சினிமா செய்திகள்

நான் ரசித்த நாயகன் என்னைத் தேடி வந்தார் + "||" + The man whom I loved came in search of me

நான் ரசித்த நாயகன் என்னைத் தேடி வந்தார்

நான் ரசித்த நாயகன் என்னைத் தேடி வந்தார்
தேனி பக்கம் உள்ள சின்னமனூரில் என்னுடைய ஆரம்பக் கல்வி காலம் இருந்தது.
 ‘நான் சரியாக படிக்கவில்லை. நல்ல மதிப்பெண் வாங்கவில்லை. அதிகமாக சினிமா பார்த்துக் கெட்டுப் போகிறேன்’ என்று முடிவுகட்டிய என் பெற்றோர், என்னை காரைக்குடி அருகில் கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி நினைவுப் பள்ளியில் என்னைச் சேர்த்து விட்டார்கள். கண்டனூரில் தான் இயக்குனர் மகேந்திரனின் தாயார், அதாவது என்னுடைய அத்தை இருந்தார்கள். எனவே அவருடைய வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தேன்.


என்னுடைய வாழ்க்கையில், முன்னுக்கு வருவதற்கு அடித்தளமிட்டதே கண்டனூர் தான். பள்ளியில் படிக்கின்ற காலங்களில் என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனையே, சிட்டாள் ஆச்சி நினைவுப் பள்ளி தான். அவ்வளவு அருமையான பள்ளி, படிப்பு, நல்ல ஆசிரியர்கள்.

1965-ம் ஆண்டு அந்தப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த வேளையில், மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன. எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டுப்பிள்ளை’, சிவாஜி கணேசன் நடித்த ‘பழநி’, ஜெய்சங்கர் புதுமுகமாக நடித்த ‘இரவும் பகலும்’ ஆகியவை அந்தப் படங்கள். இவை பொங்கல் வெளியீடாக 14-1-1965-ல் வெளியானது.

காரைக்குடியில் உள்ள ராமவிலாஸ் தியேட்டரில் ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படம் வெளியாகி இருந்தது. 5 நாட்கள் கஷ்டப்பட்டும், கியூவில் கால்கடுக்க நின்றும் டிக்கெட் கிடைக்கவில்லை. 6-ம் நாள்தான் படத்தைப் பார்க்க முடிந்தது. அந்த சமயத்தில் என்னுடன் படித்த மாணவர்கள், ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால், ‘இரவும் பகலும்’ படத்தைப் பார்த்தார்கள்.

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த அந்த நண்பர்களில் ஒருவன், ‘டேய்! ஜெய்சங்கர் என்ற ஒரு புதுமுக நடிகர் வந்திருக்கிறான். (அன்றைய ரசிகர்கள் அன்பு மிகுதியால் நடிகர்களை அவன் இவன் என்று கூறிக்கொள்வார்கள்). மிக அருமையாக நடித்திருக் கிறான். சுறுசுறுப்பாக சண்டை போடுகிறான். படமும் நன்றாக உள்ளது. பாட்டுகளும் நன்றாக இருக்கின்றன’ என்றான்.

அதைக் கேட்டதும் நான் உள்ளிட்ட சில நண்பர்கள், அடுத்த நாளே ‘இரவும் பகலும்’ திரைப்படத்தைப் பார்த்தோம்.

என் நண்பன் சொன்னது போலவே, ஜெய்சங்கர் மேல் நாட்டு நடிகர் போலவே எங்களுக்குத் தெரிந்தார். அதுவரை பெரிய நடிகர்களின் நடிப்பு, நடை, உடை, பாவனைகள், வசனம் பேசுகின்ற முறை, பாடலுக்கு வாயசைத்த விதம் அனைத்துமே, ஜெய்சங்கரிடம் அதிகமாக இல்லாமல் ஒரு அளவோடு இருந்தது. அவரிடம் மிகை நடிப்பு சுத்தமாக இல்லை. இதுபோன்ற பல காரணங்களாலும், தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்ததாலும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டார்.

எம்.ஜி.ஆருக்குரிய மக்கள் திலகம் பட்டத்தின் பாதியாக ‘மக்கள்’ என்பதையும், மு.கருணாநிதியின் பட்டமான ‘கலைஞர்’ என்பதையும் சேர்த்து ‘மக்கள் கலைஞர்’ என்று நடிகர் ஜெய்சங்கரை, அவரது ரசிகர்கள் அன்புடன் அழைத்தார்கள். மேலும் ‘வல்லவன் ஒருவன்’, ‘சி.ஐ.டி. சங்கர்’ போன்ற படங்களில் அவர் ஏற்றிருந்த போலீஸ் அதிகாரி வேடம், அவருக்கு ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

ஒரு வருடம் மட்டும் கண்டனூர் பள்ளியில் படித்து, நல்ல பெயரையும் நல்ல மதிப்பெண்களையும் பெற்றுக் கொண்டு, மீண்டும் என் பெற்றோர் வேலை பார்த்துக் கொண்டிருந்த சின்னமனூருக்கே வந்து விட்டேன். அந்த ஊரில் உள்ள புகழகிரி டாக்கீஸில் தான் ‘பட்டணத்தில் பூதம்’ என்ற படத்தைப் பார்த்தேன். ஜெய்சங்கர் அந்தப் படத்தில் கல்லூரி மாணவர்போல் நன்றாக நடித்திருந்தார். ‘வல்லவன் ஒருவன்’ என்ற படத்தில், ஜேம்ஸ் பாண்டு சீன்கானரியைப் போல் நடித்திருந்தார். நானும் தொடர்ந்து ஜெய்சங்கரின் படங்களைப் பார்த்து வந்தேன். வருடங்கள் ஓடி விட்டன.

ஜெய்சங்கருடன் நான் நடித்த முதல் படம் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’. அந்தப் படத்தை இயக்கியவர் நடிகர் ஜெமினிகணேசனின் மருமகனான ஸ்ரீதர்ராஜன். இவர் ஜெமினிகணேசனின் மகளான ஜிஜியைத் திருமணம் செய்தவர். நல்ல படிப்பாளி, சிவந்த நிறம், மார்க்சியத்தைக் கற்றவர், தோளில் ஒரு ஜோல்னா பை போட்டிருப்பார். ஆங்கிலத்தில் தான் அதிகம் பேசுவார். வெளிநாட்டுப் படங்களைப் பற்றி அதிகம் பேசுவார். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் சத்தியஜித்ரேயுடன் பணியாற்றிய கேமராமேன்களில் ஒருவர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அதனால் படப்பிடிப்பில் ஒரே ஆங்கில மயம்தான். ‘தமிழ்படமா?, இல்லை ஆங்கிலப்படமா?’ என்று நான் சந்தேகித்தேன். எனக்கும் அவர் களுடன் விவாதம் பண்ணுவதற்கு நல்ல தீனி கிடைத்தது.

சேலம் பகுதியைச் சுற்றித் தான் அதிக படப்பிடிப்பு நடந்தது. அன்றைக்கு சேலத்தில் கோகுலம் என்ற ஓட்டல் தான் பெயர் பெற்றது. அடுத்தது உட்லண்ட்ஸ் ஓட்டல். ஜெய்சங்கர் கோகுலம் ஓட்டலில் தங்கியிருந்தார். நான் உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கி இருந்தேன். ஒருநாள் சேலம் அருகில் உள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. காலையில் என்னை பார்த்த ஜெய்சங்கர், ‘ராஜேஷ்! ஷூட்டிங் முடிந்தவுடன் மாலையில் என்னுடன் வா. சேலத்தில் உள்ள கிளப்பிற்குச் செல்வோம்’ என்றார்.

நான் மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு முன்பாகவே, 5.45 மணிக்கெல்லாம் ஜெய்சங்கர் என்னுடைய அறைக்கு வந்துவிட்டார். வரவேற்பு அறையில் இருந்து இன்டர்காமில் என்னை அழைத்த வரவேற்பாளர், ‘நடிகர் ஜெய்சங்கர் சார், உங்களது அறைக்கு வருகிறார்’ என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வேக, வேகமாக அறையைப் பூட்டிக்கொண்டிருக்கிறேன். ‘ஹாய் ராஜேஷ்!’ என்று ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்க்கிறேன். சிரித்தபடியே படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். அந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது, ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் நடிகை கே.ஆர்.விஜயாவுடன் நீச்சல் குளத்தில் உள்ள படிக்கட்டுகளில் அவர் பாட்டுப் பாடிக்கொண்டே ஏறி வரும் காட்சி தான் என்னுடைய நினைவிற்கு வந்தது.

1967-ம் ஆண்டு 11-ம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு விடுமுறையில் இருக்கும்பொழுது, ‘பட்டணத்தில் பூதம்’ படம் பார்த்தேன். படம் எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. 1944-ம் ஆண்டு களின் ஆரம்பத்தில் ‘பேத்திங் பியூட்டி’ என்ற படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் எஸ்தர் வில்லியம் என்ற நடிகை, கதாநாயகியாக நடித்திருந்தார். அவர் நீச்சல் அடிப்பதில் உலகப் புகழ் பெற்றவர். எஸ்தர் வில்லியம் எப்படி அந்தப் படத்தில் நீச்சல் உடை அணிந்திருந்தாரோ, அதேமாதிரி நீச்சல் உடையும், அதே நிறமுள்ள ஆடையைத் தான் கே.ஆர்.விஜயாவும் அணிந்திருந்தார். ‘பேத்திங் பியூட்டி’ படத்தில் ரெட் ஸ்கெல்ட்டன் நடித்ததைப் போலவே, ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் ஜெய்சங்கர் நடித்திருந்தார்.

‘பட்டணத்தில் பூதம்’ படத்தை, அது வெளியான சமயத்தில் நாங்கள் நான்கு நாட்கள் தொடர்ந்து பார்த்தோம். அந்தப் படத்தில் ஜெய்சங்கர் அவ்வளவு இயற்கையாக நடித்து எங்களைக் கவர்ந்தார். 1967-ம் ஆண்டு திரையில் பார்த்து வியந்த அந்த நடிகர், 10 மைல்கள் சைக்கிளில் சென்று வெளியூரில் உள்ள தியேட்டரில் பார்த்து ரசித்த அந்த ஹீரோ, இன்று என்னைத் தேடி என்னுடைய அறைக்கு வருகிறார் என்பதை நினைக்கும் பொழுது, என் மனம் துள்ளலாட்டம் போட்டது.

ஜெய்சங்கரோடு பழகிய நாட்களில் அவரது குணத்தைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். பெரிய நடிகர்களிடம் இருந்து, சிறிய நடிகர்கள் வரை, அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார். மரியாதை கொடுப்பார், பேசுவார். அவரிடம் எந்தவித வேறுபாட்டையும் நம்மால் காண முடியாது. யார் மீதும் பொறாமைப்பட மாட்டார். யாரையும் குறைகூற மாட்டார். அந்தளவுக்கு நல்ல அற்புதமான குணங்களைக்கொண்டவர்.

என்னை அழைக்க ஓட்டல் அறைக்கே வந்த ஜெய்சங்கர், சேலத்திலுள்ள கிளப்பிற்கு என்னை கூட்டிச் சென்றார். அங்கு முன்னாள் அமைச்சர் ராஜாராமின் அண்ணன் ஜெயசீலன், தி.மு.க.வில் பிரபலமாக உள்ள சூடாமணி போன்றவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சூடாமணியிடம் என்னை அறிமுகம் செய்யும்போது, ‘சூடாமணி! நீ எங்களிடமெல்லாம் நிறையப் பேசுவாயே. இன்றைக்கு நீ ராஜேஷிடம் பேசிப்பார். எந்த ஒரு விஷயத்தை நீ பேசினாலும், அவன் தெளிவாகப் பேசுவான். நிறைய படிப்பவன்’ என்று என்னை பெருமையாக அறிமுகப்படுத்தினார். நான் இல்லாத நேரங்களிலும் என்னைப் பற்றி உயர்வாகப் பேசியிருக்கிறார் என்பதை பின்நாட்களில் அறிந்து கொண்டேன். தமிழகத்திலுள்ள பல பெரும் புள்ளிகளிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார், ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரோடு நான் ஆறு, ஏழு படங்களில் ஒன்றாக நடித் திருக்கிறேன். திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொள்வார். ‘ராஜேஷ்! இன்று மாலை நேரமிருந்தால் வா’ என்று அழைப்பார். பெரும்பாலும் என்னுடைய காரில்தான் இருவரும் செல்வோம். வழக்கமாக முதன்முதலில் தியாகராய நகரில் உள்ள ஒரு நண்பனின் கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்துச் செல்வார். அங்கு ஒரு மணி நேரம் அரட்டையும், சிரிப்பும், சிறு தீனியும் ஆக செலவளிப்பார். பிறகு எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி கிளப்பிற்கு அழைத்துச் செல்வார். அங்குள்ள பல நண்பர்களையும், நண்பர்களின் குடும்பத்தினரையும் எனக்கு அறிமுகம் செய்து வைப்பார். பிரசிடென்ஸி கிளப் இரவு 11 மணி வரை தான் திறந்திருக்கும். அதன்பிறகு சென்னையில் அவருடைய அமெரிக்க நண்பர்கள் தங்கியிருக்கும் ஒரு பெரிய ஓட்டலுக்கு அழைத்துச் செல்வார். அங்குள்ள நண்பர்களுடன் விடியற்காலை 5 மணி வரை சாப்பாடும், அரட்டையுமாக செலவளியும். அவர்களுடன் நானும் கலந்துகொள்வேன். பலவகை உணவுகளில், எனக்குப் பிடித்தவற்றை மட்டுமே எடுத்துக்கொள்வேன். காலை 5 மணியுடன் கச்சேரி முடியும். பிறகு அவரை அழைத்துக் கொண்டு எழும்பூரில் உள்ள அவரது வீட்டில் கொண்டுபோய் விடுவேன். இதுபோல் செல்லும் இடங்களில், நான் எப்பொழுதுமே ஓட்டுநரை வைத்துக்கொள்வதில்லை. நானே தான் என்னுடைய காரை ஓட்டுவேன். இதுபோல் எத்தனையோ நாட்கள், படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் வேலையில்லாத நேரங்களிலும் பல இரவுகள் அவரோடு மகிழ்ச்சியாக கழித்திருக்கிறேன்.

என்னுடைய மாமாவின் மகன் திருமணத்திற்கு வரும்படி ஜெய்சங்கரை அழைத்தேன். குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். அன்று இரவு பாம்குரோவ் ஓட்டலில் தனி காட்டேஜ் போட்டு ஜெய்சங்கர் மற்றும் உள்ள நண்பர்களுக்கும் தனியாக விருந்து கொடுத்தேன். அவருடன் நண்பரும் நடிகரும், இயக்குனருமான சந்தான பாரதியும் கலந்துகொண்டிருந்தார். பாம்குரோவ் காட்டேஜில் நாங்கள் அடித்த அரட்டைக் கச்சேரிக்கு அளவே இல்லை. அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தோம். உண்மையாகச் சொன்னால் அன்று நாங்கள் கல்லூரி மாணவர்கள்போல் இருந்தோம். இரவு 3 மணி ஆகிவிட்டது.

அப்போது ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

-தொடரும்.

தயாரிப்பாளர்களின் நாயகன்

நான் சென்னைக்கு வந்த சமயம், ஜெயிட்டி என்ற தியேட்டரில் ஜெய்சங்கர் - ஜெயலலிதா நடித்த ‘பொம்மலாட்டம்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ‘வெள்ளிக்கிழமை ஹீரோ’ என்று அவரை அழைத்தார்கள். காரணம்... ஜெய்சங்கர் நடித்த படங்கள், எப்படியாவது மாதத்திற்கு இரண்டு, மூன்று வெளிவந்துவிடும். பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்க முடியாதவர்கள், ஜெய்சங்கரை அணுகி படமெடுத்தார்கள். தயாரிப்பாளர்களுக்குப் பல வகைகளில் அவர் உதவியாக இருந்ததும் அதற்குக் காரணம். வெளிப்புற படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில், எதிர்பாராமல் தயாரிப்பாளருக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டால், தனக்கு தெரிந்தவர்களிடம் பேசி பணம் வாங்கிக் கொடுத்து உதவி செய்வாராம், ஜெய்சங்கர். ‘எந்த வகையிலும் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது, தொடர்ந்து இடை வெளியில்லாமல் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று நினைப்பவர் அவர். இதுபோன்ற விஷயங்களை நான் நடிக்க வருவதற்கு முன்பும், நடிக்க வந்த பின்பும் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு நெருக்கமானவர்கள் சிலரும் அவரைப் பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள்.