நவம்பர் 7-ந்தேதி 'விக்ரம்' படத்தின் 100-வது நாள் வெற்றி விழா - படக்குழு அறிவிப்பு


நவம்பர் 7-ந்தேதி விக்ரம் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா - படக்குழு அறிவிப்பு
x

சென்னை கலைவாணர் அரங்கில் ‘விக்ரம்’ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஜூன் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், கமல்ஹாசனின் திரைத்துறை வரலாற்றிலேயே அதிக வசூலைக் குவித்த வெற்றிப் படமாக அமைந்தது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷுக்கு சொகுசு கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்தார்.

ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான 'கைதி' படத்தின் திரைக்கதையுடன் இணையும் வகையில் 'விக்ரம்' படம் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தின் இறுதியில் நடிகர் சூர்யா 'ரோலெக்ஸ்' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை அசர வைத்தார்.

இந்த கதையின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்கள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், ஹாலிவுட் திரையுலகில் வருவது போல் இதற்கு 'லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ்' என பெயரிட்டு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் 'விக்ரம்' திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவை கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளது. இதன்படி வரும் நவம்பர் 7-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் 'விக்ரம்' திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story