என் படத்தை எதிர்ப்பதா? - நடிகர் சல்மான்கான் ஆவேசம்
என் படத்தை எதிர்ப்பதா என நடிகர் சல்மான்கான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள தபாங் 3 இந்தி படம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சாதுக்களாகிய சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற பாடல் காட்சி இடம்பெற்றுள்ளதற்கு இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தணிக்கை குழுவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் “தபாங்-3 படத்தின் பாடலில் சாமியார்களையும் இந்து கடவுள்களையும் அவதூறாக சித்தரித்து உள்ளனர். சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிகளை வைத்துள்ளனர். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சமூக வலைத்தளத்திலும் தபாங்-3 படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மும்பையில் நடந்த தபாங்-3 பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சல்மான்கான் இதனை கண்டித்தார். அவர் பேசும்போது, “பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் சிலர் எதிர்ப்புகள் தெரிவிக்கிறார்கள். அதுபோல் தபாங்-3 படத்தின் பாடலையும் எதிர்த்துள்ளனர். விளம்பரத்துக்காகவே இதனை செய்கின்றனர். நான் ஏற்கனவே தயாரித்த லவ் யாத்ரி படத்தையும் எதிர்த்தனர். இது கண்டிக்கத்தக்கது” என்றார்.
Related Tags :
Next Story