நான்கு தேசிய விருது வென்ற 'மின்சாரக் கனவு'


நான்கு தேசிய விருது வென்ற மின்சாரக் கனவு
x
தினத்தந்தி 28 Oct 2017 5:32 AM GMT (Updated: 28 Oct 2017 5:32 AM GMT)

மும்பையில் உள்ள பிலிம் சிட்டி, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அந்த விழாதான் எங்கள் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நிச்சயமாகப் படம் எடுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்தியது.

மும்பையில் உள்ள பிலிம் சிட்டி, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அந்த விழாதான் எங்கள் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நிச்சயமாகப் படம் எடுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்தியது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், இந்தியத் திரையுலகில் புகழ் பெற்ற குடும்பங்கள் மேடையில் கவுரவிக்கப்பட்டன. இந்த வகையில் நம் நாட்டில் சீனியர்கள் என்றால் அது தாராசந்த் பர்ஜாட்டியா குடும்பம் எனலாம். அந்த விழாவில் அவரது மகன் கமல் பர்ஜாட்டியா கலந்து கொண்டார். ராஜ்கபூர் குடும்பம் போன்று திரையுலகில் முத்திரை பதித்தவர்களெல்லாம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அந்த வகையில் கமல் பர்ஜாட்டியா அறிமுகப்படுத்தப்பட்டார்.

அவர் மேடையில் பேசியபோது ‘எங்களைவிட சீனியர் பேமிலி ஒன்று தென்னிந்தியாவில் இருந்து இங்கே வந்திருக்கிறது. அது ஏவி.எம். பேமிலி. அதற்குப் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கும் ஏவி.எம்.சரவணன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சம்மேளனத்தின் தலைவராகவும், சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். ஏவி.எம்.சரவணன், அவரது சகோதரர் ஏவி.எம்.பாலசுப்பிரமணியம், மகன் குகன் ஆகியோருடன் இங்கே வந்திருக்கிறார். அவர்களை நான் மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்துகிறேன்’ என்றார்.

நாங்கள் மூவரும் மேடைக்குச் சென்று அரங்கத்திலிருந்த அத்தனை பேர்களின் வாழ்த்துகளைப் பெற்றபோது, என் மனம் இப்படிச் சிந்தித்தது. என் தந்தை 1934-ல் தொடங்கி 1935-ல் ‘அல்லி அர்ஜுனா’ என்ற படத்தை ரிலீஸ் செய்தார். அதன் பிறகு 1945-ல் சொந்தமாக ஸ்டூடியோ ஆரம்பித்து 1947-ல் ‘நாம் இருவர்’ படத்தைத் தயாரித்து வெளியிட்டார். முதல் கணக்குப்படி பார்த்தால் நாங்கள் அப்போது 60 வருடங் களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறோம். ஏவி.எம். ஸ்டூடியோ ஆரம்பிக்கப்பட்ட ஆண்டை வைத்துக் கணக்கு போட்டுப் பார்த்தால் அன்றைய தேதியில் ஐம்பது வருடம் ஆகிறது. இந்தப் பொன் விழாவைக் குறிக்கும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டாமா?.

இது பற்றி நாங்கள் மூவரும் பேசினோம்.

என்ன படம் எடுப்பது என்று ஆலோசித்தபோது, ‘நீங்க ஏன் பிரபுதேவாவை ‘புக்’ பண்ணக் கூடாது’ என்று ஆல்பர்ட் தியேட்டர் மேனேஜர் மாரியப்பன் ஐடியா கொடுத்தார்.

பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்தோம்.

பிறகு நண்பர் ராஜிவ் மேனன் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்கக் கேட்டிருந்தோம். ஆனால் ரகுமான் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ‘மாடர்ன் அவுட்லுக் இருக்கிற இயக்குனராக இருக்க வேண்டும்’ என்று அவர் விரும்பினார்.

அப்போது ராஜிவ் மேனன், விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். அவரை அழைத்தேன். ‘ரஹ்மான் இப்படி விரும்புகிறார். நீங்க முப்பது வினாடிகளில் அருமையா கதை சொல்றீங்க. அப்படிப்பட்ட திறமை இருக்கும்போது, ஏன் நீங்கள் ஒரு முழுப் படம் பண்ணக் கூடாது?’ என்று உரிமையுடன் கேட்டேன்.

முதலில் மறுத்த ராஜிவ் மேனன் பிறகு ஒப்புக் கொண்டார்.

‘நீ படம் டைரக்ட் பண்றதாயிருந்தா, நான் மியூஸிக் பண்றேன்’ என்று ரகுமானும் ஒப்புக்கொண்டார்.



அதன் பின்னர் அரவிந்தசாமி, கஜோல் என்று பல கலைஞர் களையும் ஒப்பந்தம் செய்தோம்.

படத் தயாரிப்பு வேலைதொடங்க இருந்த சமயத்தில் ராஜிவ் மேனன் என்னிடம் ‘ஒரு கண்டிஷன்’ என்றார்.

‘நீங்க கொஞ்சம் ஓல்டு டைமர். நீங்க என் வொர்க்ல தலையிடாம இருந்தா.. நான் இந்தப் படம் பண்றேன். எனக்கு கொஞ்சம்கூட ‘இன்ட்டர் பியரன்ஸ்’ இருக்கக் கூடாது. முழு சுதந்திரம் வேண்டும்’.

ராஜிவ் மேனனின் கண்டிஷனை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன். தலையிடவே இல்லை. அந்தப் படம்தான் ‘மின்சாரக் கனவு’. இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம்: ராஜிவ் மேனன், வி.சி.குகநாதன்.

என் தம்பி பாலுவின் மகள் லட்சுமிபிரியா சிங்கப்பூரில் ‘காஸ்ட்யூம் டிஸைன்’ கற்றுக் கொண்டு திரும்பியிருந்தாள். அவள் மின்சாரக் கனவின் காஸ்ட்யூம் டிஸைனராகப் பொறுப்பேற்று நன்றாகச் செய்தாள்.

படம் முழுக்க தயாரிப்பைப் பார்த்துக்கொண்டது என் மகன் குகன்தான். அந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருமே நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள்தான். அன்றைய தேதியில் ‘ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ் பிப்டி இயர்ஸ் யங்’ என்று ராஜிவ் மேனன் சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி ஒரு ‘யூத்’ பிக்சராக ‘மின்சாரக் கனவு’ படத்தை எடுத்தோம்.

‘பூ பூக்கும் ஓசை’ என்று ஒரு பாடல், அதை படமாக்கும்போது முதலில் ஊட்டியில் ஒரு ஸ்கூல், பிறகு ஸ்டூடியோ, பிறகு தடாவில் சில வரிகள், அதைத் தொடர்ந்து குலு, மனாலி என்று இப்படி ஒரு பாடல் காட்சிக்கு அதிக பட்ச லொகேஷன்களில் எடுத்தது அந்தப் பாட்டாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

கடைத் தெருவில் பல விதமான கடைகளுக்கு மத்தியில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் எடுக்கப்பட்ட பாட்டு ‘ஊ லல லா... மானாமதுரை மாமரக்கிளையிலே’. பிரபுதேவாவும், கஜோலும், நாசரும் அந்தப் பாடல் காட்சியில் கலக்கியிருப்பார்கள். இது ஏவி.எம் ஸ்டூடியோவில் 8-வது ப்ளோரில், பல கடைகளை செட்அப் செய்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி. இதில் இளைஞர்களின் ‘துள்ளல்’ தெரியும்.

‘தங்கத்தாமரை மலரே வா அருகே.. தத்தித்தாவுது மனமே வா’ என்ற வைரமுத்துவின் தங்க வரிகளுக்கு அரவிந்தசாமியும், கஜோலும் இணைந்து பாடுவார்கள். இந்தப் பாட்டைப் பார்த்த ரஜினி, ‘இந்த நீர்வீழ்ச்சி எங்கேயிருக்கிறது’ என்று கேட்டார்கள். அது செயற்கை நீர்வீழ்ச்சி செட்டில் எடுத்த பாட்டு என்றதும் அசந்து போய் விட்டார். அந்த செட்டை நிர்மானித்தவர் கலை இயக்குனர் தோட்டா தரணி. அவருக்கு இந்தப் படத்திற்காக ‘தமிழக அரசு’ விருது கிடைத்தது.



‘வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற பாட்டிற்கு பிரபுதேவாவும் கஜோலும் நிலவு ஒளியில் குளுமையாக நடனம் ஆடியிருப்பார்கள். இந்த நடனத்துக்கு ‘தேசிய விருது’ கிடைக்குமென்று என் மகன் குகன் சொன்னார். அவர் சொன்னது போலவே பிரபுதேவாவின் நடன அமைப்பிற்கு தேசிய விருது கிடைத்தது. அத்துடன் சிறந்த இசையமைப்புக்கு தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, தங்கத் தாமரை பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிறந்த பிண்ணனி பாடியதற்காக தேசிய விருது, சித்ராவுக்கு ‘ஊ லல லா மானாமதுரை மாமரத்துக்கிளியே பாடியதற்காக தேசிய விருது என மொத்தம் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற படம் இது.

‘மின்சாரக் கனவு’ படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா, 25.11.1996 அன்று பிலிம் சேம்பர் அரங்கத்தில் நடந்தது. திரை உலகத் தந்தை டி.ராமானுஜம் தலைமைவகிக்க, அப்போது சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் முன்னிலையில், துக்ளக் ஆசிரியர் சோவும், இசைப்புயல் ஏஆர்.ரஹ்மானும் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னணி நட்சத்திரங்களோடு கலை உலகமே திரண்டு வந்து விழாவை சிறப்பித்தனர்.

ஸ்டாலின் பேசும்போது ‘ஏவி.எம் நிறுவனம் ஒரு பல்கலைக் கழகம்’ என்றார். சோ, ‘பிரபலமானவர்களின் மகனாக இருந்தால் மட்டும் பிரகாசிக்க முடியாது. ஆளுமை, தன்னம்பிக்கை, திறமை இருந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும். அப்படி ஏவி.எம் ஸ்டூடியோவை சிறப்பாக நடத்தி வருபவர் சரவணன்’ என்று பாராட்டினார். அடுத்து வாழ்த்த வந்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘என் தந்தை ஏவி.எம். ஸ்டூடியோ ‘சி’ தியேட்டரில்தான் இசைக்குழுவில் பணியாற்றினார். அவருக்கு சாப்பாடு எடுத்து வருவேன். அவரை சாப்பிட வைத்துவிட்டு இசை அரங்கத்தை சுற்றிச் சுற்றி வருவேன். அந்த இசைக் காற்று என்னை இழுத்துக்கொண்டது’ என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

படம் நூறு நாளுக்கு மேலே போனால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் கவிஞர் வைரமுத்துவைக் கூட்டிக் கொண்டு, சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறனைச் சென்று பார்த்தோம்.

‘மின்சாரக் கனவு’ நூறு நாட்கள் போகும். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தால், அதை வெள்ளி விழா வெற்றியாக எங்களால் மாற்றிக் காட்ட முடியும் என்றோம்.

கலாநிதி மாறனுக்கு நம்பிக்கையில்லை ‘இப்படிக்கூட செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.

‘முடியும்’ என்று நாங்கள் சொன்னதில் இருந்த நம்பிக்கையை மதித்து, சம்பந்தப்பட்டவர்களை ஒரு குழுவாக அழைத்து ‘இவர்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுங்கள்’ என்று சொல்லி எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். கலாநிதி மாறன், கே.சண்முகம், மிஸஸ்.லால் ஆகியோரின் விளம்பர யுக்திகள் வேகமாக உருவாயின.

சன் டி.வி.க்கும், ஏவி.எம் நிறுவனத்திற்கும் ஓர் இனிய உறவு ஏற்பட அதுதான் காரணம்.

‘மின்சாரக் கனவு’ படத்திலிருந்து சில கேள்விகளுக்கு ரசிகர்கள் பதில் சொல்ல வேண்டும். அதில் வெற்றி பெறு கிறவர்களை அழைத்துக்கொண்டு ‘த்ரீ ரோஸஸ்’ நிறுவனத் துடன் இணைந்து மின்சாரக் கனவு சிறப்பு ரெயில் கன்னியா குமரியில் இருந்து சென்னைக்கு வரும். அவர்கள் மின்சாரக் கனவு வெள்ளி விழாவில் கலந்து கொண்டு ஊர் செல்லலாம் என்று முடிவு செய்து விளம்பரங்கள் செய்தோம். இவைகள் விளம்பரத்தின் ‘புதிய யுக்திகள்’.

நாங்கள் இந்த விளம்பரங்களைத் தொடங்கியதுமே படத்தின் வசூல் சூடுபிடித்தது. சென்னையில் ஆல்பட் தியேட்டரில் 216 நாட்கள் மின்சாரக் கனவு ஓடியது. அந்த தியேட்டரில் அன்றைய தேதியில் அது ஒரு ரிகார்ட். அதே போல ஆல்பட் தியேட்டரில் அதுவரை வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடி அதிக வசூல் தந்த படமும் அதுதான்.

‘மின்சாரக் கனவு’ படத்தைத் தமிழில் வெளியிட்ட அதே தினத்தன்று தெலுங்கில் அதை ‘மெருப்பு கலலு’ என்ற பெயரிலும், பிறகு நான்கு மாதங்கள் கழித்து ‘சப்னே’ என்ற பெயரில் இந்தியிலும் ‘டப்’ செய்து வெளியிட்டோம்.

மின்சாரக் கனவு எங்கள் வெள்ளி விழாக் கனவை நினைவாக்கியது. வெள்ளி விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். அப்போது இயக்குனர் எஸ்பி.முத்து ராமன் எங்களுக்கு ஒரு யோசனையைச் சொன்னார்.

அடுத்த வாரம்: ஏவி.எம்.மின் பொன் விழா


Next Story