நெல்லைத் தமிழில் எழுதிய பாடல்


நெல்லைத் தமிழில் எழுதிய பாடல்
x
தினத்தந்தி 14 Feb 2020 11:53 AM GMT (Updated: 14 Feb 2020 11:53 AM GMT)

பாலசந்தருக்கும் அப்பாவுக்குமான நட்பு, பாலசந்தரின் மூன்றாவது படத்தில் இருந்து தொடங்கியது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் அவரது பெரும்பாலான படங்களுக்கு வாலி தான் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே வாலியும் பாலசந்தரும் நண்பர்கள் என்பதால், அவர் கண்ணதாசனை வைத்து பாடல் எழுதியது ஆச்சரியமான ஒன்று. பாலசந்தருக்கு வாலி எழுதிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை.

ஆனால் ஒரு இயக்குநர், பாடலாசிரியர் என்பதைத் தாண்டி, ஏதோ ஒரு பாசப் பிணைப்பு பாலசந்தருக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் இருந்தது. ‘அரங்கேற்றம்’ படத்தில் இருந்துதான் அப்பா தொடர்ச்சியாக பாலசந்தர் படங்களுக்கு எழுதத் தொடங்கினார்.

வேடிக்கை என்னவென்றால் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் அப்படித்தான். பாலசந்தரின் பல படங்களுக்கு வி.குமார் இசையமைத்து இருப்பார். அவ்வப்போது எம்.எஸ்.விஸ்வநாதன், ஒன்றிரண்டு படங்களுக்கு இசை அமைப்பார். (பாலசந்தருக்கு அப்பா தொடக்கத்தில் எழுதியது போல). ‘அரங்கேற்றம்’ படத்தில் இருந்துதான் கண்ணதாசன்-விஸ்வநாதன் கூட்டணி தொடர்ச்சியாக பாலசந்தரின் படங்களுக்கு பணியாற்றினார்கள்.

என்னுடைய அண்ணன் கண்மணி சுப்பு, யாராவது ஒரு இயக்குனரிடம் தன்னை உதவியாளராக சேர்த்துவிடச் சொல்லி அப்பாவிடம் கேட்டார். அப்போது அப்பா “பாலசந்தரிடம் சேர்ந்துகொள்” என்று சட்டென்று சொன்னார். அந்த அளவிற்கு அவருக்கு பாலசந்தர் மீது அன்பும் மரியாதையும் இருந்தது.

ஒரு படத்தில் பாடல் இடம்பெறும் சூழலை, பாடலாசிரியருக்கு இயக்குனர்கள் விளக்கி சொல்லி, அதற்கான படலை எழுதச் சொல்லி கேட்பார்கள். ஏனோ தானோ என்று சொல்லாமல், பாட்டுக்கான சூழலை அற்புதமாக விளக்கும் இயக்குனர்களை அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

பீம்சிங், ஏ.பி.நாகராஜன், கே.சங்கர், பந்துலு, ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன், முக்தா ஸ்ரீனிவாசன் என்று அப்பாவுக்கு பிடித்த இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்களின் படங்களில் பாடல்கள் பெரும் வெற்றியை பெற்றிருக்கும்.

காரணம் அவர்கள் பாட்டுக்கான சூழலை விளக்கிச் சொல்லும் முறைதான். அதேபோலத் தான் பாலசந்தர் இயக்கிய படங்களில் கண்ணதாசன் - விஸ்வநாதன் கூட்டணி அற்புதமான பாடல்களை தர முடிந்தது.

பாலசந்தர் இயக்கிய ‘அனுபவி ராஜா அனுபவி’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சி. இந்தப் படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். ஒரு நாகேஷ் தூத்துக்குடி துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக இருப்பார். அவரும் மனோரமாவும் சேர்ந்து பாடும் பாடலுக்கான கம்போசிங்.

பாலசந்தர் பாடலுக்கான சூழலை விளக்கி, “இந்த நகைச்சுவைப் பாடல் தூத்துக்குடி வட்டார தமிழில் இருக்க வேண்டும், அதே சமயம் நெல்லைத் தமிழை கிண்டல் செய்கிற மாதிரி இருக்கக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.

“அவ்வளவுதானே, எழுதிட்டா போச்சு” என்றார் அப்பா.

விஸ்வநாதன் மெட்டுப்போட, அப்பா பல்லவியை சொல்லத் தொடங்கினார்.

எடுத்த உடனேயே “முத்துக்குளிக்க வாரியளா” என்று அப்பா சொன்னார்.

அவர் சொன்னவுடன் தன்னையறியாமலே கைதட்டி விட்டார் பாலசந்தர். கடகடவென்று முழு பாடலையும் எழுதி முடித்துவிட்டார் அப்பா. இந்தப் பாடல் அந்தக் காலத்தில் மிகவும் சூப்பர் ஹிட் ஆன பாடல்.

இந்தப் படத்தை இந்தியில் எடுக்க விரும்பிய இந்தி நகைச்சுவை நடிகர் மெஹமூத், அதன் உரிமையை வாங்கி நாகேஷ் நடித்த இரட்டை வேடத்தில் அவரே நடித்தார்.

“முத்துக்குளிக்க வாரியளா” பாடலை இந்தியில் எடுக்கும் போது, தமிழில் போடப்பட்ட அதே டியூனைத் தான் இந்தியிலும் பயன்படுத்துவது என்று மெஹமூத் தீர்மானமாக இருந்தார்.

இந்தியில் அந்த பாடல் எழுதப்பட்ட போது, “முத்துக்குளிக்க வாரியளா” என்ற வரிகளில் இருந்த அந்த ஒலியின் ஈர்ப்பு இந்தி வார்த்தையில் வெளிப்படவில்லை. அதனால் மெஹமூத் ஒரு வேலை செய்தார். இந்தி பாடலின் தொடக்கத்தை “முத்துக்குளிக்க வாரியளா” என்று தமிழ் வார்த்தையில் தொடங்கி அடுத்த வரியில் இருந்து இந்தி வார்த்தைகளை சேர்த்துக் கொண்டார்.

ஒரு இந்திப் பாடலை தமிழ் வார்த்தைகளை கொண்டு தொடங்கியது முதலும் கடைசியும் அதுதான். பாலசந்தர் - கண்ணதாசன் - விஸ்வநாதன் கூட்டணியால் தமிழுக்கு கிடைத்த மரியாதை இது.

அந்தப் படத்திற்காக எழுதப்பட்ட இன்னொரு பாடல் ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்ற பாடல். தூத்துக்குடியில் அயர்ச்சி காரணமாக கப்பலில் தூங்கிய நாகேஷை, மெட்ராஸ் (சென்னை) துறைமுகத்தில் இறக்கி விட்டு விடுகிறார்கள். ஒரு கிராமத்தான் பார்வையில் மெட்ராஸைப் பற்றி ஒரு பாடல் என்று பாலசந்தர் சொன்னார். அப்பாவும்-

“மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவா போறவுக யாருமில்லே- இங்கே
சரியா தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் வித்தியாசம் தோணலை
அநியாயம் ஆத்தாடியோ”

என்று பாடல் வரிகளைச் சொன்னார்.

ஒரு சரணத்தில்-

“தேராட்டம் காரினிலே
ரொம்ப திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரோட்டம் என்னவாகும்?”

என்று அப்பா சொன்னவுடன் அதை வெகுவாக ரசித்தார் பாலசந்தர். இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்டானது.

ஆனால் புதிதாக இன்னொரு பிரச்சினை ஆரம்பமாகியது. இந்தப் பாடலின் ஒரு சரணத்தில்

“ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருகெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்”

என்று எழுதி இருந்தார்.

அந்தக் காலத்தில் மூர் மார்கெட்டில், ‘மூர் மார்கெட் வியாபாரிகள் சங்கம்’ என்றொரு சங்கம் இருந்தது. தங்களை அவமானப்படுத்தி விட்டதாக சொல்லி அவர்கள், அப்பாவுக்கும், பாலசந்தருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

அப்பாவுக்கு இந்த கோர்ட்டு கேஸ் எல்லாம் சகஜம். ஆனால் பாலசந்தருக்கு அது முதல் அனுபவம். நிஜமாகவே மிரண்டு போய்விட்டார்.

அவர் அப்பாவுக்கு போன் செய்து “கவிஞர், மூர் மார்கெட் வியாபாரிங்க இந்த பாட்டுக்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க.. என்ன செய்றது?” என்று கேட்டார்.

அதற்கு அப்பா “இதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் எவ்வளவு கேஸ் பாத்திருக்கேன். அவங்க நோட்டீசுக்கு நாம் பதில் நோட்டீஸ் அனுப்புவோம். அப்புறம் அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வராது” என்று சொல்லி பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

அப்பா சொன்ன மாதிரியே அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கோர்ட்டு கேஸ் என்று எதையும் சந்திக்காதவர் பாலசந்தர். ஆகையால் அவருக்கு அந்த அனுபவம் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது.

சிவாஜியை வைத்து படம் எடுக்கலாம் என்று அப்பாவிடம் சொன்னதை முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன். அது தள்ளிப் போனவுடன் 1970-களின் இறுதியில் பாலசந்தர் ரஜினி காம்பினேஷனில் படம் தொடங்கலாம் என்று அப்பாவிடம் சொன்னேன்.

அப்பாவுடன் நானும் பாலசந்தரை சந்திக்கப் போனோம். “நிச்சயமாக படம் பண்ணுவோம் கவிஞர், என்னுடைய கமிட்மெண்ட்ஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்றேன். அப்புறம் ஆரம்பிச்சுடுவோம்” என்றார்.

ஆனால் அதுவும் நடக்கவே இல்லை. அப்பா அமெரிக்காவில் காலமானார். அப்போது பாலசந்தர் ஒரு பேட்டியில் “கவிஞர் கேட்டு என்னால் செய்ய முடியாமல் போனது ஒன்றே ஒன்றுதான். அவருக்கு ஒரு படம் செய்து தரமுடியாமல் போனது மிகவும் வருத்தப்படச் செய்கிறது” என்று சொல்லி இருந்தார்.

கவிதாலயா என்ற நிறுவனத்தை பாலசந்தர் தொடங்கினார். அதில் முதல் படம் எஸ்.பி.முத்துராமன் இயக்க, ரஜினி நடித்த ‘நெற்றிக்கண்’ படம். முதல் முறையாக பாலசந்தர் சம்பந்தப்பட்ட ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைத்தது ‘நெற்றிக்கண்’ படத்திற்கு தான். அப்போது இளையராஜாவிடம் பாலசந்தர் சொன்னது ஒன்றே ஒன்றுதான், “இந்தப் படத்திற்கு கண்ணதாசன் தான் எல்லா பாடல்களையும் எழுதவேண்டும்” என்றார். அது கண்ணதாசன் மீது பாலசந்தர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடு.

விதியோ என்னவோ அது தான் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்கு அப்பா முதலும் கடைசியுமாக எழுதியது. அவரது அடுத்த படம் தொடங்கியபோது அப்பா கண்ணனுடன் கலந்துவிட்டார்.

இதன் பிறகு சில வருடங்கள் கழித்து ரஜினியை சந்திக்க அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றேன். வரவேற்பறையில் நிறைய பேர் காத்திருந்தார்கள். ரஜினியின் உதவியாளர் ஜெயராம் என்பவரிடம், என் பெயரை ஒரு சீட்டில் எழுதித் தந்தேன்.

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து பக்கவாட்டில் இருந்த ஒரு கதவு திறந்தது. ரஜினிகாந்த் உள்ளே வந்தார். அனைவரும் எழுந்து நின்றோம்.

யாரையோ தேடுவது போல பார்த்த அவர். ஒரு ஓரத்தில் நின்ற என்னைப் பார்த்ததும் “வாங்க சார்” என்று வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.

அவரது அறைக்கு சென்றவுடன், “என்ன விஷயம் சார்?” என்று கேட்டார். அப்பாவுடன் சென்று பாலசந்தரை சந்தித்ததை சொல்லி “ஒரு படம் பண்ணனும் சார், அதுக்கு தான் பார்க்க வந்தேன்” என்றேன்.

சிறிது நேரம் யோசித்தவர் “சொல்றனே” என்றார்.

அதன் பிறகு ஒரு முறை இரட்டை இயக்குனர்கள் பாரதி வாசுவுடன் (சந்தானபாரதி - பி.வாசு) சென்று அவரைச் சந்தித்தேன். “நானே சொல்றேன் சார்” என்றார்.

அதன் பிறகு அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். அவரைப் பார்த்து கால்ஷீட் கேட்க கூச்சப்பட்டு இன்றுவரை அவரைப் பார்க்கவில்லை.

ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் பணிபுரியும் எனது நண்பன் ஸ்டில்ஸ் பாபா, இன்றும் கூட என்னிடம் சொல்வது ஒன்று தான், “டேய் நீ போய் சாரைப் பாத்திருக்கணும்” என்பதுதான்.

எளிய இலக்கியம்

தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தில் ஒரு காட்சி. எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியை காதலிப்பார். எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு வரும் சரோஜாதேவியின் அப்பா எம்.ஆர்.ராதாவைப் பார்த்ததும், எம்.ஜி.ஆரின் தாய்க்கு அதிர்ச்சி.

‘தன் கணவரை கொலை செய்தவர் எம்.ஆர்.ராதா’ என்று சொல்லி, திருமணத்திற்கு தடை விதித்து விடுகிறார் தாய்.

அதே போல், “இந்த மாப்பிள்ளை உனக்கு வேண்டாம்” என்று சரோஜாதேவிக்கு தடை போட்டு விடுகிறார் எம்.ஆர்.ராதா.

காதலர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு விடுகிறது. அந்த ஏக்கத்தில் இரவில், தனிமையில் சரோஜாதேவி பாடுகிறார். இதுதான் பாடலுக்கான சூழல்.

இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்தார். அவரது இசை என்றால் முதலில் பாடல் எழுத்தப்பட்டு விடும். பின்னர் அதற்கு அவர் இசை அமைப்பார்.

பாடலுக்கான சூழல் அப்பாவிடம் சொல்லப்பட்ட பிறகு, அப்பா சிந்தனை வசப்படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதல், ஊடல், பிரிவு பற்றிய கவிதைகள் அவர் நினைவில் வந்து போகின்றன.

அப்போது பல வருடங்களுக்கு முன் அப்பா படித்த இந்த குறுந்தொகைப் பாடலும், தாயுமானவரின் பாடலும் அவரின் நினைவிற்கு வருகின்றன.

பழந்தமிழ் இலக்கியமான குறுந்தொகையில், பதுமனார் என்ற புலவர் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். அது-

“நள்ளென்றன்றே யாமம் சொல்லவிந்து
இனிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே”

‘நள்’ என்ற ஓசையுடன் இருக்கும் இந்த இரவில், மக்கள் உறங்கிகொண்டிருக்கின்றனர். பரந்த இடத்தை உடைய இந்த உலகமும் உறங்குகிறது. நான் மட்டும் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று தலைவனைப் பிரிந்த தலைவி தன் தோழியிடம் புலம்புவதாகப் பாடல் அமைகிறது.

இதே கருத்தினை தாயுமானவர் ஒரு பாடலில்-

“மண்உறங்கும் விண்உறங்கும்
மற்றுளஎலாம்உறங்கும்
கண்உறங்கேன் எமிறைவர்
காதலால் பைங்கிளியே”

“மண்ணில் வாழும் மக்களும், விண்ணில் வாழும் தேவரும் உறங்குகின்றனர், அவர்களுடன் இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களும் உறங்குகின்றன. என் இறைவன் மீது நான் கொண்ட காதலால் என்னால் உறங்க முடியவில்லை” என்று தாயுமானவர் சொல்வதாக பாடல் அமைகிறது.

அந்தக் கருத்தினை உள்ளடக்கி ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கான வரிகளை அமைக்கின்றார்...

‘பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே,
கான் உறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை.

மான் உறங்குது மயிலும் உறங்குது
மனம் உறங்கவில்லை,
என் வழி உறங்குது மொழியும் உறங்குது
விழி உறங்கவில்லை.

தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி, அது
தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி
திங்கள் நீயும் பெண்குலமும் ஒருவகை ஜாதி-
தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி?’

(நிறைவுபெற்றது)

Next Story