5 ஜி போனுக்கு தயாராகும் இந்தியர்கள்


5 ஜி போனுக்கு தயாராகும் இந்தியர்கள்
x

மக்கள்தொகையில் குறிப்பிட்ட அளவினர் 5 ஜி சேவையை உபயோகிப்பதற்கு தயாராக இருப்பதால், இந்திய சந்தையில் 5ஜி சேவைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்த ஆண்டுக்குள் சுமார் 31 மில்லியன் (சுமார் 3 கோடி) இந்தியர்கள் 5ஜி போன்களுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5ஜி தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பை விசாலப்படுத்துகிறது என்று புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. எரிக்சன் நுகர்வோர் ஆய்வக அறிக்கையின்படி, இந்தியாவில் 4ஜி செல்போனுடன் ஒப்பிடும்போது 5ஜியின் நெட்வொர்க் தரம் 30 சதவீதம் மேம்பட்டுள்ளது.

இந்தியர்களை பொறுத்தவரை நேரலை நிகழ்ச்சிகள், எச்.டி. வீடியோக்களை பார்வையிடுதல், பதிவேற்றம் செய்தல், வீடியோ அழைப்புகள், மொபைல் கேமிங் விளையாடுதல் என 5ஜி சேவையை அதிகம் பயன்படுத்தும் விஷயத்தில் மற்ற நாட்டினருடன் ஒப்பிடுகையில் தனித்து நிற்கின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா, சீனா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் ஆரம்பகால 5ஜி சேவையை பயன்படுத்தியதுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் வாரத்திற்கு இரண்டு மணிநேரம் கூடுதலாக செலவிடுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

"உலகளாவிய ஆய்வு முடிவுகளின்படி 5ஜியை பொறுத்தவரை இந்தியா முன்னிலை வகிக்கும் திறனை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மக்கள்தொகையில் குறிப்பிட்ட அளவினர் 5 ஜி சேவையை உபயோகிப்பதற்கு தயாராக இருப்பதால், இந்திய சந்தையில் 5ஜி சேவைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன'' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

28 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 1.5 பில்லியன் நுகர்வோரின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 50 மில்லியன் 5ஜி பயனர்கள் மற்றும் 250 மில்லியன் நுகர்வோரின் கருத்துகளையும் இந்த கணக்கெடுப்பு பிரதிபலிக்கிறது.

அதன்படி ஐந்தில் ஒருவர் புதுமையான சேவைகள் மற்றும் வேறுபட்ட 5ஜி இணைப்புகளுக்கு 14 சதவீதம் பிரீமியம் தொகை செலுத்த தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

''இந்தியாவில் விரைவாக 5ஜி சேவையை ஏற்றுக்கொள்ளல், நெட்வொர்க் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், 5ஜி வளர்ச்சியின் அடுத்த அலைக்கு அடித்தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்பது எரிக்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நிதின் பன்சாலின் கருத்தாக இருக்கிறது.


Next Story