சீலைகள் வெளிப்புற இரைச்சலை குறைத்து நிம்மதியான தூக்க சூழலையும் உருவாக்கும்.

ஜன்னல் கதவுகள்:

மாலை நேரத்தில் வெளிப்புற வெப்பநிலை குறைய தொடங்கிவிடும். அறைக்குள் குளிர்ந்த காற்று பரவுவதற்கு சரியான நேரமாகவும் அமைந்துவிடும். எனவே மாலையில் ஜன்னல் கதவை திறந்து வையுங்கள். இரவு நெருங்கியதும் மூடி விடுங்கள்.

இயற்கை இழைகள்:

பருத்தி, இலவம் பஞ்சு, மூங்கில் போன்ற இயற்கை இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மெத்தைகளை பயன்படுத்துங்கள். அவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட கட்டமைப்புகளை அறைக்குள் பயன்படுத்துவதும் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும். இந்த பொருட்கள் வியர்வையை அகற்றி இரவில் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். பாலியஸ்டர் போன்ற செயற்கை பொருட்களை தவிர்க்க வேண்டும். அவை வெப்பத்தைத் தக்கவைத்து சூடாக உணரவைக்கும்.

எலெக்ட்ரானிக் சாதனங்கள்:

தொலைக்காட்சிகள், கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் வெப்பத்தை உருவாக்கக்கூடியவை. அவை அறைக்குள் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகிவிடும். படுக்கையறையை இதமாக வைத்திருக்க தூங்க செல்வதற்கு முன்பு குறைந்தது ஒரு மணி நேரமாவது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ச்சியான தலையணை:

தூங்கும்போது தலை மற்றும் கழுத்து பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வகையில் 'கூலிங் தலையணை'கள் உருவாக்கப்படுகின்றன. அவை ஒருவித ஜெல் கொண்ட போம் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அதன் மீது தலை வைத்து படுத்தால் குளிர்ச்சியான சூழலை உணர முடியும். சவுகரியமாக தூங்குவதற்கும் வழிவகை செய்யும்.


Next Story