காஷ்மீருக்கு அழகு சேர்க்கும் துலிப் தோட்டம்


காஷ்மீருக்கு அழகு சேர்க்கும் துலிப் தோட்டம்
x

விழாக்களின்போது அலங்காரம் செய்வதற்கும், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கும் துலிப் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உலக அளவில் அதிகம் ரசிக்கப்படும் மலர்களில் ஒன்று துலிப். பலவித வண்ணங்களில் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் துலிப் தோட்டங்களை பார்க்கும்போது கண்களும், மனதும் புத்துணர்ச்சி கொள்ளும். அதனால் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தில் உலகெங்கும் துலிப் மலர்கள் வளர்க்கப்படுகின்றன. வாழ்த்துக்களை பரிமாறுவதற்கும், விழாக்களின்போது அலங்காரம் செய்வதற்கும், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கும் துலிப் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் துலிப் மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக துலிப் மலர் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் காஷ்மீரில் துலிப் திருவிழா நடத்தப்படுவதுண்டு. அங்குள்ள உலகப்புகழ்பெற்ற தால் ஏரிக்கரைக்கு அருகில் ஜபர்வான் மலை அடிவாரத்தில் பிரமாண்டமான துலிப் மலர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 52 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த துலிப் மலர் தோட்டம் 2008-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்திராகாந்தி நினைவு துலிப் மலர் தோட்டம் என அழைக்கப்படும் இதில் ஆரம்பத்தில் 50 ஆயிரம் துலிப் மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன. அவை தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்ததால் நாளடைவில் துலிப் மலர் செடி வளர்ப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் மலர் தோட்டம் என்ற பெருமையை பெற்றுவிட்டது. இங்கு சுமார் 16 லட்சம் துலிப் மலர்கள் உள்ளன. 68 வகையான வண்ண வண்ண துலிப் மலர்கள் பூத்துக்குலுங்கி அந்த பகுதியையே மாறுபட்ட வண்ணத்தில் மாற்றி விட்டன.

குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும் வேளையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு கூடுதல் அழகையும், வண்ணமயமான சூழலையும் உருவாக்கி கொடுப்பதில் துலிப் மலர்களுக்கு பங்கு உண்டு. பொதுவாக துலிப் மலர்கள் மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத தொடக்கம் வரை பூக்கத் தொடங்கும். அதனால் இந்த சமயத்தில் ஆண்டு தோறும் துலிப் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான துலிப் மலர் திருவிழா சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. துலிப் தோட்டம் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். அதிகபட்சமாக திறக்கப்பட்ட 4-வது நாளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் துலிப் தோட்டத்தை பார்வையிட்டனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக துலிப் தோட்ட அதிகாரி ஷேக் ரசூல் கூறியுள்ளார்.

''சுமார் 500 தோட்டக்கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து பொதுமக்களுக்காக இந்த துலிப் தோட்டத்தை தயார் செய்துள்ளனர். இது முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடமாக அமையும். இந்த தோட்டத்தை உருவாக்க நாங்கள் உழைத்த கடின உழைப்புக்கு அங்கீகாரமாகவும் அமையும்'' என்றும் சொல்கிறார்.


Next Story