ஓ.டி.டி. நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் திரைப்படங்கள்


ஓ.டி.டி. நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் திரைப்படங்கள்
x

சினிமா தொடங்கிய காலத்தில் ஒரு திரைப்படம் வெளியாவதை, அந்த படத்தின் தயாரிப்பாளர்தான் முடிவு செய்வார். சில காலகட்டங்களுக்குப் பிறகு, தயாரிப்பாளர்களுடன் இணைந்து இயக்குனர்களும், பெரிய அளவில் வளர்ந்த நடிகர்களும் கூட சில நேரங்களில், படங்கள் இந்த தேதியில் வெளி வந்தால் நன்றாக இருக்கும் என்பதை நிர்ணயிக்கும் நிலையில் இருந்தார்கள்.

ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்தியாவில் வெளியான அனைத்து மொழி திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியையும் முடிவு செய்யும் இடத்தில், ஓ.டி.டி. நிறுவனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் அமேசான், நெட்பிளிக்ஸ், சோனி லைவ் உள்பட சில முன்னணி ஓ.டி.டி. நிறுவனங்கள் இருக்கின்றன.

ஒரு காலத்தில் தியேட்டர்களின் வாயிலாக மட்டுமே சினிமா பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஓ.டி.டி. என்ற இணைய வழியில் பார்க்கும் வாய்ப்பையும் நவீன தொழில்நுட்பம் தந்துள்ளது. அங்கும் இங்குமாக ஒன்றிரண்டு திரைப்படங்கள், குறும்படங்கள், வெப் சீரிஸ் என்று வெளியிட்டுக் கொண்டிருந்த ஓ.டி.டி. நிறுவனங்களின் கைகளில், கொரோனா காலகட்டத்தில் முழுமையாக சிக்கிக் கொண்டது, இந்திய சினிமாக்கள்.

கொரோனா இந்தியாவில் தலைவிரித்தாடிய நேரத்தில், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தது. அந்த நேரத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களை மகிழ்விக்க, ஓ.டி.டி. நிறுவனங்களில் திரைப்படத்தை வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லாத காரணத்தால், ஓ.டி.டி. நிறுவனங்களின் பலம் அதிகரித்தது. அதன்பின்னர் திரைத்துறையின் மூலமாக புரளும் பெரும் பணத்தின் பின்னணியை அறிந்து கொண்ட ஓ.டி.டி. தளங்கள், அதை தங்களின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டதுதான் அவற்றின் சாமர்த்தியம்.

இப்போது தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியானாலும், ஒரு தயாரிப்பாளரின் சுமையை பெரும்பாலும் குறைக்கும் இடத்தில், ஓ.டி.டி. நிறுவனங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். தியேட்டரில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக, ஓ.டி.டி. மற்றும் சாட்டிலைட் உரிமைக்கான சந்தை இங்கே பெரியதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களை பெரும் தொகை கொடுத்து வாங்க ஓ.டி.டி. நிறுவனங்களுக்குள் போட்டி நிலவுகிறது. இந்த போட்டி, தயாரிப்பு தொகையில் பெரும் அளவுக்கு இருப்பதால், தயாாிப்பாளர்களின் சுமை குறைவதாகவும், அதனால் ஓ.டி.டி. நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் தயாரிப்பாளர்கள் சென்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு சில நேரங்களில் ஒரு திரைப்படத்தின் மொத்த செலவுத் தொகையைக்கூட ஓ.டி.டி. மற்றும் சாட்டிலைட் உரிமங்களின் மூலமே தயாரிப்பாளர்கள் பெற்று விடுகிறார்களாம். அதன் பின்னர் தியேட்டர் மூலமாக வரும் தொகை கூடுதல் லாபம்தான் என்கிறார்கள். எனவே அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், பெரிய நடிகர்களும், ஓ.டி.டி. நிறுவனங்கள் சொல்கின்றபடி, தங்களின் திரைப்படங்களை வெளியிடவும் தயாராக இருக்கிறார்களாம்.

ஒரு புதிய படம் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்கு பின்னர்தான் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகின்றன. ஒரே நாளில் ஒரே மொழியில் இரண்டு, மூன்று திரைப்படங்களை எந்த ஓ.டி.டி, நிறுவனமும் வெளியிடுவதில்லை. அப்படி ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே மொழி திரைப்படங்களை வெளியிட்டால், ஓ.டி.டி. நிறுவனங்களின் அதிக லாபம் தடைபடுமாம். எனவே இந்த காரணத்தை கவனத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களிடம் இந்த நாளில் உங்கள் திரைப்படங்களை வெளியிடுங்கள். அப்போதுதான் உங்கள் திரைப்படத்தை நாங்கள் வாங்கிக்கொள்வோம் என்று நிபந்தனை விதிக்கிறார்களாம். தங்களின் பெரும் நிதிச் சுமையை குறைக்கும் இடமாக இருப்பதால், ஓ.டி.டி. நிறுவன நிர்பந்தத்திற்கு, தயாரிப்பாளர்களும் ஒத்துழைக்கிறார்களாம்.

கர்நாடக மொழியில் இருந்து பான் இந்தியா திரைப்படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் 'சலார்'. 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியாவின் முக்கியமான நடிகராக மாறிய பிரபாஸ் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, 'கே.ஜி.எப்.' படத்தின் மூலமாக முக்கியமான இயக்குனராக உயர்ந்திருக்கும் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். கே.ஜி.எப். திரைப்படங்களை தயாரித்த அதே நிறுவனம்தான் 'சலார்' திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறது.

இந்தப் படம் வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தின் ஓ.டி.டி. மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கு சரியான தொகை கிடைக்காத காரணத்தால், படத்தின் வெளியீட்டு தேதி நவம்பர் மாதத்திற்கு தள்ளிப் போவதாக அறிவித்தார்கள்.

இந்த நிலையில் முக்கியமான இரண்டு ஓ.டி.டி நிறுவனங்கள் நல்ல விலைக்கு, 'சலார்' படத்தை வாங்கியிருக்கிறதாம். இதையடுத்து படத்தை வெளியிடுவதில் இருந்த சிக்கல் அகன்று விட்டதாகவும், 'சலார்' படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு திரைப்படம் வெளியாகுமா?, ஆகாதா? என்பதை ஓ.டி.டி. நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன என்பதற்கு, 'சலார்' படத்தின் இந்த வியாபாரப் போக்கே சாட்சியாக அமைந்திருக்கிறது.

அதே நேரம் பெரிய நடிகர்களின், பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களைத்தான் ஓ.டி.டி. நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள முன்வருவதாகவும், மற்ற நடிகர்களின் திரைப்படங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதும், மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

தயாரிப்பாளர்களிடம் இந்த நாளில் உங்கள் திரைப்படங்களை வெளியிடுங்கள். அப்போதுதான் உங்கள் திரைப்படத்தை நாங்கள் வாங்கிக்கொள்வோம் என்று நிபந்தனை விதிக்கிறார்களாம். தங்களின் பெரும் நிதிச் சுமையை குறைக்கும் இடமாக இருப்பதால், ஓ.டி.டி. நிறுவன நிர்பந்தத்திற்கு, தயாரிப்பாளர்களும் ஒத்துழைக்கிறார்களாம்.


Next Story