குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 26 Jan 2020 4:42 AM GMT (Updated: 26 Jan 2020 4:42 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்து, அதிக நாட்கள் ஓடிய படம் எது? (வி.ஜெய் கணேஷ், சென்னை–3)

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த ‘16 வயதினிலே,’ ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஆகிய 2 படங்களும் 175 நாட்களை தாண்டி ஓடி, வெள்ளிவிழா கொண்டாடின!

***

திரிஷா கதாநாயகியாக நடித்த ‘96’ படம் பிற மொழிகளில் தயாரிக்கப்படுகிறதா, இல்லையா? தயாரிக்கப்படுவதாக இருந்தால், கதாநாயகி யார்? (எஸ்.குமரன், குன்றத்தூர்)

‘96’ படம் தெலுங்கில் தயாரிக்கப்படுகிறது. திரிஷா நடித்த வேடத்தில், சமந்தா நடிக்கிறார்!

***

குருவியாரே, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன், இந்தி நடிகை கங்கனா ரணாவத் ஆகிய இருவரும் நடிக்கிறார்களே...அந்த இருவரில், ஜெயலலிதா வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறவர் யார்? (கே.துரை, திருச்சி)

ரம்யா கிருஷ்ணன் பொருந்துகிற அளவுக்கு (முக தோற்றத்திலும், நடிப்பிலும்) கங்கனா ரணாவத் பொருந்தவில்லை!

***

அம்மன் வேடங்களில், அதிக படங்களில் நடித்தவர் யார்? இப்போதும் அவரால் அம்மன் வேடங்களில் (நிறைய நகைகள் அணிந்து) நடிக்க முடியுமா? (ஆர்.பிரதாப்சிங், துறையூர்)

கே.ஆர்.விஜயா! நகை கடை விளம்பர படத்தில் நடிப்பவரால் அம்மன் வேடங்களில் நடிக்க முடியாதா என்ன? அவர் நடிக்க தயாராகவே இருக்கிறார்!

***

குருவியாரே, வரலட்சுமி, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக முடியுமா? (எஸ்.மந்திரமூர்த்தி, நாகர்கோவில்)

வரலட்சுமியிடம், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆவதற்கான தகுதிகள் நிறையவே உள்ளன!

***

‘தேன் கிண்ணம்’ படத்தில் நாகேஷ் ஜோடியாக நடித்தவர் யார்? (முகமது தவ்பீக், மேலப்பாளையம்)

அந்த படத்தில், நாகேசுக்கு ஜோடியாக நடித்தவர், அப்போதைய கவர்ச்சி நடிகை விஜயலலிதா!

***

குருவியாரே, போலீஸ் வேடங்களில் அதிகமாக நடித்த 2 கதாநாயகர்களை கூற முடியுமா? (பிரவீன்குமார், கோவை)

விஜயகாந்த், சத்யராஜ் ஆகிய இருவரும் போலீஸ் வேடங்களில் அதிகமாக நடித்து இருக்கிறார்கள்!

***

ஏவி.எம்.ராஜன்–புஷ்பலதா தம்பதிகள் என்ன செய்கிறார்கள்? (எம்.அலெக்சாண்டர், ஈரோடு)

இருவரும் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி, கிறிஸ்தவ இறை பணியாற்றி வருகிறார்கள்!

***

குருவியாரே, நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில் கோவிலாக போய் பிரார்த்தனை செய்வது ஏன்? (ஏ.எட்வர்ட், புதுச்சேரி)

அந்த காதல் ஜோடி, கோவில் கோவிலாக சென்று தங்கள் திருமண தடை விலக வேண்டும் என்று வேண்டுதல் வைக்கிறார்களாம்!

***

‘சிரிப்பழகி’ சினேகா காதல் தேவதை வேடங்களுக்கு மட்டும்தான் பொருந்துவாரா? (சி.பேரரசு, திங்களூர்)

வீரதீரமாக சண்டை போடும் காட்சிகளுக்கும் பொருந்துவார் என்பதை ‘பட்டாஸ்’ படத்தில் நிரூபித்து இருக்கிறாரே...!

***

குருவியாரே, பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து யாராவது நடிகர் ஆகியிருக்கிறார்களா? அப்படி ஆகியிருந்தால் இப்போது அவர் என்ன செய்கிறார்? (பி.வேல்முருகன், சேலம்)

ராஜேஷ், பள்ளிக்கூட ஆசிரியராக பணிபுரிந்தவர்தான். வெள்ளித்திரை, சின்னத்திரை என்று வேறுபாடு பார்க்காமல், இரண்டிலும் நடித்து திறமையான நடிகர் என்று நல்ல பெயர் வாங்கி வருகிறார்!

***

‘நெடுஞ்சாலை’ படத்தில் அறிமுகமான சிவதா, எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ஏன் அதிக படங்களில் நடிக்கவில்லை? (எஸ்.தென்னரசு, தேவகோட்டை)

சிவதா, கேரளாவை சேர்ந்தவர். கதைகளையும், கதாபாத்திரங்களையும் அவர் தேர்வு செய்து நடிப்பதால் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போகிறதாம்!

***

குருவியாரே, விஜய்–நயன்தாரா, விஜய்–திரிஷா ஜோடிகளில், எது ஜாடிக்கேற்ற மூடி மாதிரி பொருத்தமாக இருக்கும்? (ஆர்.அரவிந்தராஜ், கிருஷ்ணகிரி)

இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள ஜோடியே பொருத்தமான ஜோடி என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறுகிறார்கள்!

***

இப்போதைய பின்னணி பாடகர்களில், மிக வித்தியாசமான குரல் வளம் கொண்டவர் யார்? அவர் பாடி, ‘ஹிட்’ ஆன ஒரு பாடல்...? (கவுதம், மதுரவாயல்)

சித் ஸ்ரீராம். வித்தியாசமான குரல்வளம் கொண்ட பின்னணி பாடகர். விக்ரம் நடித்த ‘ஐ’ படத்துக்காக இவர் பாடிய ‘‘என்னோடு நீயிருந்தால்...’’ பாடல், ஒரு உதாரணம்!

***

குருவியாரே, ‘தங்கப்பதக்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் என்ன ஆனார்? (ஆர்.குரு, தேனி)

ஸ்ரீகாந்த், படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு முதியவராகி விட்டார்!

***

விஜய் சேதுபதி நடித்த முதல் படம் எது? அந்த படத்தை இயக்கியவர் யார்? (ஆர்.எஸ்.செல்வராஜ், டி.தேவனூர்)

விஜய் சேதுபதி நடித்த முதல் படம், ‘தென்மேற்கு பருவக்காற்று.’ அந்த படத்தை இயக்கியவர், சீனுராமசாமி!

***

சாரதாவுக்கு ‘ஊர்வசி’ பட்டம் எந்த படத்தின் நடிப்புக்காக கொடுக்கப்பட்டது? (ஏ.அசனப்பா, பொட்டல் புதூர்)

‘துலாபாரம்’ படத்தில் திறமையாக நடித்ததற்காக, சாரதாவுக்கு ‘ஊர்வசி’ பட்டம் கொடுக்கப்பட்டது!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், ‘காதல் மன்னன்’ ஜெமினிகணேசனும் இணைந்து நடித்து அதிக நாட்கள் ஓடிய படம் எது? (ப.வளர்மதி, சோழவந்தான்)

‘பாசமலர்!’

***

முன்பெல்லாம் 100 நாட்கள் ஓடினால்தான் வெற்றி படங்கள். இப்போது...? (இரா.செந்தமிழ் செல்வன், கரூர்)

இப்போது, மூன்று நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே வெற்றி படம்தான்!

Next Story