அன்னாசிப்பழத்தின் விலை 5 ரூபாய்


அன்னாசிப்பழத்தின் விலை 5 ரூபாய்
x

அன்னாசி பழம் இனிப்பும், புளிப்பும் கலந்த தனித்துவமான சுவை கொண்டது. அதில் ஏராளமான வைட்டமின்கள் நிரம்பி இருக்கின்றன. செரிமானத்தை துரிதப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதிலும், புற்றுநோய் அபாயத்தை தடுப்பதிலும் அன்னாசிப்பழத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

அன்னாசிப்பழத்தை விரும்பி உண்பவர்கள் கூட அதன் விலை அதிகமாக இருக்கும் சமயங்களில் தவிர்ப்பதுண்டு. ஆனால் ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்கள் அன்னாசிப்பழத்தை மலிவான விலைக்கு வாங்கி சாப்பிடுகிறார்கள். சிறிய பழம் என்றால் அதன் விலை 5 ரூபாய்தான்.

இந்த பழங்களை விற்பனை செய்பவர்கள் பழங்குடியின மக்கள். விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள படேரு, லம்பசிங்கி மற்றும் அரக்கு உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் வசிக்கிறார்கள். தங்கள் வாழ்விடத்தை சுற்றியுள்ள மலை பகுதிகளில் அன்னாசிப் பழங்களை பயிரிடுகிறார்கள்.

தங்கள் வாழ்வாதாரத்துக்கு அன்னாசிப்பழத்தையே நம்பி இருக்கிறார்கள். அன்னாசிப்பழம் விளைந்ததும் அறுவடை செய்து நேரடியாக கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விற்பனை செய்கிறார்கள்.

சிறிய பழம் என்றால் 5 ரூபாய், பெரிய பழத்திற்கு 10 ரூபாய் என விலை நிர்ணயிக்கிறார்கள். மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பழத்தை விட விலை குறைவு என்பதை விட இந்த பழத்தை உள்ளூர் மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. மலைச்சரிவு பகுதியில் விளைவிக்கப்படும் இந்த அன்னாசிப்பழம் சமவெளி பகுதிகளில் விளைவிக்கப்படும் அன்னாச்சிப்பழங்களை விட சுவையாக இருக்கும். அதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்கள், சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை வாங்கி ருசிக்கிறார்கள்.

இதுபற்றி பழங்குடியினர் கூறும்போது, ''எங்கள் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பலர் அன்னாசிப்பழங்களை சாப்பிடாமல் இங்கிருந்து நகருவதில்லை. வியாபாரிகளும் குறைந்த விலையில் அன்னாசிப்பழங்களை வாங்கி சென்று நகர் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

500 முதல் 5,550 மி.மீ வரை மழைப்பொழிவு உள்ள மலைச் சரிவு பகுதிகள் அன்னாசிப்பழம் பயிரிடுவதற்கு உகந்தது. அதற்கு ஏற்ற காலநிலை எங்கள் பகுதியில் நிலவுவதால் அன்னாசிப்பழ சாகுபடியை எங்கள் வாழ்வாதாரமாக்கிக்கொண்டோம். மற்ற பகுதிகளில் விளையும் அன்னாசிப்பழங்களை விட சுவையாக இருப்பதால் எங்கள் அன்னாசிப்பழத்திற்கு மவுசு கூடியுள்ளது'' என்கிறார்கள்.


Next Story