நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்


நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்
x
தினத்தந்தி 10 May 2019 2:59 PM IST (Updated: 10 May 2019 2:59 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன்.

ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது என்பது என் கருத்து.

இதைத்தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு :-

கே:- அனிஷாவுடனான திருமணம் எப்போது?

ப:- அக்டோபர் 9-ந் தேதி திருமணம், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கே:- மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் துப்பறிவாளன் 2 உறுதியாகி விட்டதா?

ப:- ஆமாம். ஆகஸ்டு 15-ந் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம்.

கே:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளதே?

ப:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் அரசு காட்டும் அக்கறையையும், ஆர்வத்தையும் பைரசி வி‌ஷயத்திலும் காட்டும் என நம்புகிறேன். காரணம் பைரசி தான் தமிழ் சினிமாவை அழித்துக்கொண்டு இருக்கிறது.

கே:- உங்கள் அணியில் இருந்து விலகிய ஆர்கே.சுரேஷ், உதயா இருவரும் நீங்கள் சிறு படங்கள் ரிலீஸ் செய்ய உதவவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?

ப:- அவர்களுடைய படங்கள் நன்றாக இல்லை. அதனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதுதான் உண்மையான காரணம். ஒரு படத்தை 4 பேர் தான் பார்க்க வருகிறார்கள் என்னும்போது அந்த படத்தை 2 வாரங்கள் ஓட்டியே ஆக வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை நான் கட்டாயப்படுத்த முடியாது. அது ரஜினி படமோ புதுமுகத்தின் படமோ இதுதான் நிலைமை.

கே:- தயாரிப்பாளர் சங்கத்தின் ரிலீஸ் ஒழுங்கு கமிட்டி ஏன் தோல்வி அடைந்தது?

ப:- என் படத்தை நிறுத்துவதற்கு நீ யார் என்ற கேள்வி வரும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு படத்தை உருவாக்க போதிய நேரம் எடுத்துக் கொள்பவர்கள் ரிலீஸ் செய்ய மட்டும் அவசரப்படுகிறார்கள். மற்றவர்கள் வருமானத்தை சாப்பிட ஆசைப்படுபவர்கள் இருக்கும்வரை இந்த பிரச்சினை தீராது.

கே:- தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வந்தால் மீண்டும் போட்டியிடுவீர்களா?

ப:- மீண்டும் போட்டியிடுவேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கையில் எடுத்த எந்த வி‌ஷயத்தையும் பாதியில் விடமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story