இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும்?


இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும்?
x

நம் முன்னோர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்வு செய்து அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் செய்தார்கள். அதிலும் குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அது சாத்தியமில்லாததாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கையாண்ட உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆயுளை நீட்டிக்கச் செய்தன. இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறி சென்றதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் உங்கள் கவனத்திற்கு....

செரிமானம் மேம்படும்:

இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டால் அதனை ஜீரணமாக்குவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். அதைவிடுத்து இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அவற்றின் செயல்பாடு தாமதமாகும். இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகை செய்யும்.

ஊட்டச்சத்து உறிஞ்சப்படும்:

உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்க வேண்டும். இரவு உணவை முன்கூட்டியே உண்ணும்போது உடல் சுறுசுறுப்பாக இயக்கி ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்முறையை துரிதப்படுத்தும். இரவு தாமதமாக உட்கொள்ளும்போது அந்த செயல்முறையும் தாமதமாகும்.

ஆற்றல் மேம்படும்:

தூக்கத்தின்போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்முறை நடைபெறும். ஆனால் இரவில் தாமதமாக சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கே உடலின் ஆற்றல் முழுவதும் செலவிடப்படும். அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது.

இரவில் தூங்கினாலும் கூட காலையில் மந்தமான உணர்வு எட்டிப்பார்க்கும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிட்டுவிட்டு தூங்கினால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைத்து, அடுத்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட முடியும்.

தூக்கத்தை வரவழைக்கும்:

இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதன் மூலம் உடல் தூக்கத்திற்கு சீக்கிரமாகவே இசைந்து கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்:

தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக அளவு உணவு உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவு 7 மணிக்கு முன்பு சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

குடும்ப நேரம்:

இரவு உணவை குடும்பத்தினருடன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி உணவருந்தும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படி செய்வது இரவு உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கத்தை தடுத்துவிடும்.

உடல் எடை நிர்வகிக்கப்படும்:

மாலை, இரவு நேரங்களில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு குறைந்துவிடும். அதனால் உடலில் சேரும் கலோரிகளை எரிப்பது சவாலானது. தாமதமாக சாப்பிடும்போது உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக மாறக்கூடும். அதனால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை நிர்வகிப்பதற்கு இரவு உணவை சீக்கிரமாக உட்கொள்வது நல்லது.


Next Story