தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணி வகைகள்


தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணி வகைகள்
x

பலரும் விரும்பி சாப்பிடும் பிரியாணி வகைகள் அந்தந்த பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபட்ட சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன.

தென்னிந்தியாவில் மாறுபட்ட, சுவையான பல உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் பலரும் விரும்பி சாப்பிடும் பிரியாணி வகைகள் அந்தந்த பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபட்ட சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன. அப்படி தென்னிந்தியாவில் பிரபலமாக ருசிக்கப்படும் பிரியாணி வகைகள் உங்கள் பார்வைக்கு....

திண்டுக்கல் பிரியாணி:

காரமாக பிரியாணி சாப்பிட விரும்புபவர்களுக்கு திண்டுக்கல் பிரியாணி கூடுதல் சுவை சேர்க்கும். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி துண்டுகளில் தயாரிக்கப்படுகிறது. சீரக சம்பா அரிசிதான் இந்த பிரியாணியை தனித்துவமாக்குகிறது. அதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களும் பிரியாணியை ருசிக்க தூண்டும்.

மலபார் பிரியாணி:

இந்த பிரியாணி கேரளாவின் மலபார் பகுதியில் பிரபலமானது. இது பெரும்பாலும் சீரகச்சம்பா அரிசி என்று அழைக்கப்படும் மணம் வீசும் தானிய வகையை சேர்ந்த அரிசியில் தயாரிக்கப்படுகிறது. பிரியாணி மசாலா பொருட்களுடன் தேங்காயும் சேர்க்கப்படுவது இதன் சுவையை மெருகூட்டுகிறது.

செட்டிநாடு பிரியாணி:

தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி நாவில் உமிழ்நீர் சுரக்க வைக்கும் அளவுக்கு ருசி மிகுந்தது. கோழி, ஆட்டு இறைச்சியுடன் மிளகு மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. மிளகுதான் இந்த பிரியாணிக்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஐதராபாத் பிரியாணி:

தென்னிந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை கவரும் இந்திய பிரியாணி வகைகளுள் ஒன்றாக ஐதராபாத் பிரியாணி அறியப்படுகிறது. இந்த பிரியாணி பாசுமதி அரிசியுடன் மென்மையான தன்மை கொண்டகோழி அல்லது ஆட்டிறைச்சி கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் நறுமணம் வீசி பிரியாணி பிரியர்களை சுண்டி இழுக்க வைக்கின்றன.

ஆம்பூர் பிரியாணி:

தமிழகத்தின் ஆம்பூரை பூர்வீகமாக கொண்ட இந்த பிரியாணி மிருதுவானது. சுவையிலும் தனித்துவமானது. நறுமண சுவை ஊட்டு வதற்காக சமைப்பதற்கு முன்பு இறைச்சி முதலியவற்றை நீண்ட நேரம் எண்ணெய், நறுமணப் பொருள்களின் கலவையில் ஊற வைக்கப்படுகிறது. 'தம்' முறையிலும் சமைத்து பரிமாறப்படுகிறது.

பட்கலி பிரியாணி:

இந்த பிரியாணி கர்நாடகாவின் கடலோர நகரமான பட்கலில் தயாரிக்கப்படுகிறது. பாஸ்மதி அரிசியுடன் நறுமணப் பொருட்கள் மற்றும் இறால், மீன் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுவது இதன் சிறப்பம்சம். மாறுபட்ட பிரியாணி சுவையை விரும்புபவர்களை பட்கலி பிரியாணி கவர்ந்திழுக்கும்.

தலச்சேரி பிரியாணி:

கேரளாவில் உள்ள தலச்சேரி என்ற நகரம், பிரியாணி தயாரிப்பிற்கு பெயர் பெற்றது. பாரம்பரிய பாஸ்மதி அரிசி அல்லாமல் சிறிய மற்றும் தடிமனாக கைமா அரிசி என்று அழைக்கப்படும் சிறப்பு வகை அரிசியில் சமைக்கப்படுகிறது. இது பிரியாணிக்கு தனித்துவ சுவையை ஏற்படுத்திக்கொடுக்கிறது.


Next Story