நள்ளிரவில் கண் விழிக்க காரணம்?


நள்ளிரவில் கண் விழிக்க காரணம்?
x

சுகமான உறக்கத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆனால் பலரும் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். சிலர் நள்ளிரவில் திடீரென கண் விழிப்பார்கள். அதற்கு பிறகு தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். நள்ளிரவில் கண் விழிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

* நீங்கள் மன அழுத்தம் அல்லது கவலையாக இருக்கிறீர்கள் என்றால் தூங்க செல்வதற்கு முன்பு அதில் இருந்து விடுபட்டுவிட வேண்டும். அதே மன நிலையில் தூங்க செல்வது நள்ளிரவில் திடீர் கண் விழிப்புக்கு வித்திடும். அதன்பிறகு சட்டென்று கவலையும், மன அழுத்தமும் மீண்டும் ஆக்கிரமிக்க தொடங்கிவிடும். அதில் இருந்து மீள்வதற்குள் விடிந்துவிடும். தூக்கமும் தடைபட்டு போய்விடும்.

* மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் அதற்கு காரணமாக இருக்கும். நீங்கள் எழுந்திருக்கும் போது கார்டிசோல் ஹார்மோன் இயற்கையாகவே வெளியிடப்படும். அது அதிக விழிப்புடன் வைத்திருக்க உதவும். அந்த சமயத்தில் வேறு சிந்தனைகள் மனதில் எழுந்தால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும்.

* அலைபாயும் எண்ணங்கள், சங்கடமான உணர்வுகள் உங்கள் ஆழ்மனதை ஆக்கிரமிக்கக்கூடும். அவை மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தி நடு இரவில் கண் விழிக்க வைப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

* இரைப்பை குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டில் உண்டாகும் ஏற்றத்தாழ்வும் தூக்கத்தை தொந்தரவு செய்யலாம். அவை அதிகப்படியான கார்டிசோலுடன் பிணைக்கப்பட்டுள்ளன. அதனால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதிக்கலாம். யோகர்ட் போன்ற புரோபயாடிக் கொண்ட உணவுப்பொருட்களை உட்கொள்வது இரைப்பை குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்த உதவும்.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நாள் முழுவதும் சிறிது மாறுபடும். ஆனால் படுக்கைக்குச் செல்லும்போது அவை குறைந்தால், தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ரத்த சர்க்கரை அளவு குறையும்போது அட்ரீனல் சுரப்பிகளின் செயல்பாடுகளை முடக்கி கார்டிசோலை வெளியிட தூண்டும். இதன் விளைவாக தூக்கம் பாதிப்புக்குள்ளாகும்.

* மது குடிப்பது தூக்கத்தை தொந்தரவு செய்யும். நள்ளிரவில் விழிப்பை ஏற்படுத்தும். புகைப்பிடிப்பதும் பாதிப்பை ஏற்படுத்தும். அதில் உள்ள நிகோடின் நள்ளிரவில் விழிக்க தூண்டிவிடும்.

* காபி, டீ போன்ற காபின் கலந்த பானங்களை தூங்க செல்வதற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன்பே ஒதுக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் இரவில் தூக்கத்திற்கு தடையை ஏற்படுத்திவிடும்.

* வைட்டமின் டி தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்திக்கு முக்கியமானது. அந்த வைட்டமினின் அளவு குறைந்தாலும் தூக்கம் பாதிப்படையும். வைட்டமின் டியின் சிறந்த ஆதாரம் சூரியன். அதன் ஒளிக்கதிர்கள் சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்த உதவும். அடிக்கடி நள்ளிரவில் எழுந்திருப்பதை தடுக்கும்.

* மெக்னீசியம் அமைதியான தூக்கத்திற்கு உதவும் மற்றொரு ஊட்டச்சத்து. இது காமா-அமினோபியூட்ரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்து உடல் ஓய்வெடுக்க உதவும்.

* ஹார்மோன் சமநிலையின்மை நள்ளிரவில் உங்களை எழுப்பிக்கொண்டே இருக்கலாம். உதாரணமாக, மாதவிடாய் நின்ற பெண்கள், தூக்கத்தை பாதிக்கும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கலாம். மாதவிடாய் காலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு குறைவதும் தூக்கத்தை எதிர்மறையாக பாதிக்கும்.

* இரவில் சிறுநீர் கழிப்பதற்கு அடிக்கடி எழுந்திருப்பதும் தூக்கத்தை பாதிக்கும். சிறுநீர் கழிப்பதற்கான இந்த தூண்டுதல் எரிச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.


Next Story