சர்க்கஸ் கலைஞர்களின் மறுபக்கம்


சர்க்கஸ் கலைஞர்களின் மறுபக்கம்
x
தினத்தந்தி 13 April 2023 3:30 PM GMT (Updated: 13 April 2023 3:31 PM GMT)

சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா! இதோ வாருங்கள். அவர்களது கூடார வீட்டுக்குள் சென்று குடும்ப வாழ்க்கை ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

பிரமாண்ட கூடாரம், கலர், கலரான துணிகள், ராட்சத தார்ப்பாய்கள் என பிரமிப்பை ஏற்படுத்துகிறது சர்க்கஸ் கூடாரம். அதன் வெளியே சாரை சாரையாக சிறுவர்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் மக்கள் அணிவகுத்து நிற்கின்றனர். 2, 3 திரைகளை கடந்து உள்ளே சென்றால் நான்கு புறமும் பல்வேறு நிறங்களில் இருக்கைகள். அதன் மையப்பகுதியிலே சாகச களம். அந்த களத்தில் சுமார் 80 அடி உயரத்தில் ஆண்-பெண் கலைஞர்கள் செய்யும் சாகசங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

கூடார மைய பகுதியில் கட்டி தொங்கவிடப்பட்ட துணியில் பல்வேறு சாகசங்கள் செய்வது, மரண கிணற்றில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது, கணவன்-மனைவியுமாக கயிற்றில் தொங்கியபடி அந்தரத்தில் பறப்பது, தண்ணீரை குடித்து விட்டு இரண்டு நிறங்களில் பிரித்து கொப்பளிப்பது, உடலின் அசைவுகளுக்கு ஏற்ப உடலில் வளையங்களை சுற்றவிடுவது, பலூன்களை பல்வேறு கோணங்களில் நின்று சுடுவது, கண்களை கட்டிக்கொண்டு உடலில் வைக்கப்படும் காய்கறிகளை வெட்டுவது... இப்படியாக நமக்கு ஆச்சரியமும், பிரமிப்பும் தரும் காட்சிகள் அனைத்தும் சேலம் அப்பலோ சர்க்கசில் கண்டவை.

இப்படி 2 மணி நேரம் எல்லோருக்கும் திகிலையும், ஆச்சரியத்தையும், மகிழ்ச் சியையும் தரும் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா! இதோ வாருங்கள். அவர்களது கூடார வீட்டுக்குள் சென்று குடும்ப வாழ்க்கை ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

ஆங்காங்கே மலை முகடுகள் போன்று சிறு, சிறு கூடாரங்கள். அவை எல்லாம் ஒரு கிராமம் போன்றே தோற்றம் அளிக்கின்றன. அந்த கூடாரங்களை சுற்றி ராட்சத தார்ப்பாய்கள், நீள துணிகள் இவைகளை கொண்டு சுவர் போன்று கட்டி உள்ளனர். ஒவ்வொரு கூடாரத்துக்குள்ளும் ஒவ்வொரு குடும்பம் வசிக்கிறது. ஒவ்வொரு கூடாரத்துக்குள்ளும் தங்களது பொருட்களை வைப்பதற்கு தேவையான இரும்பு பெட்டிகள், தூங்குவதற்கு வசதியாக சிறிய கட்டில்கள், துணிகளை தொங்க விடுவதற்கு குறுக்காக கயிறுகள், அவர்கள் சமைத்து சாப்பிட அடுப்புகள் காட்சி அளிக்கின்றன.

சாகசங்களால் மக்களை மகிழ்வித்த பெண் கலைஞர்கள் இளைப்பாறிய சிறிது நேரம் அவர் களிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் மனம் திறந்து கூறியவை....

''சிறு வயதில் இருந்தே எங்களது உலகமே இந்த சர்க்கஸ் கூடாரம்தான். ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போது அங்குள்ள கோவில் களுக்கும், எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் மட்டும்தான் நாங்கள் கூடார உலகத்தை விட்டு வெளியே செல்வோம்.

நாங்களே எங்களுக்கு பிடித்தமான உணவுகளை தயார்செய்து சாப்பிட்டுக் கொள்வோம். எங்களில் பெரும்பாலானவர்கள் நேபாளம் மற்றும் அசாம், மணிப்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள்தான். அங்கு எங்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக வீடு வசதி இல்லை. ஆனாலும் தாய், தந்தை, குழந்தைகள், உறவினர்கள் என சொந்தங்கள் உள்ளனர். இங்கு நாங்கள் செய்யும் சாகச நிகழ்ச்சி களில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு எங்களது வாழ்க்கை நகர்கிறது'' என்கிறார்கள், சோனு தாபா - ஜோதி சாகச தம்பதியினர்.

''எங்களது சொந்த ஊரில்தான் தாய், தந்தை இருக்கிறார்கள். பிள்ளைகளும் அங்குதான் வசிக்கிறார்கள். சில நேரங்களில் கணவரை பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டு. அந்த நேரங்களில் எல்லாம் தனிமை எங்களை அதிகமாக வாட்டும். ஆனால் சர்க்கஸ் பார்க்க வரும் மக்களை மகிழ்விக்கிறோம் என்ற மனநிறைவு அவை அனைத்தையும் சரிசெய்து விடும்.

நாங்களும் மனிதர்கள்தான், எங் களுக்கும் ஆசைகள் உண்டு. ஆனாலும் வயிற்று பிழைப்புக்காக எங்களது வாழ்க்கை ஓடுகிறது என்று நீங்கள் எல்லோரும் நினைக்கலாம். நாங்கள் அப்படி நினைக்கவில்லை. இந்த கூடாரத்துக்குள் வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் எங்களது சாகச விளையாட்டுகளை கண்டு சுமார் 2 மணி நேரம் அவர்களை மறந்து வியக்கின்றனர். இதை காணும் போதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தும் போதுதான் இன்னும் அதிகமாக சந்தோஷப்படுகிறோம்'' என்கிறார்கள் சர்க்கஸ் சாகச அழகிகள்.

8 மாத குழந்தையை வளர்த்து வரும் அசாம் மாநில பெண் கலைஞர் சொர்னோவிடம், பிரசவ காலத்தில் சாகசங்கள் செய்தது உண்டா என்ற கேள்வியை முன்வைத்த வுடன், அவர் 'இல்லை' என பேச தொடங்கினார்.

''கருத்தரித்தது முதல் சர்க்கஸ் விளையாட எங்களை நிர்வாகமும் அனுமதிப்பது இல்லை. நாங்களும் விளையாட ஆசைப்படுவது இல்லை. கர்ப்ப காலத்தில் எங்களது சாகச கலைகளை அவ்வப்போது சிறு சிறு பயிற்சியாக செய்து கொள்வது உண்டு. குழந்தை பிறந்து 3 மாதம் கழித்து மீண்டும் சர்க்கஸ் விளையாட தொடங்குவோம். நாங்கள் செய்யும் சாகசங்களே உடற்பயிற்சிதான். எனவே, அதனால் எங்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படுவது இல்லை. இன்றும் நான் என்னுடைய 8 மாத குழந்தையை பார்த்துக்கொண்டே தான் சர்க்கஸ் விளையாடு கிறேன். நான் செய்யும் சாகச காட்சிகளை என்னுடைய மகனும் பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்துவதே மகிழ்ச்சிதான்'' என்கிறார் முகத்தில் புன்னகையுடன்.

சர்க்கசில் சாகசங்களுக்கு இடையே நம்மை எல்லாம் சிரிக்க வைக்கும் குள்ள கலைஞராக வலம் வருபவர் திருப்பதி. இவர், சர்க்கஸ் அரங்கில் செய்யும் காமெடி கலாட்டா அனைவரையும் தங்களை மறந்து சிரிக்க வைக்கிறது. திருப்பதியின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி. 6-ம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 5 வயதில் நதியா என்ற மகளும், 2 வயதில் தருண் என்ற மகனும் உள்ளனர். அவர், தனது சர்க்கஸ் அனுபவங் களையும், காதல் திருமண வாழ்க்கையையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"6-ம் வகுப்பு படிக்கும்போது எங்களது ஊரில் ராஜ்கமல் சர்க்கஸ் நடந்தது. நான் சர்க்கஸ் பார்க்க சென்றேன். சர்க்கஸ் முடிந்த பிறகு கூட்டத்தோடு, கூட்டமாக நானும் கூடாரத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தேன். கை தட்டி ஒருவர் என்னை அழைத்தார். அவர்தான் ராஜ்கமல் சர்க்கஸ் உரிமையாளர். அப்போது அவர், 'சர்க்கஸ் எப்படி இருக்கிறது. நன்றாக உள்ளதா?. உனக்கு அவை பிடித்து இருக்கிறதா?' என்று கேட்டதுடன், நீயும் எங்களது சர்க்கசுக்கு வருகிறாயா என்றார். முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. அதன்பிறகு நான் வருகிறேன் என்றேன். அன்று முதல் இன்று வரை என்னுடைய வாழ்க்கை இந்த கூடாரத்துக்குள்தான் நகர்கிறது.

எனக்கு 25 வயதானபோது சென்னையில் சர்க்கஸில் இருந்தேன். ஒரு பள்ளியில் இருந்து சர்க்கஸ் பார்க்க வந்தனர். அப்போது என்னுடைய காமெடி நடிப்பை கண்டு ரேணுகா (அவர்தான் என்னுடைய மனைவி) என்னிடம் பேசினார். அவரது பேச்சு எனக்கு பிடித்து இருந்தது. என்னுடைய காமெடியை பார்த்து விட்டு ரசிகையாக என்னுடைய செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு அடிக்கடி செல்போனில் பேசி வந்தோம். நாளடைவில் எங்களை அறியாமல் இதயம் இடம் மாறி கொண்டது. 3 ஆண்டுகளாக செல்போன் மூலம் எங் களது காதலை தொடர்ந்தோம். எங்களது காதலுக்கு அவளது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வாணியம்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். இன்று எங்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.

இப்படி குள்ளமாக இருக்கிற நமக்கு வாழ்வு உண்டா? என்று பலமுறை நான் கவலைப்பட்டது உண்டு. சாலையில் நடந்து செல்லும் போது கூட கேலியாக என்னை தொட்டு பார்த்து விட்டு செல்வார்கள். அப்போது எனக்கு வேதனையாக இருக்கும். ஆனால் இன்று என்னையும் நேசிக்க ஒரு பெண் இந்த உலகத்தில் இருந்து இருக்கிறாள் என என்னுடைய மனைவியை நான் இன்றும் பெருமையாக நினைத்துக் கொள்வேன்'' என்று கைகளை கூப்பி கடவுளுக்கு நன்றி என்று கூறிய போது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது திருப்பதிக்கு.

மரணக்கிணறு மனிதன்

சர்க்கசில் இரும்பு கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள்களை மேலும், கீழுமாக வேகமாக ஓட்டும் போது அதன் சத்தம் நமது காதை பிளக்க செய்யும். கூண்டுக்குள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது போல் இந்த மோட்டார் சைக்கிள்கள் வேகமாக பயணிக்கின்றன. இதில் பயணம் செய்பவர்களுக்கு கரணம் தப்பினால் மரணம்தான். இதைத்தான் சர்க்கசில் மரணக்கிணறு என்று கூறுவது உண்டு. ஏனென்றால் அந்த கூண்டுக்கு உள்ளேயே மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சாகசம் புரிவதுதான் அதன் சிறப்பு. அந்த மரணக்கிணறு சாகசத்துக்கு சொந்தக்காரர் கேரளாவை சேர்ந்த வில்சன். அவருக்கு வயது 64. இந்த வயதில் இப்படியா என்று நம்மையெல்லாம் வியக்க வைக்கிறார் இந்த மரணக்கிணறு மனிதன்.


Next Story