சினிமா செய்திகள்

தமிழில் வரும் மம்முட்டியின் சரித்திர படம் + "||" + History of Mammootty's Film in Tamil

தமிழில் வரும் மம்முட்டியின் சரித்திர படம்

தமிழில் வரும் மம்முட்டியின் சரித்திர படம்
மம்முட்டியின் சரித்திர படமான மாமாங்கம், தமிழில் வெளியாக உள்ளது.

மம்முட்டி மலையாளத்தில் நடித்துள்ள சரித்திர படம் ‘மாமாங்கம்.’ உன்னி முகுந்தன், தருண் ஆரோரா, அனு சித்தாரா, கனிகா, இனியா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். எம்.பத்மகுமார் இயக்கி உள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாமாங்கம் திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. விரைவில் திரைக்கு வரும் மாமாங்கம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.


தமிழ் பதிப்புக்கான வசனத்தை இயக்குனர் ராம் எழுதி உள்ளார். படம் குறித்து மம்முட்டி கூறியதாவது:-

“மாமாங்கம் சாதாரண பகை மற்றும் பழிவாங்கல் கதை கிடையாது. என்றைக்கோ நடந்த ஒரு சம்பவத்துக்காக தொடர்ச்சியாக பழிவாங்கிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை. யாருக்காக செல்கிறோம். யாருக்காக சாகிறோம் என்பது முக்கியம்.

அதற்கு ஒரு தீர்வை சொல்வதுபோல் படத்தின் கரு இருக்கும். இந்த படத்துக்கான தமிழ் வசனங்களை எழுதும்படி நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இயக்குனர் ராம் எழுதிக் கொடுத்து இருக்கிறார். நானே தமிழில் டப்பிங் பேசி இருக்கிறேன். மொழியை தாண்டி பல படங்கள் வருகின்றன.

உணர்வுப்பூர்வமான காட்சிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும். அதுபோன்ற ஒரு படமாக மாமாங்கம் இருக்கும். இவ்வாறு மம்முட்டி கூறினார்.