மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே என்னை அழைக்கலாம் - உதயநிதி ஸ்டாலின்


மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று  அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே என்னை அழைக்கலாம்  - உதயநிதி ஸ்டாலின்
x

சின்னவர் என்றே என்னை அழைக்கலாம் என எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. இளைஞர் அணிக்கு ரூ.10 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது என புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் திடலில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா, தொண்டரை போற்றுவோம் என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

விழாவில் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். இந்தியாவிலேயே 3-வதாக பெரிய இயக்கமாக தி.மு.க. உள்ளது.

தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது கிடையாது. கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன்.

கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். என் மீது பாசம், அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும் போது 3-ம் கலைஞர், இளம் தலைவர் என அப்படியெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது. கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான். என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது.

பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான். இந்த திடலில் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிளில் பேசிய இந்திரா காந்தி பிரதமரானார், கருணாநிதி பல வெற்றிகளை கண்டுள்ளார், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். இந்த திடல் ராசியான திடல் என்று எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். எனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பின் மீது நம்பிக்கை உண்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story