அரசியலில் பரபரப்பு ரஜினிகாந்த்-அஜித்குமார் சந்திப்பா?


அரசியலில் பரபரப்பு ரஜினிகாந்த்-அஜித்குமார் சந்திப்பா?
x
தினத்தந்தி 13 Dec 2019 5:00 AM IST (Updated: 13 Dec 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்தும் அஜித்குமாரும் விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த், கமல்ஹாசனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இருவரும் கைகோர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனை உறுதிப்படுத்துவது போல் அடிக்கடி சந்திக்கவும் செய்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய், அஜித்குமார் நகர்வுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

இவர்களின் அரசியல் பார்வை எப்படி இருக்கும். ரசிகர்கள் யாரை ஆதரிப்பார்கள் என்றெல்லாம் பிற கட்சியினர் யோசிக்க தொடங்கி உள்ளனர்.

விஜய் அரசியலுக்கு வர விரும்புவதாகவும் இதற்காகவே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி மாநில பொறுப்புகளில் இருந்து பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமித்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் பேசுகின்றனர்.

அஜித்குமாரை பொருத்தவரை அரசியல் பரபரப்புகளில் இருந்து எப்போதுமே விலகியே இருந்து வந்திருக்கிறார். ரசிகர் மன்றத்தையும் கலைத்து விட்டார். அவர் அ.தி.மு.க.வுக்கு வரவேண்டும் என்று அமைச்சர்கள் அழைப்பு விடுத்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்தும் அஜித்குமாரும் விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ஒரே இடத்தில் நடக்க உள்ளன. அப்போது இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கூட்டணி அமைத்தால் விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை தங்களுக்கு ஆதரவாக திருப்பும் முயற்சியாக இந்த சந்திப்பு அமையலாம் என்றும் பேசப்படுகிறது.

Next Story