25 பேருக்கு தலா ரூ.1 லட்சம்... தன்னார்வலர்களை கவுரவப்படுத்திய நடிகர் கார்த்தி


25 பேருக்கு தலா ரூ.1 லட்சம்... தன்னார்வலர்களை கவுரவப்படுத்திய நடிகர் கார்த்தி
x
தினத்தந்தி 3 Feb 2024 7:01 PM GMT (Updated: 4 Feb 2024 7:51 AM GMT)

தனது 25வது படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில் உதவித்தொகை வழங்க உள்ளதாக நடிகர் கார்த்தி அறிவித்து இருந்தார்.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையுடன் வெளியான திரைப்படம் 'ஜப்பான்'. இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி வெளியானது.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு போட்டியாக ஒரே நாளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.28 கோடிக்கும் மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது 25வது படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில் ரூ.1 கோடி வரை உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளதாக நடிகர் கார்த்தி அறிவித்து இருந்தார். அதன்படி படம் வெளியான போது அவரது ரசிகர்கள் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இந்நிலையில் தன்னார்வலர்கள் 25 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கி நடிகர் கார்த்தி கவுரவப்படுத்தி உள்ளார். நேற்று நடந்த விழாவில் பேசிய அவர், 'உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல பேருக்கு உள்ளது. ஆனால் யார் மூலமாக உதவுவது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. மேலும் பலரிடம் பணம் இருக்கிறது, ஆனால் உதவ நேரமில்லை.

அப்படி தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் தன்னார்வலர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். இதன்மூலம் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, உதவி செய்ய மனம் படைத்த வசதியானவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரியவரும். இந்த பணி இன்னும் தொடரும்' என்று தெரிவித்தார்.


Next Story