திலக் மேத்தா: 13 வயதில் சாதித்த இளம் தொழிலதிபர்


திலக் மேத்தா: 13 வயதில் சாதித்த இளம் தொழிலதிபர்
x
தினத்தந்தி 25 Jun 2023 6:47 AM GMT (Updated: 25 Jun 2023 6:58 AM GMT)

17 வயது நிரம்பிய திலக் மேத்தா. இவர் 100 கோடி ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியும் ஆவார்.

இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் மூழ்கி கிடக்கும் இன்றைய காலகட்டத்தில், தன் சொந்த முயற்சியின் மூலம் இந்தியாவின் இளம் வயது தொழில்முனைவோராக சாதித்து காட்டியிருக்கிறார் 17 வயது நிரம்பிய திலக் மேத்தா. இவர் 100 கோடி ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியும் ஆவார். இந்த நிறுவனத்தை தனது 13 வயதில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரின் தாரக மந்திரம், 'கனவுகளை தொடரும் தைரியம் இருந்தால் அந்த கனவு நனவாகும்' என்பதுதான்.

திலக் மேத்தா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் விஷால் மேத்தா-காஜல் மேத்தா. இன்று இளம் வயதிலேயே சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகமாகவும், கடின உழைப்புக்கு உதாரணமாகவும் திகழும் இவரின் முதல் முயற்சி இளைஞர் நலன் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் தளத்தை தொடங்கினார். அதற்கு அடுத்தபடியாக அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களை வீட்டு வாசல் தேடி கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனத்தை தொடங்கினார்.

இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது திலக் மேத்தாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான். ஒரு நாள் தனது மாமா வீட்டிற்கு சென்றபோது பள்ளிப்பாட புத்தகத்தை அங்கேயே மறந்து வைத்து விட்டார். அது அத்தியாவசிய தேவையான புத்தகம் என்பதால், கொரியர் மூலம் அதனை பெறுவதற்கு முடிவு செய்தார். கொரியர் நிறுவனத்தை அணுகியபோது, அதிக விலையை சேவை கட்டணமாக பெற்று கொண்டார்கள். அது அந்த புத்தகத்தின் விலையை காட்டிலும் அதிகமாக இருந்தது. இதுவே அவர் புதிய நிறுவனத்தை ஆரம்பிக்க காரணமாக அமைந்தது.

மக்களுக்கு பொருட்களை ஒரே நாளில், குறைந்த கட்டணத்தில் டெலிவரி செய்யும் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தார். அப்படி குறைந்த கட்டணத்தில் வேகமாக பார்சல் டெலிவரியை எப்படி செய்ய முடியும்? என்று யோசித்தபோதுதான் 'மும்பையில் புகழ்பெற்ற டப்பாவாலாக்களின்' சேவை அவரது ஞாபகத்திற்கு வந்தது. மும்பையின் உயிர்நாடி என அழைக்கப்படும் இவர்களின் தொடர்பு நகரம் முழுவதும் பரவி இருக்கிறது. வீட்டில் சமைத்த உணவை மும்பையின் பல பகுதிகளிலும் வேலை பார்ப்பவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை. இதனை கண்ட திலக் மேத்தா அவர்களை தனது டெலிவரி நிறுவனத்தின் பார்சலை கொண்டு சேர்க்கும் நபர்களாக சேர்த்து கொண்டார்.

இந்த திட்டத்திற்கான அனைத்து தகவலையும் சேகரித்த பின்னர், இரவும் பகலும் அயராது 8 மாதம் உழைத்து இந்த நிறுவனத்திற்காக முதல் படியை எடுத்து வைத்தார். மற்ற பார்சல் நிறுவனங்கள் ஒரு நாள் டெலிவரிக்கு அதிக பணம் பெறும்போது இவர் அதில் கால் பங்கு தொகையை மட்டுமே பெற்றதால் மக்கள் அவரது நிறுவனத்தையே அதிகம் நாடினர். டெலிவரி சேவையை குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்வதும், அந்தந்த நபர்களுக்கு உரிய நேரத்தில் டெலிவரி செய்வதும் அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்த முறையில் டப்பாவாலாக்கள் ஒவ்வொரு டெலிவரிக்கும் கமிஷன் அடிப்படையில் வேலை செய்து வந்தனர். ஒரு புதிய ஆர்டர் வரும்போதெல்லாம் அவர்களின் செல்போனுக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதன் அடிப்படையில் டெலிவரி செய்து விட்டு அதற்கேற்ற கூலியை பெறுகின்றனர். இவரின் நிறுவனத்தின் மூலம் முன்பை விட நல்ல வருமானமும் பெறுகிறார்கள்.

திலக் மேத்தா, எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனாக இருந்தபோது 200 டெலிவரி செய்யும் நபர்கள், 300 டப்பாவாலாக்கள் கொண்ட குழுவை ஒருங்கிணைத்து தனது நிறுவனத்தை நடத்தினார். 13 வயதுடைய ஒரு சிறுவன் தனது நிறுவனத்தின் மூலம் ஏராளமான மக்களுக்கு மும்பை பகுதியில் வேலைவாய்ப்பு அளித்தது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது.

தொழில்முனைவோராக மட்டுமல்லாமல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக ஆர்வலராகவும் விளங்குகிறார். கொரோனா காலகட்டத்தின்போது வேலை இழந்த டப்பாவாலாக்களுக்கு தனது நிறுவனத்தில் இருந்து கிடைத்த வருவாயில் உதவி செய்தார். மும்பை மட்டுமல்லாமல் தனது சேவையை டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.

2018-ம் ஆண்டு போர்ப்ஸ் லீடர்ஷிப் விருதை பெற்ற இந்தியாவின் இளம்வயது நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இளைய தொழில்முனைவோரான இவருக்கு சமீபத்தில் இந்திய கடல்சார் விருது அளிக்கப்பட்டது. சிறுவயதிலேயே இத்தகைய இடத்தை எட்டிப்பிடிக்க பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. இளம் தொழிலதிபர் என்பதை தவிர, இளைஞர்களுக்கு உத்வேகம் மற்றும் ஊக்கமளிக்கும் நபராக மாறியுள்ளார். இவரின் வெற்றிக்கதை தொழில் தொடங்க விரும்பும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றால் அது மிகையல்ல!.


Next Story