லிப்ஸ்டிக் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்


லிப்ஸ்டிக் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்
x

முக அழகை பிரகாசமாக காட்சிப்படுத்துவதில் லிப்ஸ்டிக்குக்கு பங்கு உண்டு.

பெண்கள் பலரும் தாங்கள் அணியும் உடை மற்றும் தங்கள் உதட்டு நிறத்திற்கு ஏற்ற வகையில் லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுத்து பூசுகிறார்கள். அதனை எப்போதாவது உதட்டில் பூசிக்கொள்வது தவறில்லை. செயற்கை ரசாயனங்கள் கலந்த லிப்ஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சில பக்கவிளைவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

உணவில் கலக்கும்:

உணவு உண்ணும் போது லிப்ஸ்டிக் அதனுடன் கலந்து உடலுக்குள் சென்றுவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? லிப்ஸ்டிக்கை பயன்படுத்து பவர்கள் பலரும் தவறுதலாக அதனை உட்கொண்டுவிடுகிறார்கள். அதில் அலுமினியம், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற ரசாயனங்கள் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய ஆபத்தான சேர்மங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியம்.

உதடுகளுக்கு கேடு தரும்

உதட்டுச்சாயம் உதடுகளை உலர்வடைய செய்யும் தன்மை கொண்டவை. சிலருக்கு உதட்டு வெடிப்பு பிரச்சினையையும் ஏற்படுத்தும். உதடுகளில் ஈரப்பதத்தை தக்கவைப்பது உதட்டு பராமரிப்பின் முக்கிய அங்கம். அதனை முறையாக பின்பற்றி வருவதன் மூலம் லிப்ஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவும்.

ஒவ்வாமை

லிப்ஸ்டிக் பயன்படுத்துவது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தும். புகழ்பெற்ற அழகுசாதன நிறுவனங்கள் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகின்றன. எனினும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்துமா? என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்வது முக்கியமானது.

நிறம்:

அடிக்கடி உதட்டுச்சாயம் அணிவதால் உதடுகளின் இயற்கையான நிறம் மாறிவிடும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். இருப்பினும், மரபியல் மற்றும் புற ஊதா கதிர்வீச்சுகளின் வெளிப்பாடு ஆகியவை உதடுகளின் நிறத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதட்டுச்சாயம் பயன்படுத்தினாலும் சூரிய கதிர்வீச்சுகளின் பாதுகாப்பு தன்மை உதடுகளின் இயற்கையான நிறத்தை தக்கவைக்க உதவும்.

உடல்நலப் பிரச்சினைகள்:

லிப்ஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் பிற சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சில லிப்ஸ்டிக் பிராண்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் என்பதால் அதன் தேர்வில் கூடுதல் கவனம் தேவை.

நோய்த்தொற்றுகள்:

உதட்டுச்சாயங்களில் காணப்படும் சில சேர்மங்கள் உடல் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் அபாயகரமான நோய்த்தொற்றுகளை பரப்பும் திறனும் கொண்டவை. அதில் காட்மியம் அதிகம் சேர்வது சிறுநீரக செயலிழப்புக்கும் வழிவகுக்கும். எனவே லிப்ஸ்டிக்கை அதிகம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

பக்க விளைவுகளை தவிர்க்க...

உதட்டுச்சாயங்கள் உருவாக்கும் நிறமியை போக்குவதற்கு உதடுகளில் சர்க்கரை மற்றும் தேன் தடவவும்.

புகழ்பெற்ற உற்பத்தியாளர்களின் லிப்ஸ்டிக் பிராண்டுகளை மட்டுமே வாங்கவும். அதில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். அதனை அளவோடு உபயோகப்படுத்துவதற்கு பழகவும். வெளி இடங்களுக்கு சென்று வந்த பிறகு உதடுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்யும் வழக்கத்தையும் பின்பற்றவும்.

லிப்ஸ்டிக் தயாரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லி அடிப்படை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது உதட்டுச்சாயத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்கும். அத்தகைய லிப்ஸ்டிக் வகைகளை தேர்ந்தெடுக்கவும்.

கர்ப்பமாக இருக்கும் போது, உதட்டுச்சாயம் பூசுவதை தவிர்க்கவும். அவற்றை உட்கொள்ள நேரும்போது, கருச்சிதைவு ஏற்படலாம்.


Next Story