மாற்றுத்திறனாளிகளுக்கு விஜய் படப்பிடிப்பால் இடையூறா? அறிக்கை கேட்ட ஆணையம்


மாற்றுத்திறனாளிகளுக்கு விஜய் படப்பிடிப்பால் இடையூறா? அறிக்கை கேட்ட ஆணையம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-13T00:53:17+05:30)

விஜய் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதா? என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு ஆகியோரும் உள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதன் படப்பிடிப்பு டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது. சில தினங்களுக்கு முன்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பார்வையற்றோர் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. முறையான அனுமதி பெற்றே பள்ளியில் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் படப்பிடிப்பு தளவாடங்கள் மற்றும் வாகனங்களாலும் படப்பிடிப்பு குழுவினரின் கட்டுப்பாடுகளாலும் பார்வையற்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதுசம்பந்தமான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் சார்பில் பள்ளி முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தில் விஜய் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டதா? என்று அறிக்கை அளிக்கும்படி குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி முதல்வரிடம் இருந்து அறிக்கை பெற்ற பிறகு ஆணையம் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story