மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்


மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
x
தினத்தந்தி 16 Aug 2019 5:55 AM GMT (Updated: 16 Aug 2019 5:55 AM GMT)

கடும் போட்டிக்கு இடையே 'அந்தாதுன்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் தியாகராஜன்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதுன்'. 2018, அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் இந்தியாவில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை புரிந்தது. குறிப்பாக சீனாவில் ஹாலிவுட் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் யதார்த்தமாக நடித்த ஆயுஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. பிரம்மாண்ட வெற்றியால், இந்தப் படத்தின் இதர மொழிகள் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது.

இதில் தனுஷ், சித்தார்த் ஆகியோர் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியானது. அதிலும், குறிப்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அந்தாதுன்' படத்தின் ரீமேக்கில் நான் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தியாகராஜன் 'அந்தாதுன்' தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக தியாகராஜன், " 'அந்தாதுன்’ கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக்கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைதேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இதில் சரியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.தற்போது படத்தின் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் வெளியான 'ஜானி கத்தார்' படத்தின் ரீமேக்கையும் கைப்பற்றி, தமிழில் 'ஜானி' என்ற பெயரில் தியாகராஜன் தான் தயாரித்தார். அதிலும் பிரசாந்த் நாயகனாக நடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story