கக்கனின் பேத்தி டி.ஐ.ஜி. ராஜேஸ்வரியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்!


கக்கனின் பேத்தி டி.ஐ.ஜி. ராஜேஸ்வரியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்!
x

நேர்மையான அரசியல் தலைவர் என்ற அடையாளத்துக்கு சொந்தக்காரர் கக்கன். இப்படியும் ஒரு தலைவர் தமிழ்நாட்டு அரசியலில் இருந்திருக்கிறாரா என்று இன்றைய தலைமுறையினர் வியக்கத்தக்க அளவில் வாழ்ந்து மறைந்தவர். எந்த நிலையிலும் உண்மையில் இருந்து கடுகு அளவு கூட பிறழாதவர். காமராஜர் அமைச்சரவையில் போலீஸ் துறை மந்திரியாக செயல்பட்டவர்.

கக்கன்- சொர்ணம் பாரதி தம்பதிக்கு பத்மநாதன், பாக்கியநாதன், காசி விஸ்வநாதன், சத்தியநாதன், நடராஜமூர்த்தி ஆகிய 5 மகன்களும், கஸ்தூரிபாய் என்ற மகளும் இருந்தனர்.

கஸ்தூரிபாய்- சிவசாமி தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது 3-வது மகள் ராஜேஸ்வரி. இவர் சேலத்தில் போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய பணி அனுபவங்களையும், தாத்தா குறித்த நினைவலைகளையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

"என்னுடைய தாய் கஸ்தூரிபாய், தந்தை சிவசாமி. எனக்கு சொர்ணலதா, மேகலா ஆகிய 2 அக்காள்களும், சீனிவாசன் என்ற தம்பியும் உள்ளனர். என்னுடைய தந்தை அந்தமானில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்தார். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே அந்தமானில்தான். அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் என்னுடைய பள்ளிக்கல்வி முடிந்தது. எம்.எஸ்.சி. அக்ரி படிப்பை முடித்த நான் 1997-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தேன்.

பணியில் சேர்ந்த பிறகுதான் தமிழ் கற்றுக்கொண்டேன். என்னுடைய கணவர் சிவகுமார், தென்னக ரெயில்வேயில் பயணிகள் நல தலைமை மேலாளர் என்ற பொறுப்பில் உள்ளார். மகன் ராகுல் ஆதித்யா, சட்டப்படிப்பு படித்து வருகிறான்.

அந்தமானில் வசித்த சமயத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவோம். என்னுடைய தாத்தாவை நன்றாக அறிவேன். தாத்தா வீட்டில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும். ஓடி, ஆடி விளையாடினாலும், மூத்த அக்காள் சொர்ணலதா மீதுதான் தாத்தாவுக்கு கொள்ளை பிரியம். நாங்கள் ஒருமுறை அந்தமான் செல்ல கப்பல் ஏறும் நேரத்தில் என்னுடைய தாத்தா, அக்காள் சொர்ணலதாவை எங்கேயோ மறைத்து வைத்துக் கொண்டு, நான் பிள்ளையை பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறி விட்டார். அந்த அளவுக்கு பெண் குழந்தைகள் மீது தாத்தாவுக்கு அளவு கடந்த அன்பு.

நான் ஒரே ஒருமுறை காமராஜர் வீட்டுக்கு சென்று இருக்கிறேன். அவர் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். எங்கள் தாத்தா வீடு எப்போதும் திறந்தேதான் இருக்கும். அந்த வீட்டுக்கு பூட்டு என்பதே கிடையாது. தாத்தாவை பார்க்க யாராவது வந்தால், சாப்பிட வைத்துதான் அனுப்புவார்'' என்பவர் தனது மலரும் நினைவுகளில் ஒன்றை நினைவு கூர்ந்தார்.

''தாத்தா போலீஸ் மந்திரியாக இருந்த காலகட்டத்தில் தன் உடன்பிறந்த அண்ணன், போலீஸ் வேலைக்கு சிபாரிசுக்கு வந்தபோது கூட செய்ய மறுத்து விட்டார். 'திறமை இருந்தால் நீயே போலீசாக பணியில் சேர்ந்து கொள்' என்று கூறி விட்டார். இந்திய நாட்டில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக, இன்று பலரால் பேசப்படும் நபராக என்னுடைய தாத்தா வாழ்ந்து மறைந்தவர் என்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவருடைய செயல்பாடுகள்தான் எனக்குள் உந்து சக்தியாக இருந்து என்னை செயல்பட வைக்கிறது'' என்று தாத்தாவின் நினைவுகளை பெருமிதத்துடன் கூறினார்.

போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய 5 மொழிகள் தெரியும். ஐ.பி.எஸ். தேர்வில் வென்று போலீஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் காவல்துறையின் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

''ஐ.பி.எஸ். அதிகாரியான பிறகு என்னுடைய பூர்வீக ஊரான மதுரையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவை தொடர்ந்து சென்னை மேற்கு இணை கமிஷனராக பொறுப்பேற்றேன். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர விரும்புகிறேன். நான் மேற்கு மண்டல இணை கமிஷனராக பணியில் இருந்தபோது, ராணுவ முகாமில் 13 வயது சிறுவன் தில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். அப்போது 7 நாட்களுக்குள் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். ராணுவ முகாம் என்பதால் அங்குள்ள அதிகாரிகள் அனைவரும் துப்பாக்கி வைத்திருந்தனர். எனவே குற்றவாளியை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. இருந்தாலும் 24 மணி நேரமும் அங்கேயே முகாமிட்டு 3 நாட்களுக்குள் குற்றவாளியை கண்டுபிடித்தோம்'' என்பவர் காவல் சிறார் மன்றங்களுக்கு புத்துயிர் கொடுத்து சிறப்பாக செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.

''தற்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் என்னை காவல் சிறார் மன்றங்களின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்தார். அப்போது, சிறார் மன்றங்களில் உள்ள குழந்தைகளை கல்வி சுற்றுலா அழைத்து செல்லுதல், அவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளைசெய்தல் மட்டுமின்றி அவர்களை நல்ல குடிமகனாக வளர்வதற்கான சூழ்நிலையை இந்த சிறார் மன்றங்கள் மூலம் உருவாக்கி கொடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு போலீஸ் அதிகாரியின் வேலை, காவல் பணி மட்டும் அல்ல. சமூக பணியும்தான் என்பதற்கு நானே உதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்து செயல்படுவேன். தற்போது 'சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக வந்த பிறகு, சேலம் சரகத்தில் சிறார் மன்றங்களுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். அதன்மூலம் எதிர்காலத்தில் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்' என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கினேன்.

என்னுடைய முயற்சிக்கு 4 மாவட்டங்களில் உள்ள சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என காவல்துறையை சேர்ந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் 41 சிறார் மன்றங்களை உருவாக்கி உள்ளோம். சிறார் மன்ற சிறுவர்களை வாரம் ஒருமுறை சந்தித்து வருகிறேன். பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் அவர்களுக்கு விளையாட்டு, பொழுபோக்கு, டியூசன் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கிறோம். சிறு குழந்தைகளிடம் என்னென்ன திறமைகள் உள்ளன என்பதை கண்டறிந்து அவர்களது கனவுகளை மெய்யாக்கும் இடமாகவும் இந்த காவல் சிறார் மன்றம் செயல்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் காவல் சிறார் மன்றங்கள் மூலம் இன்று எத்தனையோ பேர் காவல்துறையிலும், அரசு அலுவலகங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். காவல் பணிக்கு இடையிலும், இப்படி எதிர்கால சமுதாயத்தின் அங்கமான சிறு குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது மனநிறைவாக உள்ளது'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் கக்கன் பேத்தி ராஜேஸ்வரி.

காவல்துறையில் பணியை தொடங்கிய ராஜேஸ்வரி, கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சி.பி.சி.ஐ.டி.யில் பணிபுரிந்தார். அப்போது 2012-ம் ஆண்டு புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டதற்கு முதல்- அமைச்சர் விருதை பெற்றார். தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்துள்ளார். 2017-ம் ஆண்டு தமிழக அரசின் பதக்கம், 2020-ம் ஆண்டு சிறந்த போலீஸ் அதிகாரிக்கான ஜனாதிபதி விருது, 2020-ம் ஆண்டு தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக முதல்-அமைச்சரிடம் இருந்து பாராட்டு கடிதம் பெற்றுள்ளார். இவர், விளையாட்டு, உடற்கல்வியிலும் ஆர்வம் கொண்டவர். 2003-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பேட்மிட்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவிலும் தொடர்ந்து 15 ஆண்டுகள் சாம்பியனாக திகழ்ந்துள்ளார்.

அரசியல் மூலம் அடித்தட்டு மக்களை வாழ வைத்த கக்கன் வழியில் அவருடைய பேத்தி போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, சிறார் மன்றங்கள் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறார். அவரது முயற்சிக்கு சபாஷ்!.

சிறார் மன்றங்களின் செயல்பாடுகள்

* பள்ளிக்கு செல்லும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்துதல்.

* விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுத்து விளையாட்டுத்துறையில் அவர்களை ஈடுபடுத்துதல்.

* கணினி பயிற்சி, ஓவியப்பயிற்சி மற்றும் பயனுள்ள புத்தகங்கள் படிக்க நூலக வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.

* வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட கல்வி சுற்றுலாவாக அழைத்து செல்லுதல்.

* மருத்துவ முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குதல்.

* சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய சிறுவர் மற்றும் சிறுமியர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், நல்வழிப்படுத்தவும் காவல் சிறார் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறார் மன்றங்கள் கடந்து வந்த பாதை

நாகர்கோவிலில் 7-3-1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1967-ம் ஆண்டு சென்னை அசோக் நகரிலும், 1976-ம் ஆண்டு சென்னை சிந்தாதரிப்பேட்டை மற்றும் 1978-ம் ஆண்டு சென்னை காசிமேட்டிலும் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் உட்பட்ட முக்கிய இடங்களில் காவல் சிறார் மன்றங்களை தமிழக அரசு உருவாக்கியது.

தற்போது சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் 41 சிறார் மன்றங்களில் 890 சிறுவர்களும், 483 சிறுமியர்களும் என 1,373 பேர் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story