சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் போதையில் இருந்தார் - தனுஸ்ரீதத்தா மீது நடிகை ராக்கி சாவந்த் புகார் + "||" + In Filming she was drugs - Actress Rakhi Sawant complains about Tanushree dutta

படப்பிடிப்பில் போதையில் இருந்தார் - தனுஸ்ரீதத்தா மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்

படப்பிடிப்பில் போதையில் இருந்தார் - தனுஸ்ரீதத்தா மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்
படப்பிடிப்பில் போதையில் இருந்ததாக, தனுஸ்ரீதத்தா மீது நடிகை ராக்கி சாவந்த் புகார் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார். இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக மல்லுக்கட்டி இருக்கிறார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்தவர். தேசிய விருதுகள் பெற்ற பிரபல இந்தி நடிகர் நானா படேகர் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ புகார் கூறினார். இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று அவரது ஆட்கள் என்னை மிரட்டினார்கள் என்றும் தெரிவித்தார்.


தற்போது இந்தி டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி மீதும் தனுஸ்ரீத்தா புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “சாக்லேட் படத்தின் படப்பிடிப்பில் இர்பான் கான் நடித்த காட்சி படமாகிக் கொண்டு இருந்தது. எனக்கும் அந்த காட்சிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் டைரக்டர் என்னிடம் வந்து இர்பான்கானுக்கு நன்றாக நடிப்பு வர வேண்டும். இதற்காக உனது ஆடைகளை களைந்து விட்டு அவர் முன்னால் போய் நில்லு என்றார். நான் அதிர்ச்சியானேன். இதைக் கேட்டு இர்பான்கானும் அதிர்ச்சியாகி எனக்கு நடிக்க தெரியும். அதற்காக இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்” என்று கண்டித்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தனுஸ்ரீதத்தாவை விமர்சித்து நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:-

தனுஸ்ரீ குற்றம்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். என்னிடம் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்று நானா படேகர் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீதத்தா 4 மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னை ஆட அழைத்து இருந்தார்கள். தனுஸ்ரீ அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார். அவரைப்பற்றி கவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் 2008-ல் படப்பிடிப்பு அரங்குக்கு வெளியே தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து உடைத்தும் டயரை கிழித்தும் சேதப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.