'மெட்ராஸ் ஐ': கவனத்தில் கொள்ள வேண்டியவை


மெட்ராஸ் ஐ: கவனத்தில் கொள்ள வேண்டியவை
x

மழைக்காலம் நெருங்கும் சமயங்களில் அதிகம் பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று மெட்ராஸ் ஐ. இது வைரஸ், தொற்றுக்களால் ஏற்படக்கூடியது. இந்த நோய்த்தொற்று உள்ளவர்களின் கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். கண்களில் உறுத்தல், கண் எரிச்சல், நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். வைரஸ் தொற்றின் வீரியம் அதிகமாக இருந்தால் கருவிழி பாதிப்படையக்கூடும். கண்களில் வீக்கம், பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தென்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்ப்போம்.

செய்ய வேண்டியவை:

* மெட்ராஸ் ஐ அறிகுறிகள் வெளிப்படத்தொடங்கினால் கைகளை கண்களுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. கண்களை அழுத்துவது, மென்மையாக விரல்களால் தடவுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

* கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதனை துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும். அதனை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

* கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானது. அது விரைவில் நோய்த்தொற்றுவில் இருந்து விடுபட உதவும்.

* வைட்டமின் ஏ, சி போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

* மெட்ராஸ் ஐ கண்கள் பார்ப்பது மூலம் பரவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களில் தங்கி இருக்கும் வைரஸ்கள் மூலமே பரவும் என்பதால் சுத்தத்தை தீவிரமாக பேண வேண்டும்.

* நோய் பாதிப்புக்கு ஆளானவர் கருப்பு வண்ண கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.

* குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை:

குடும்ப உறுப்பினர்களை தொட்டு பேசுவது, கைகளை சுத்தம் செய்யாமல் அவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்க கூடாது.

* சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிக்கக்கூடாது. உரிய பரிசோதனை செய்த பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* மருந்து போட்ட பின்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

* டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு எளிதாக பரவும். அதனால் நோய்த்தொற்றுக்கு ஆளானவர் தனி அறையில் அமர்ந்து பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

* குடும்பத்தில் மற்றவர்களுக்கு பரவினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய மருந்தை பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொருவருக்கும் வைரஸ் தொற்றின் தாக்கம் மாறுபடக்கூடும். அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் மருந்துகளையே உபயோகப்படுத்த வேண்டும்.


Next Story