பித்தளை பாத்திரங்களை ஏன் பயன்படுத்த வேண்டும்?


பித்தளை பாத்திரங்களை ஏன் பயன்படுத்த வேண்டும்?
x

நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சமையல் பாத்திரங்கள் வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில் சில பாத்திரங்கள் நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

ஓட்டல்களில் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறுவதற்கு பித்தளை பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஸ்டைலான தோற்றங்களில் காட்சி அளிக்கின்றன. சமையல் செய்வதற்கும், உணவு பரிமாறுவதற்கும் எவர் சில்வர் பாத்திரங்களுக்கு பதிலாக பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளை வழங்கும்.

* பித்தளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பாத்திரங்களில் பரவி இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் பித்தளை பாத்திரங்களின் உட்புறத்தில் தாமிரத்தின் சுவடு படிந்திருக்கும். தாமிரம் உடலுக்கு இன்றியமையாத கனிமமாகும். அவை உணவில் கலந்து சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

* பித்தளை பாத்திரம் வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது. சமைக்கும்போது வெப்பத்தை சமமாக பரப்பி சீராக சமைப்பதற்கு உதவிடும். பிரியாணி, புலாவ் போன்ற அரிசி வகை உணவுகளை சமைப்பதற்கு பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தலாம். தக்காளி, சிட்ரஸ் போன்ற அமில, கார உணவுகளை சமைப்பதற்கு பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது. எதிர்வினை புரிந்து உணவின் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

* பித்தளை பாத்திரம் சூடாகும்போது உப்பு மற்றும் அமில தன்மை கொண்ட உணவுகளுடன் எளிதில் வினைபுரியும். அதனை கருத்தில் கொண்டு உணவு சமைப்பது நல்லது. குறிப்பாக உணவு வகைகளை பரிமாறுவதற்கு பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துவது சிறப்பானது.

* பித்தளை உறுதியான தன்மை கொண்ட உலோகம். நீடித்து உழைக்கக்கூடியது. வெள்ளியுடன் ஒப்பிடும்போது அதிக சேதம் அடையாது. கீறல் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

* எவர் சில்வர் பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது, பித்தளை பாத்திரங்கள் எடை குறைவானது. அன்றாட சமையல் பயன்பாட்டிற்கு சுபலமாக இருக்கும். அவற்றை கையாள்வதற்கும் எளிதாக இருக்கும்.

* வெள்ளி பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது பித்தளை பாத்திரங்களுக்கு குறைவான பராமரிப்பே தேவைப்படும். பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்வதும் எளிமையானது. சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிடலாம்.

* பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துவது பாரம்பரியத்துடன் தொடர்பு கொள்ள வைக்கும். பழமையான தோற்றத்தை கொண்டிருக்கும். அவை பண்டிகைகளின்போது தனித்துவமாக இடம் பிடிக்கும். அந்த சமயத்திலாவது அவற்றை பயன்படுத்துவது அவசியமானது.


Next Story