மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : விஜயன்


மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : விஜயன்
x
தினத்தந்தி 13 March 2020 3:50 PM IST (Updated: 13 March 2020 3:50 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 17.5.1944 அன்று பிறந்தவர் விஜயன். அடிப்படையில் நல்ல எழுத்தாற்றல் கொண்டவர். நண்பர்களின் பாராட்டுக்கள் ஊக்கம் தரவே, மலையாள சினிமாவில் உதவி இயக்குனராக தன் கலை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

‘சங்குபுஷ்பம்’ என்கிற படத்திற்கு, விஜயன் கதை - வசனம் எழுதினார். அந்தப் படத்தில் விஜயனுக்கென்று ஒரு வேடம் முடிவானது. ஆனால் சூழ்நிலை காரணமாக அவரால் அதில் நடிக்க முடியவில்லை. அவர் ஏற்கவேண்டிய வேணு எனும் கதாபாத்திரத்தை, பிரபல நடிகர் சுகுமார் (நடிகர் பிருத்விராஜின் அப்பா ) ஏற்று நடித்தார். படம் நல்ல ஹிட். வசனங்களும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டன.

‘சங்குபுஷ்பம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவா், பி.எஸ்.நிவாஸ். அவர் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர். அந்தப் படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குனரானார் விஜயன்.

அவருக்குள் ஆறாத நடிப்பு வேட்கை இருந்துகொண்டே இருந்தது. அதை அறிந்த பாரதிராஜா, விஜயனுக்கு ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தில் ‘பட்டாளத்தான்’ என்ற கதாபாத்திரத்தை வழங்கினார்.

காதலர்களை வாழவைக்க ஊரை எதிர்த்துத் தன் உயிரையே தியாகம் செய்யும், முற்போக்கு சிந்தனை கொண்ட அந்த கதாபாத்திரம் வெகுவாகப் புகழப்பட்டது.

விஜயனின் மனைவி கேரள முன்னாள் முதல்வர் ஈகே நாயநாரின் மருமகள் ஆவார். தமிழில் 1991-ம் ஆண்டு இளையராஜா இசையில் ‘புதிய ஸ்வரங்கள்’ எனும் படத்தை இயக்கினார் விஜயன். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை.

நடிப்புக்கலை என்பது, பல்வேறான பாணிகள் கொண்டது. நடிகருக்கு முகம் எப்படி முக்கியமோ, அப்படித்தான் குரலும். தன் முக பாவங்களைக் கொண்டு ஒரு வேடத்தை அலங்கரிப்பதைப் போலவே, குரலாலும் அதனை வெளிப்படுத்தும் தொனியாலும், வசனங்களை எப்படி உச்சரிக்கிறார் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஒருவர் நடிப்பில் தனக்கான பாணியை வகுத்துக் கொள்ள இயலும்.

அந்த வகையில் மிக அமைதியான தொனியைக் கொண்டு, அதிராத மென்மையை எப்போதும் தன் நடிப்பில் படரச் செய்தவர் நடிகர் விஜயன். மவுனத்துக்கு அருகிலான உச்சரிப்பும் கம்பீரமான முகவெட்டும் விஜயனை என்றும் நினைவுபடுத்துபவை.

முதல் படமே வெற்றி அல்லவா?, மளமளவென்று படங்கள் புக் ஆகின. ‘தெருவிளக்கு’, ‘மாந்தோப்புக்கிளியே’ ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’, ‘சின்னச்சின்ன வீடு கட்டி’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘ரன்’, ‘வரலாறு’ உட்படப் பல படங்களில் நடித்தார்.

பட்டாம்பூச்சி அடுத்தடுத்த மலர் களின் மீது அமர்ந்த வண்ணம் எழுந்தும், நகர்ந்தும் பறந்து செல்கிறாற் போல், மிக மெல்லிய முகபாவ மாற்றங் களைத் தோற்றுவித்தபடி, தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கான நியாயம் செய்தார் விஜயன்.

தென் நிலங்கள் எங்கும் எளிதில் காணப்படுகிற முகவெட்டு அவருடைய பலம். அத்தனை சீக்கிரத்தில் மறந்துவிடாத சாயல், ஒச்சமற்ற வார்ப்புடன் காண்கிற யாருக்கும் தன்னைப் பிடித்துப் போகச் செய்யும் நம்பிக்கைக்கு உரிய முகம்.

எதிர்பாராத துரோகத்தின் குரூரத்தையும், நம்பமுடியாத பலவீனத்தின் ஆழத்தையும், தனித்துவமான வழிகளில் பிரதிபலித்தார் விஜயன். அவரது உடல்மொழியில் காணப்பட்ட நுட்பமும், முழுமையான இந்தியத் தன்மையும், எந்த மொழியில் எத்தனை சிக்கலான வேட மானாலும் அதை ஏற்பதற்கான உறுதியை அவருக்கு தந்திருந்தது.



‘நாயகன்’ படத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் செல்வாக்கு மிகுந்த மனிதனாக, அவர்களுக்கும் வடக்கத்தி முதலாளிகளுக்கும் இடையே ஊடாடும் ‘துரை’ என்ற கதாபாத்திரத்தில், அதிகம் பேசாத, எல்லோருக்கும் நல்லவர் போல தனக்கு வேண்டியதை நிகழ்த்திக் கொள்ளும் வில்லத்தனத்தில் ஒளிர்ந்தார் விஜயன். ‘தான் இல்லாவிட்டால் அங்கே எதுவுமே ஆகாது’ என்பதை எப்போதும் எல்லோருக்கும் உணரச்செய்த வண்ணம், தன்னலம் ஒன்றையே கருதி வாழ்கிற மனிதனாக, அந்தப் பாத்திரத்தின் கட்டுமானம் அமைந்திருந்தது. அதை உறுத்தாமல் அளவு மீறாமல் தனியே தெரிந்தார் விஜயன்.

புனைவுக்குத் தேவைப்படுகிற உண்மையைத் தோற்றுவிக்க வேண்டிய துல்லியத்தின் பெயர்தான் நடிப்பு. ‘பசி’ திரைப்படத்தில் கானல் நீர் போல, ஒன்றும் அறியாத நாயகியின் கண்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக விஜயன் தோற்றமளிக்கிற காட்சிகளில், காணுகிற நாமும் அவரை நம்புவோம். அது, படத்தின் இறுதியில் விஜயனின் துரோகத்தால் ஷோபா வீழ்ந்து கிடக்கும் காட்சியில், படம் நிறையும்வரை நாமும் படிப்படியாக அந்த வஞ்சகத்தின் வீரியம் தாக்க, மனம் பதைப்போம்.

நீள வசனங்களோ, கூவல்களோ, மருளும் விழிகளோ அதீதமான இசையோ எதுவும் இல்லாமல் சகித்துக்கொள்ள முடியாத பெரும் துரோகத்தை, மிகவும் மென்மையான குரல், உடல்மொழி, முகபாவம் இவற்றின் மூலமாக அபாரமாகச் சாத்தியப்படுத்தினார் விஜயன்.

மகேந்திரனின் இயக்கத்தில் உருவான திரை அற்புதம் ‘உதிரிப்பூக்கள்.’ கதையின் பாத்திரப் பூக்கள் எல்லாவற்றையும் தொடுத்து மாலையாக்க வேண்டிய நாரிழையாக அமைந்தது, விஜயனின் பாத்திரம்தான்.

பெரும் அநியாயங்களுக்கு அப்பால், ‘இதற்கு மேல் பொறுப்பதற்காகாது’ என்று உச்சகட்டப் பொருமலில், ஊரே திரண்டு விஜயனை அழைத்துச் சென்று, நீச்சல் தெரியாத அவரைத் தண்ணீருக்குள் இறங்கி, தானே தன்னை மாய்த்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும்.

அந்தக் காட்சியில் வேறு எப்படி நடித்திருந்தாலும், ஒன்று அளவு மீறிய புனைவாக அந்தக் காட்சி ரசமிழந்திருக்கும். அல்லது மிகை யதார்த்தமாகக் கலைந்திருக்கும்.

நியாயமாக அந்தக் காட்சியைக் காண்பவர்களுக்கு, பரிவை மீறி இறுக்கமாகும் கல் மனதின் கண்கள்தான் அவசியம். அதனை கச்சிதமாக நிகழ்த்தினார் விஜயன்.

ஒன்றும் அறியாத தன் சின்னஞ்சிறு குழந்தைகளை அருகே அழைத்து, தான் உடைந்து நொறுங்கியிருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் பேசிவிட்டு, தான் செய்த அதே தப்பைத்தான் இப்போது ஊர்க்காரர்களும் செய்வதாகப் பேசிவிட்டு, தளர்ந்த உடல்மொழியுடன் ஆற்றில் இறங்கும் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் இறுதிக்காட்சி ஒன்று போதும், விஜயன் எனும் இயல்பான நடிகனின் புகழ்பாடுவதற்கு.

உணவில் அளவு மாறாமல் இடப்படுகிற உப்பைப் போல, நடிகனாகத் தன் பரிமாணத்தை நிகழ்த்திக் காட்டினார் விஜயன். எண்பதுகளில் வேறு எவராலும் பிரதிபலிக்க இயலாமல் போன வாஞ்சையையும், கடுமையையும் அற்புதமாய் திரையில் தோற்றுவித்தவர் விஜயன்.

22.9.2007 அன்று சென்னையில் காலமான விஜயன், எக்காலத்திலும் மறக்க முடியாத நடிகர்.

-குணச்சித்திரங்கள் வருவார்கள்.

Next Story